பகுதி- 2
குஃபு அரசரின் பெரிய பிரமீடின் நுழைவாயில்
சுற்றிலும் கற்களால் சுவரெழுப்பிய ஒரு டனல் போல் இருக்கும். அதில் நுழைந்து சில அடிகள் இறங்க ஆரம்பிக்கும்போது உடலில் ஒரு சிலிர்ப்பு.
“ஆகா.. பிரமீடுக்குள் இருக்கிறோமா?”
சிறிது தூரம் இறங்கிச் சென்றதும், “இங்கே முக்கியமாக மூன்று சேம்பர்கள் இருக்கின்றன. அரசர், அரசி சேம்பர்களைத் தவிர “சப்டெரேனியன் சேம்பர்” (subterranean chamber) ஒன்றும் உண்டு” என்கிறார் கைடு.
இடது புறமாக ஒரு பூட்டிய இரும்புக் கிராதிக்குள் ஆழத்தில் ஒரு சுரங்கப்பாதை தென்படுகிறது.
அது 90 அடி ஆழத்தில் இருக்கும் “சப்டெரேனின் சேம்பர்” (subterranean chamber) என்றார் எரிக். அங்கேதான் குஃபு அரசர் தன் உடலை அடக்கம் செய்யச் சொல்லி முதலில் கட்டினார் என்றும் பின்னர் மனம் மாறி, பிரமிடின் மேற்பகுதியில் வைக்கச் சொன்னதாகவும் ஒரு கருத்து இருப்பதாகத் தெரிவித்தார்.
இப்போது மற்றொரு சுரங்கப் பாதையில் மேலே ஏறிச் செல்கிறோம்.
கிராண்ட் கேலரி
மேலே ஏறிசெல்லும் படிகள், க்ராண்ட் கேலரி என்னும் குறுகலான பாதை. அரசரின் சேம்பருக்கு இட்டுச் செல்லும் பாதை. அந்தப் பாதை ஏழு அடி ஆழத்தில் 29 அடி உயரத்தில் வெறும் பாறை அடுக்குகளால் அமைந்திருக் கிறது. எல்லாச் சுவர்களிலும் காணப்படும் ஓவியம், எகிப்திய எழுத்துக்கள் எதுவுமே இல்லாமல் ஆச்சரியம் தருகிறது.
அதன் பக்கவாட்டு கிரானைட் சுவர்கள் 30 அடி உயரத்தில் இரு புறமும் மலைக்க வைக்கின்றன. அங்கே ரெசொனன்ஸ் மற்றும் வைப்ரேஷன் அதாவது அதிர்வு அலைகள் இருப்பதால், நாம் மூச்சு விடுவதுகூட ஹூங்காரமாய் எதிரொலிக்கிறது.
மெல்லப் பேசினாலே நாலாபுறமும் எதிரொலி. நடக்கையில் பிடித்துக்கொள்ள இரு புறமும் உலோகத்தால் ஆன குழல் அமைப்பு வைத்திருக் கிறார்கள். குனிந்து உடல் மடக்கி, நடந்து ‘கிங் சேம்பருள்’ நுழைகிறோம்...
அரசரின் கல்லறை
34 அடி நீளம், சுமார் 20 அடி அகலம், 20 அடி உயரம் என்ற அளவுகளோடு, பிங்க் வண்ண கிரானைட் கற்களால் எழுப்பப்பட்ட அறை. நடுவே அதே வண்ண கிரானைட். ‘சார்கோஃபாகஸ்’ (Sarcophagus) எனப்படும் கல் சவப்பெட்டியைப் பார்க்கிறோம். பாரோவின் கல்லறைக்குள் ஒரு கனத்த மௌனம் சூழ்கிறது. எங்கிருந்தோ இயற்கையின் மெல்லிய வெளிச்சம் கசிகிறது. காற்றும்கூட அமைதி காக்கும் அளவுக்கு ஒரு புழுக்கம், இறுக்கம்.
5000 வருடங்களுக்கு முந்தைய அந்த அரசரின் உடலை, மம்மிஃபிகேஷன் முறையில் பாடம் செய்து, நைல் நதி வழியே பிரமீடு வரை எடுத்து வந்திருக்கிறார்கள். அங்கே அவர்களது “கோயிலில்” வைத்து சூரியன், காற்று, நெருப்பு, பூமி (நம் பஞ்ச பூதங்கள்) உட்பட ஏழு எகிப்திய கடவுள் களின் முன்னிலையில் குருமார்கள் வழிபாடுகள் செய்து முடித்தபின், மம்மிஃபிகேஷன் செய்யப்பட்ட அந்த உடல் தங்க நகைகள் அலங்காரங்களுடன் தங்கம் பூசிய பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அப்பெட்டி ஒரு கல் சவப்பெட்டிக்குள் இறக்கப்பட்டது.
