அழகிய எகிப்தின் அதிசயங்கள்!

பயண அனுபவம்
அழகிய எகிப்தின் அதிசயங்கள்!

பகுதி -1

தலைநகர் கெய்ரோ

ஆப்பிரிக்க கண்டத்தின் வட கிழக்கில், செழிப்பான நைல் நதிப் பள்ளத்தாக்கில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு புராதன நாகரீகம். எகிப்து என்ற உடனே நம் நினைவுக்கு வருவது அரசர்களின் கல்லறைகளான உலக அதிசயங்களில் ஒன்றான பிரமீடுகள், கற்பனைக்கெட்டாத ரகசியங்களுடனும், உண்மை களுடனும், உலகுக்கே மர்மமாகி இன்று வரை கிடைக்கும் மம்மிகள் என்ற உடல்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை மாறுபாடுகளால் ஒரு பக்கம் செழிப்பான நைல்நதி,   மறுபக்கம் வறண்ட பாலைவனம் என்று விசித்திரம் காட்டும் மண். மாவீரன் அலெக்சாண்டர் ஆண்ட பூமி.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு நம்மை கூட்டிச் செல்லும் டைம் மிஷின்.

எகிப்து என்பது கல்லறை  பூமி மட்டும்தானா?

ஆம் சொல்ல வைப்பது  புராதன எகிப்து. ஆனால், இன்றைய எகிப்து,1952ல் குடியரசு நாடாகி 27 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, நைல் நதிக்கரை மட்டும் அதன் டெல்டாப் பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் நாடு. அரேபிய நாடுகளில் அதிக ஜனத்தொகை கொண்டதாகவும், உலகளவில் 15வது நாடாகவும்  இருப்பது. இங்குள்ள சூயஸ் கால்வாய், மத்தியதரைக் கடலையும், இந்து மகாசமுத்திரத்தையும் செங்கடல் வழியே இணைக்கிறது.

நவீன எகிப்தின் வசதிகளுடன் புராதன காலத்தைக் காணத் துடிக்கும் கலவையான உணர்வுகளுடன் எகிப்தை எதிர்கொள்ளத் தயாரானோம்.

மும்பையிலிருந்து ஈஜிப்ட் ஏர் விமானம் சுமார் ஏழு மணி நேரப் பயணம்.

எகிப்தின் நேரம், இந்தியாவை விட மூன்றரை மணி நேரம் பின்னால் இருப்பதால், ஆரஞ்சு வண்ணத்துக்குள் அமிழ்ந்து ஜொலிக்கும் சூரியனை தொடர்ந்து சேஸ் செய்தபின் ஈஜிப்ட் ஏர்  தலைநகர் கெய்ரோவில் தரையிறங்கிய போது, அங்கே பிற்பகல் இரண்டேகால் மணி.   கெய்ரோ இன்டர் னேஷனல் ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தால்..

இறங்கும் வெயிலில் பாலைவனக் குளிர் காற்று உடலைத் தழுவியது. கெய்ரோ ஷெராடன் ஹோட்டலை அடைந்த  பிறகு ஓய்வெடுக்கக் கூட தோன்றாமல் பிரமீடுகளைப் பார்க்க துடித்தோம். அடுத்த நாள் காலையில்தான் அனுமதி என்றார்கள்.

உலக அதிசயமான கிசா (Giza) பிரமீடுகள்

ஜூன் மாதக் காலையில் இதமான பாலைவனக் குளிர்காற்று.

நதிக் கரையின் ஒரு புறம் இருக்கும் கெய்ரோவிலிருந்து மறுபுறம் 18 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு திசையில், கிசா காம்ப்ளெக்சில் (Giza Complex) இருக்கும் அந்த அற்புதங்கள் தொலைவில் இருந்தே காலை இளம் பனி கவிந்த சித்திரங்களாக நீலப் பின்னணியில் தெரிகின்றன.

பாலைவனத்தில் கட்டப்பட்டிருக்கும், ஐந்து மில்லேனியம் களைக் கடந்த இந்த உலக அதிசயங்களை, கெய்ரோவின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்க்க முடிகிறது.

