

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டுமா? எந்த மருந்து, மாத்திரையும் தேவையில்லை, வேலை.. வேலை என்பதிலிருந்து விடுபட்டு இரண்டு வாரங்கள் லீவு எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வாருங்கள். அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்து விடும் என்கிறார்கள் லண்டன் குயின்ஸ் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
இடமாற்றம் உங்களின் உடலிலுள்ள வெள்ளை அணுக்களை நோய்களை எதிர்த்து போராடும் அளவிற்கு தயார் செய்து விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அடிக்கடி சுற்றுப்பயணம் இணைந்து மேற்கொள்ளும் தம்பதிகளின் இல்லற வாழ்க்கை மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் அமெரிக்க டிராவல் அசோசியேஷன் ஆராய்ச்சியாளர்கள்.
அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றவர்களுக்கு இதய நோய்களால் பாதிக்கப்படுகின்ற வாய்ப்பு 32 சதவீதம் குறைகிறது என்பதை அமெரிக்க தேசிய இதய நோய் ஆய்வு கழகம் ஆய்வில் கண்டறிந்துள்ளது.
சுற்றுலா பயணங்கள் வாழ்நாள் முழுவதும் மூளையின் ஆரோக்கியத்தையும், அதன் மீள் தன்மையையும் மேம்படுத்த உதவும் என்பதை இங்கிலாந்தின் பிரெய்ன் ஹெல்த் சென்டர் ஆய்வு கூறுகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு உதவுகிறது.
விடுமுறை எடுத்து சுற்றுலா சென்று வருவது நேர்மறையான உணர்ச்சி நிலைகளை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுகிறது என்கிறார்கள் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வருவது உங்களை மகிழ்ச்சி நிலைக்கு அழைத்து செல்வது உறுதி என்பதை 2004 ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் சுற்றுலாவிற்கு பின் அது குறித்து தொடரும் இனிய நினைவுகள்தான் என்கிறார்கள்.
சுற்றுலாவில் ஒவ்வொரு இடங்களாக பார்க்க பார்க்க மனம் மகிழ்வு பெற்று உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. இதுவே இரவில் ஒரு நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது என்கிறார்கள் நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் ஆய்வாளர்கள்.
சுற்றுலா செல்வதால் உங்கள் மகிழ்ச்சி கூடுவதுடன் உங்களின் ஆரோக்கியமும் நிச்சயம் கூடும்.
-கோ.வீ.ராஜேந்திரன்