‘அதுதான் நாம் பார்க்கிற இந்த கல் சவப்பெட்டியா? அதற்குள்தான் அந்த பேரரசர் (Pharaoh) உடல் மம்மி—வைக்கப்பட்டிருந்ததா?’
ஆம் என்கிறார் கைடு… அவரது உடலும் ஆபரணங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கொள்ளை அடிக்கப்பட்டு விட்டன.
இன்று கல்லறையின் மூடியும் இல்லை. உள்ளே அவரது உடலை வைத்திருந்தப் பெட்டியும் இல்லை. வெறும் சார்கோஃபாகஸ் மட்டுமே இருக்கிறது. அருகே இன்னோர் அறையில் அவர்கள் உபயோகித்தப் பொருட்கள், ஆபரணங்கள், போன்றவையும் புதைக்கப்பட்டிருந்த புதையல் அறை. (Treasure Chamber) உள்ளது. ஆனால், அவை யாவும்கூட கொள்ளையடிக்கப்பட்டு விட்டன.
கிங் சேம்பரைச் சுற்றியும் குகை பாதைகளும், டனல்களும், கல் சுவர் எழுப்பிய சேம்பர்களும் புதிராக இருக்கின்றன. வெளிச்சம் கசியும்விதமாக மின் விளக்குகள் எங்கோ வைக்கப்பட்டுள்ளன. பிரமீடுக்குள் எப்பொழுதுமே 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்தான்.
ராணியின் கல்லறை
க்ராண்ட் கேலரி அடியில் கிளைகளாகப் பிரியும் இரு சுரங்கப் பாதைகள் சரிவாய் மேலே ஏறுகின்றன. அவற்றின் மையப்பகுதியில் மற்றோர் குறுகலான வழி, ராணியின் கல்லறையான ‘க்வீன்ஸ் சேம்பர்’க்குச் செல்லும் இப்பாதை. மிக மிகக் குறுகல். தவழ்ந்து, ஊர்ந்து, கைகளை ஊன்றித்தான் செல்ல வேண்டும். நிமிர்ந்தால் தலை இடிக்கும். மூச்சுத்திணற வைக்கும் த்ரில்லான அனுபவம்.
சுரங்கப் பாதையைக் கடந்து, ராணியின் கல்லறைக்குள் நுழைகிறோம். எங்கோ கசியும் மெல்லிய வெளிச்சம். 18 அடி உயரம் கொண்ட அந்தக் கல்லறைக்குள்ளும் ராணியின் மம்மியை பாடம் செய்து வைத்த ஒரு ‘சார்கோஃபோகஸ்’ (sarcophagus) சவப்பெட்டி காலியாக இருக்கிறது.
புதையல் சேம்பர் வெறும் அறைதான். இங்கும் ஒரு இறுக்கம், புழுக்கம், வெப்பம் உணர முடிகிறது.
1872 ம் ஆண்டு டிக்ஸன் என்னும் ஆராய்ச்சியாளர், ராணியின் கல்லறையிலிருந்து மூன்று பொருட்களைக் கண்டெடுத்தார். கிரானைட் உருண்டை, செப்பு உலோகத்தாலான கொக்கி போன்ற கருவி, ஒரு மரப் பலகை. இவை பின்னர் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்டன.
காற்றுப் பாதைகள்
இந்த இரண்டு கல்லறைகளிலுமே இரண்டு மர்மமான ஏர் ஷாஃப்ட்கள் (air shafts ) எனப்படும் காற்று வழித்தடங்கள் கற்களின் இடையே இருப்பதைப் பார்த்தோம். வேறெந்த பிரமீடுகளிலும் இந்த அமைப்பு இல்லை. இவை பிரமீட் உள்ளே காற்று, வெளிச்சம் வசதிக்காக என்று கருதப் பட்டாலும், எகிப்தியரின் நம்பிக்கைப்படி அரசர் சாகவில்லை. இவற்றின் வழியாக பிரமீடின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து அவர் வான் உலகம் சென்றுள்ளார். அவர் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கைகளும் உண்டு.