ஷெராட்டன் வாசலில் கோச் தயாராக இருந்தது.

பிரமீடுகளைப் பார்க்கப் போகிற பரவசம், ‘மம்மி’ வரிசை படங்கள் பார்த்திருந்ததால் ஏற்பட்டிருந்த ஒரு லேசான திகில் கலந்த குறுகுறுப்பு இவற்றோடு கோச்சில் ஏறிக்கொண்டோம்.

கிசா வளாகத்தில், கோச் மெயின் சாலையில் நின்றுகொள்ள, இறங்கி நடந்தோம்.

மேலே நீலம்... கீழே பாலைவன மணல் பரப்பு. இரண்டுக்கும் இடையே வான் தொடும் மூன்று பிரமீடுகள். மூன்றில் முதலாவதும் பெரியதுமான பிரமீட் ஆஃப் சியாப்ஸ் (அல்லது குஃபு) (Pyramid of Cheops or the Pyramid of Khufu)  குஃபு அரசரின் கல்லறை.  இதுதான்  க்ரேட் பிரமீட் (Great Pyramid of Giza).

அடுத்த பெரிய பிரமீட், காஃப்ரே அரசருடையது.(Pyramid of Khafre or Chephren).

மூன்றில் சிறியதாக இருப்பது Pyramid of Menkaure. பாரோக்கள் (Pharoh) என்ற அரசர்களை, தங்களுக்கும் ‘ரா’ என்னும் சூரியக் கடவுளுக்கும் இடைப்பட்ட மற்றோர் கடவுளாகவே வழிபட்டவர்கள்.

எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி அரசர்கள் மரணிப் பதில்லை. அவர்கள் வான் வழியே இன்னொரு உலகத்துக்குச் செல்கிறார்கள். உடல் இறந்த பின்னும் நிலையான வாழ்க்கை இருப்பதாகவும் தங்களின் அதிகாரம் அங்கும் இருக்கும் என்றும் நம்பினார்கள்.

பிரமீட் என்னும் கல்லறைக்குள் அவர்கள் உடலை பதப்படுத்தி வைத்து, அவர்களுக்கு உணவுக்கும் வழிச்செலவுக்கும் பொருட்கள் தேவைப்படுமென்று தங்க ஆபரணங்களையும் வைத்து “அனுப்பியிருக்கிறார்கள்”.

தங்கள் கல்லறைகளை அந்தந்த அரசர்களே கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கிரேட் பிரமீட்

பண்டைய உலகின் அடையாளமாக எஞ்சி நிற்கும் ஒரே சின்னம்.

கிரானைட் கற்களால் ஆன முடிவே இல்லாத ‘இன்ஃபினிட்’ ராட்சஸ படிக்கட்டுக்கள் முன் நிற்கும் போது காலம் தேசம் மறந்த  உணர்வு. இந்த மண்ணில் நடந்த அரசர்கள், அவர் தம் அடிமைகள் என்று நினைவுகள் எங்கோ செல்கின்றன.

கி.மு. 2560 வாக்கில் ஆண்ட எகிப்திய சக்கரவர்த்தி குஃபு பாரோவின் உடலை வைப்பதற்காக 13 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்டம். உச்சி தெரியவில்லை. 481 அடி உயரம். அடிப்புறம் ஒவ்வொரு பக்கமும் 706 அடி நீளம். அதே அளவு அகலம். கட்டி முடிக்க சுமார் 20 வருடங்கள் ஆகியிருக்கலாம்.

