அழகிய எகிப்தின் அதிசயங்கள்!

பயண அனுபவம்
அழகிய எகிப்தின் அதிசயங்கள்!
Published on

பகுதி - 3

ஸ்பிங்க்ஸ்:

ண்டைய எகிப்தியர்கள் சிறந்த கணிதவியலாளர்கள், வானியல் வல்லுனர்கள், மருத்துவத்திலும், உடற்கூறு விஞ்ஞானத்திலும் திறன் மிக்கவர்கள். அதை நிரூபிப்பவை பிரமீடுகள் மட்டுமல்ல, ஸ்பிங்க்ஸ் என்னும் சிங்க உடல். மனிதத் தலை கொண்ட சிற்பமும்தான்.

இது, உலகின் மிகப் புகழ் பெற்ற சிற்பம். சூரியக் கடவுளின் ஒரு அம்சமாகவே கருதப்படும் ஒரு எகிப்திய புராணக் கதாபாத்திரம். (mythological) அரசர்களான பாரோக்களுக்கே உரிய தலை அலங்காரங்களுடன் கிசா பிரமீட்களைக் காக்கும் பாதுகாவலன்.

240 அடி நீளமும், 66 அடி உயரமும் கொண்ட லைம்ஸ்டோன் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்தபோது மூச்சடைத்துப் போயிற்று. 4700 ஆண்டுகளாக பாலைவன வெயிலிலும் குளிரிலும் படுத்திருக்கும் சிங்கம் அல்லவா?

புராண காலத்தில் ‘Horus of the Horizon’ தொடுவானத்துக்கு அப்பால் இருக்கும் கடவுள் என்று அழைக்கப்பட்டது.

எகிப்து மன்னர்கள், பூனையைக் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஒரு பாலமாக நம்பியவர்கள். தனது பெருமையையும் தெய்வத்தன்மையையும் உயர்த்திக் காட்டுவதற்காக பலம் பொருந்திய சிங்கத்தின் உடலில் தன் முகத்தைப்போல தலையை செதுக்க வைத்தார் காஃப்ரே அரசர் என்பது ஒரு கருத்து.

சுண்ணாம்புக்கல் பாறையில் (Limestone rocks) அதுவும் ஒரே கல்லில் (Monolith) செதுக்கப்பட்டது இந்த ஸ்பிங்க்ஸ்.

பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் தன் வீரர்களை ஸ்பிங்க்ஸ் மூக்கைக் குறி வைத்து பீரங்கிகள் மூலம் சுடச் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள்.

ஆனால், அது உண்மையல்ல, நெப்போலியன் இங்கே வருவதற்கு முன்பே அதன் முகம் சில சதிகாரர்களால் சிதைக்கப்பட்டிருந்தது என்று வரலாற்றுச் சான்றுகளோடு வாதிடுவோரும் உண்டு

தவிர, பலமுறை பாலைவனத்தின் மணல் புயலில் புதைந்து போய் மீட்கப்பட்டிருக்கும் பேரதிசயம் இது!

இதில் பல வண்ணங்களும் தீட்டப்பட்டிருந்தது என்றும் காலப்போக்கில் அவை அழிந்து போய்விட்டன என்றும் சொல்கிறார்கள்.

ஸ்பிங்க்ஸ் அடியில் அறைகள் இருக்கின்றனவா என்று நில அதிர்வை அளக்கும் கருவிகள் மூலம் சோதனை செய்தபோது, வெற்றிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிய முடிந்தது. தவிர shaft எனப்படும் முட்டுச்சந்து சுரங்க வழித்தடங்கள் பல ஸ்பிங்க்ஸ் அடியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரம்மாண்ட பாதங்களுக்கிடையே வட்ட உச்சி கொண்ட 12 அடி உயர கிரானைட் பாறைகளில் எகிப்திய Hieroglyphics முறை சித்திர எழுத்துக்களில் இறந்த அரசரின் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

ருகேயே அவர்கள் வழிபட்ட சூரியக்கடவுள்  ‘ரா’ கோயில். சூரியக் கடவுளான ராவின் மகன் ஒஸிரிஸ் (Osiris) இவர் பாதாள லோகத்தின் (அதாவது இறந்தவர் களுக்கான) கடவுள். மற்றும் பூமியின் மகள் ஐஸிஸ் (Isis). இவர், அறிவுக்கும், உடல் நலத்துக்கும், அதிர்ஷ்டத்துக்குமான கடவுள்.