பெரும் வியப்பு என்னவென்றால் இவை வானில் உள்ள உர்சா மைனர் (Ursa Minor) நட்சத்திரக் கூட்டத்தோடும் சிரியஸ் நட்சத்திரத்தோடும் ஒருவிதமாக அலைன் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இறந்தவர்கள் நட்சத்திரங்களைத் தொடர்பு கொள்வதாக எகிப்தியர்கள் நம்பினார்களாம். பிரமீட் காம்ப்ளெக்ஸில் காணப்படும், ஐந்து படகு நிறுத்தும் பள்ளங்கள், போட் பிட்கள், (boat pits) ஐந்து மைல் தொலைவில் இருக்கும் நைல் நதியிலிருந்து கால்வாய் அமைத்து பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று யூகிக்க வைக்கிறது.
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன
சமீப வருடங்களில் காமிரா பொருத்தப்பட்ட சிறிய ரோபோக்களை கற்கள் நடுவே செலுத்தி ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளைந்து படமெடுக்கும் மிகச் சிறிய மைக்ரோ ஸ்னேக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராணி சேம்பரின் அடிப்புறம் சில குறியீடுகள் காணப்படுவதாக சொல்கிறார்கள்.
ஃபிசிகல் பார்டிக்கிள்ஸ் (Physical particles) எனப்படும் சில நுண்துகள்கள் மூலம் ஆராய்ந்த பின், பிரமீட்களின் அறைகளுக்குள்ளும் அடிப்பாகத்திலும் மின்காந்த சக்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
‘ஹைரோக்ளிஃபிக்ஸ்’ (hieroglyphics) எனப்படும் எகிப்திய சிற்ப குறியீடு (hieroglyphics) எழுத்துக்கள், மற்ற ‘கோயில்’களில் காணப்படுவதுபோல இங்கு கண்ணில் படவில்லை.
பல மணி நேரம் பிரமீடுக்குள், வேறு உலகத்தில் புராதன அரசர், அரசிகளுடன் இருந்த உணர்வுடன் வெளியே வந்தோம். வரும் போது மேலே இருந்த நிலைப்
படிகல்லில் சில எழுத்துக்கள் இருப்பதைக் கைடு காட்டினார்.
கிரேட் பிரமீடின் ஆழத்திலும் உச்சியிலும் இருக்கும் ரகசியங்களை அறிய எத்தனைக் காலம் ஆகுமோ? வியந்தோம்!
காஃப்ரே அல்லது செஃப்ரென் பாரோவின் பிரமீட் (Khafre or Chephren) மூன்று பிரமீடுகளுக்கு நடுவில் இருக்கும் இந்த பிரமீடு அவரது மகன் காஃப்ரே பாரோ, தானே கட்டிக் கொண்டது. பெரிய பிரமீடைவிட இது சிறியதுதான்.
440 அடி உயரம் அடிப்பாகத்தில் ஒவ்வொரு பக்கமும் 706 அடி கொண்டது. இதற்குள்ளும் அரசரின் சேம்பர், சப்டெரேனியன் சேம்பர் (subterranean) மற்றும் பரியல் சேம்பர். என்று இரண்டு முக்கியமான அறைகள் உள்ளன.
1818ல் ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரமீடுக்குள் நுழைந்தபோதே அங்கிருந்த அரசரின் உடலும் ஆபரணங்களும் ஏற்கனவே கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.
மென்குரே (Pyramid of Menkaure).
அருகிலேயே சற்று தூரத்தில் காஃப்ரே அரசரின் மகன் மென்குரே, தனக்காக கட்டிக்கொண்ட 204 அடி உயரம் கொண்ட மென்கவ்ரே பிரமீட்.
காலம் தேய்த்தது போக எஞ்சியிருக்கும் பிங்க் வண்ண கிரானைட் ஆங்காங்கே கண்ணில் படுகிறது. இதன் காலம் கிறிஸ்து பிறப்புக்கு 2600 ஆண்டுகளுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுக்குள்ளும் செல்ல டிக்கட் உண்டு.
மிகக் குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி. நேரம் கடந்து விட்டதால் செல்லவில்லை. சுற்றிலும் முன்பு சுமார் 90 சிறிய பிரமீடுகள் இருந்ததாக சொல்கிறார்கள்.
அடுத்து, இரண்டாவது பெரிய பிரமீடான காஃப்ரே முன் நிற்கும் பிரம்மாண்ட ஸ்பிங்க்ஸ் அருகே சென்று பார்க்கலாமா?
(அதிசயங்கள் விரியும்...)
குறிப்பு:
பிரமீட் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. எனவே, இணையதளத்தில் கிடைத்த போட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி :Encyclopedia Britannica