நீண்ட சதுர அடித்தளத்திலிருந்து துவங்கி, 51 டிகிரி சாய்மானத்தில் நாற்புறமும் கிளம்பி முக்கோண வடிவில் கோபுரமாக உயர்ந்து ஒரு சிகரத்தில் முடியும் 2.5 மில்லியன் (25 லட்சம்) கல்பாறைகள் கொண்ட அடுக்குகளின் அற்புதம். ஒவ்வொரு கல்லும் இரண்டு டன்னுக்கு மேல் எடை கொண்டது. இடைவெளியே சிறிதும்  இல்லாத கல் அடுக்குகள். இவற்றின் இடையே சிமெண்ட் போல் எந்த பூச்சும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், எகிப்தை ஆண்ட தாலமி அரசர்கள், ஆயிரக் கணக்கான அடிமைகளை வைத்து  இவற்றைக் கட்டியிருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

மலைகள் எதுவும் அருகில் இல்லாத இந்த பாலை வனத்தில் இவ்வளவு கற்களை எப்படி கொண்டு வந்தார்கள்?

அஸ்வான் மலைப் பகுதியில் வெட்டப்பட்டு, நைல் நதி மற்றும் அதன் கால்வாய்கள் மூலம் கற்கள், இந்த பாலைவனப் பகுதிக்கு கொண்டுவரப் பட்டிருக்கலாம் என்பது ஆரய்ச்சியாளர்களின் கருத்து.

பூமியின் வட தென் துருவம் இரண்டின் புள்ளிகளுக்கு நேராக வடக்கு தெற்குக் கோடுகளை இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பூமியின் சுற்றளவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் இவற்றையும் கணக்கில் கொண்டு கட்டப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இன்று வரை கண்டுபிடிக்க  முடியாத எத்தனையோ ரகசியங்களை உள்ளடக்கிய அந்த அசுர அடுக்குகளின் முன் நாம் சிறிதாகிப் போன உணர்வு.

இதன் வெளிப்புறம் முழுவதும்  கேசிங் ஸ்டோன் எனப்படும் வழுவழுப்பான கற்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்த வழவழப்புக் கற்களை இப்போது பிரமீட் உச்சியிலும், அடிப்புறம் சில இடங்களிலும் மட்டுமே காண முடிகிறது.

இதனால் அந்தக் காலத்தில் சூரிய ஒளியில் ஆபரணம் போல் பிரமீட்கள் ஜொலிக்குமாம்.

எகிப்தியரான எங்கள் கைட், ‘எரிக்’ (Eric)  எங்களை அவரசப்படுத்தினார். “வெளியே நின்று பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி?  வாருங்கள், பிரமீடுக்குள் செல்வோம். ஒரு வேளைக்கு நூறு பேருக்கு மட்டும்தான் டிக்கட்” என்று அவசரப்படுத்தினார்.

பிரமீடு உள்ளே கண்ட விசித்திரங்கள்

கிரேட் பிரமீட் என்றழைக்கப்படும் சியாப்ஸின் பிரமீடுக்குள் மட்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். வெளியே டிக்கெட் கவுன்டர்கள் இருக்கின்றன.

காலையிலும் மதியத்திலுமாக இரு வேளைகள் மட்டுமே 100 பயணிகளுக்கு உள்ளே அனுமதி. டிக்கட் ஒருவருக்கு 20 அமெரிக்க டாலர் என்று நினைவு. “உள்ளே நிறைய இடங்களில் ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டி யிருக்கும். இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், மூட்டுப் பிரச்னை உள்ளவர்கள் உள்ளே வருவதைத் தவிர்த்து விடுங்கள்” கைடு எச்சரித்தார்.

இப்போது பிரமீடுக்குள் செல்ல ஆர்வம் உச்சத்துக்குப் போயிற்று.

ஃப்ளாஷ் கூடாது என்பதற்காக டூரிஸ்ட்டுகளுக்கு பிரமீட் உள்ளே கேமரா எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அரசாங்கம் எடுத்த புகைப்படங்கள்தான் கிடைக்கின்றன.

நுழைவாயில், வடக்குப்புறத்தில், தரையிலிருந்து 56 அடி உயரத்தில் இருக்கிறது. கற்களில் கால் வைத்து ஏறி அதை அடைகிறோம். இனி உள்ளே இறங்க வேண்டும்.

செல்வோம்...

(அதிசயங்கள் விரியும்...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com