ரா கோயிலில் நான்கு திசைகளிலுமாக 14 வழிநடைகள் (passages), சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் காணும் வண்ணம் கட்டப்பட்ட தாழ்வாரங்கள்  (corridor) மற்றும் நடுவில் ஒரு பலிபீடம் கொண்ட பெரிய முற்றம் ஆகியவற்றைக் காணலாம்.

காரிடார்களில் நடந்தபோது, ஒரு தாழ்வான பெரிய பள்ளம் ஒன்றைக் காட்டினார் கைடு. அந்த இடத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன் பல உடல்கள் மம்மி ஃபை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மம்மிஃபிகேஷன்

ண்டைய எகிப்தியர்கள், இறப்புக்குப் பின் வாழ்க்கை இருப்பதாக உறுதியாக நம்பினார்கள்.  அதனால் அவர்களது உடலை ‘பாடம் செய்து’ (Mummification), பாதுகாப்பாக வைத்தார்கள். மேலும் பல விசித்திரமான நம்பிக்கைகளும் உண்டு!

பாரோக்கள் இறந்த பின் பாதாள லோகம் சென்று அங்கிருந்து மறுவாழ்வு அடைகிறார்கள். பாதாள லோகக் கடவுள்  ஒசிரிஸ், வானத்தின் கடவுள், பருந்து முகம் கொண்ட ஹோரஸ். ஆட்டுக் கடா முகம் கொண்ட கடவுள் வீரத்துக்கானவர் என்று இக்கடவுளர்கள் இறப்புக்குப் பின்னும் முன்னும் வழி நடத்துகிறார்கள்.

அரசர் இறந்த உடன் அவரது ஆன்மா இரண்டு பாகங்களாகப் பிரிகிறது. ஒன்று ‘கா’ மற்றது ‘பா’  இதில் கா அந்த கல்லறையிலேயே தங்கி கொள்ள, பா மட்டும் ஒரு பறவையின் தலையுடன் வெளியே சென்று (சூரியக் கடவுளுடன் உலா) விட்டு மீண்டும் இரவு கல்லறைக்குத் திரும்பிவிடும்! 

ஆனால், இந்த மம்மிஃபிகேஷன் என்பது மிகவும் நீண்ட, கடினமான முறை.

இறந்த உடலின் மூக்கின் வழியே ஒரு ஹூக்போல விட்டு, மூளை முழுவதும் வெளியே எடுக்கப்படும். குடல், நுரையீரல், கல்லீரல், வயிறு என ஒவ்வொரு உறுப்பாக உடலினுள்ளிருந்து கவனத்துடன் எடுக்கப்பட்டு தனித்தனி ஜாடிகளில் வைக்கப்படும். (Canopic Jars). இந்த ஜாடிகள் ஒவ்வொன்றின் மேல்பாகத்திலும், பருந்து, நாய், குரங்கு என்று தனித்தனித் தலை.

உறுப்புக்கள் எடுத்த உடலுக்குள் ஈரப்பசை இல்லாமல், நாற்றம் வராமல் இருக்க, நிறைய உப்பு தூவப்படுகிறது. இந்த உடல் 70 நாட்கள் உப்பால் மூடப்பட்டு இருக்குமாம்.

பின்னர் மிர் எனப்படும் ஒரு வகை பிசின், வாசனைப் பொருட்கள் இவற்றை லினன் துணியில் அடைத்து அதற்கு மேல் அடுக்கடுக்காக உடலைச் சுற்றி லினன் துணி வைத்து பாடம் செய்யப்படுகிறது. இதயம் மட்டும் விட்டு வைக்கப்படுமாம். ஏனென்றால் அதுதான் மனம் என்று அவர்கள் நம்பினார்களாம்.

ஆபரணங்கள் போட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. முற்றிலும் ஈரப்பசை போனபிறகு, உடல் வடிவத்திலேயே, மரத்தால் ஆன ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து கல்லறைக்குள் வைக்கப்படும். அந்தப் பெட்டியில் எகிப்திய எழுத்துக்களான Hieroglyphicsல் பெயர் முதலியவை பொறிக்கப்பட்டு, வண்ணமயமாக பெயின்ட் அடிக்கப்படும்.

இறப்புக்குப் பின் உள்ள ‘வாழ்வுக்கு’ தேவையான உணவு, செல்வம், கருவிகள் இவற்றோடு புதைக்கப்பட்டார்கள்.

பாரோக்களின் ஆரம்ப காலத்தில் மறு உலகத்தில் அவர்களுக்குப் பணிவிடை செய்ய, உயிரோடு அடிமைகளும் கல்லறைகளில் புதைக்கப்பட்டதாகவும், கொஞ்ச காலத்திலேயே  அந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாகவும்.

அதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான ‘வேலைக்கார பொம்மைகள்’ வைக்கப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. அனேக கல்லறைகளில் மம்மி செய்யப்பட்ட பூனைகளும் இருந்தனவாம்!

சுற்றுலாவாசிகளுக்கு

பிரமீட்கள் இருக்கும் கிசா காம்ப்ளெக்ஸில் சுற்றி வர, ஆடி ஆடி ஒட்டக சவாரி செய்யலாம். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்ல ஆரோக்கியமான ஒட்டகம் மற்றும் அதன் ஓட்டுனரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். குதிரை சவாரியும் செய்யலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தின் போது குதிரைகளில் சுற்றி வந்தால், ஸ்பிங்க்ஸும் பிரமீடுகளுக்கும் பின்னால் மறையும் சூரியன் அத்தனை அழகாக இருக்கும் என்றும் கூறினார்கள்.

அதோ அங்கே என்ன கூட்டம்... ஓ... கலைபொருட்களான சாவனீர்கள் விற்கும் ‘நடைபாலைவனக்’ கடைகளா...  சுற்றுலா வந்தவர்கள் மொய்க்கும் இந்தக் கடைகளை நோக்கி விரைந்தோம்.

மினியேச்சரில் பிரமீட்கள், பாரோக்கள், ராணிகள், ஸ்ஃபிங்க்ஸ், நரி பூனை முக கடவுள்கள்,  ஒட்டகங்கள், நெஃப்ரிடி, டுடான்கமன் (இவர்களைப் பற்றி அப்புறம் பேசுவோம்) சிலைகள் கொட்டிக் கிடக்க, முடிந்தவற்றை வாங்கினோம்.

ஈஜிப்ஷியன் பவுண்ட் (Egyptian Pound- இன்றைய மதிப்பில் ஒரு ப்வுண்ட் சுமார் இரண்டே முக்கால் ரூபாய்) அமெரிக்கன்  டாலர், அல்லது யூரோ பணம் செல்லுபடியாகிறது.

ஒலி ஒளிக் காட்சிகள்

தினமும் இரவில் பிரமீடுகள் மற்றும் ஸ்பிங்க்ஸ் குறித்து  நடத்தப்படும் ஒரு மணி நேர ஒலி ஒளிக்காட்சி தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்று. லேசர் ஒளிக் கற்றையில் பெரிய சைஸ் சித்திரங்கள் மற்றும் பின்னணிக் குரல் மூலம், 5000 வருட எகிப்திய புராதனத்தைக் காட்சிகளாக்கி யிருக்கிறார்கள்.

பாரோக்கள் எழுந்து தங்கள் சாம்ராஜ்யம் மற்றும் சாதனைகளைப் பேசுகிறார்கள்.

இறந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை, அவர்களை வழி நடத்திச் செல்லும் கடவுளரைப் பற்றிய செய்திகளை, வண்ண லேசர்கள் சொல்கின்றன. 

குளிர் நடுக்கும் பாலைவன இரவில், மணலில் போட்டிருக்கும் சேர்களில் அமர்ந்து விஸ்ஸென்று அடிக்கும் காற்று சூழ்ந்திருக்கும் அமைதியில் அவற்றைப் பார்ப்பதும், கேட்பதும் ஒரு வினோத அனுபவம்தான்.

இனி நாம் 4000 ஆண்டுகள் பழைமையான மம்மியைப் பார்க்கப் போகிறோம்.

(அதிசயங்கள் விரியும்...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com