அழகிய எகிப்தின் அதிசயங்கள்!

பயண அனுபவம்
அழகிய எகிப்தின் அதிசயங்கள்!

பகுதி- 5

அமிதாப்பச்சன் நலமா?                    

மலான் நோன்பு நாட்கள் என்பதால் உணவு விடுதிகள் மூடப்பட்டிருந்தன.

சுற்றுலா வாசியாக  வந்திருந்த நாங்கள், கையில் இருந்த பிஸ்கட், பழங்கள் என்று சமாளித்தோம். மாலை வரை கடைவீதிகளில் சுற்றி வந்தோம்.

அங்கிருந்த கடைக்காரர்கள் அனேகம் பேர், அன்புடன் வரவேற்பார்கள். ஃப்ரம் இந்தியா? என்று கேட்பார்கள். ஆமாம் என்றதும் அமிதாப்பச்சனைப் பற்றி விசாரிப்பார்கள். நமக்கென்ன அமிதாப்  அடுத்த வீட்டுக்காரரா என்று நினைத்தாலும், ஒரு புன்னகையோடு நகர வேண்டியதுதான்.

அன்று மாலை இருட்டியவுடன் ஒரு பெரிய சதுக்கத்தில் நிறைய கூட்டம், ஆரவாரம். விளக்குகள் அலங்காரம். உற்சாக கோலாகலம் அருகருகே இருந்த அடுப்புக்களில் கீர் வகை பாயாசங்கள், தேனீர், இறைச்சி, சாதம்,  கபாப் என்று அமர்க்களமாக ரமலான் விருந்து தயாராகிக் கொண்டிருக்க, அனைவரும் கலகலப்பாக  உண்டு கொண்டிருந்தார்கள்.  நம்மையும் அந்த விருந்தில் கலந்து கொள்ள அன்போடு அழைத்தார்கள்.

அன்று இரவு கெய்ரோவின் புகழ் பெற்ற டின்னர் க்ரூயிஸ் (Dinner Cruise) செல்லும் திட்டம் இருந்ததால், கீர்,  டீ அருந்தி, அவர்களின் அன்புக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.

கெய்ரோவின் டின்னர் க்ரூயிஸ்

கெய்ரோவுக்குள் ஒடும் நைல் நதியில் சுமார் இரண்டு மணி நேரம் படகு சவாரி. இரவு விருந்துடன். சுற்றுலா வாசிகளுக்காக அங்கும் இங்கும் இப்படி நகரும் க்ரூயிஸ்கள் நதியை மாசு படுத்தியிருக்குமோ என்று தோன்றுகிறது.

சுற்றிலும் விளக்குகள் ஒளியில் ஜொலிக்கும் நகரைப் பார்த்தபடியே டின்னர்.

அராபிய காஃபி, எகிப்திய ரொட்டி, ரைஸ், லென்டில் பேஸ்ட் என்னும் பருப்பு துவையல், சாலட்கள்,பழங்கள், பாரம்பரிய இனிப்பு மற்றும் கேக் வகைகள், இறுதியில் சிறு கப்பில் சுலைமானி டீ  என்று அவர்களது பாரம்பரிய நடனம், இசைப் பின்னணியோடு, முழுமையான எகிப்திய உணவு.

அராபிய இசை ஒலிக்க,கழுத்திலிருந்து கால் வரை பெரிய வண்ணக் குடைபோன்ற பாவாடை அணிந்து, சுழன்று சுழன்று நடனம் ஆடும் ஆண்கள், வயிற்றுப்பகுதியை மட்டும் அசைத்து பெல்லி டான்ஸ் ஆடும் பெண்கள் பிரமிப்பைத் தந்தாலும் மனதில் நெருடல்…

சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்த பணத்துக்காக ஆடும் நடனம் என்றாலும், விடாமல் ஒரு மணி நேரம் தட்டாமாலை சுற்றி ஆடும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது. அது உடலா...இயந்திரப் பம்பரமா..?

“கான் எல் கலிலி பஸார்” (Khan El-Khalili Bazaar) என்பது  கெய்ரோவின் மிகப் பெரிய ஷாப்பிங் ஏரியா.

அங்கெல்லாம் வெறும் அவுட்லுக்தான். ஆங்காங்கே நிறைய மசூதிகளைப் பார்க்க முடிந்தது.

சுமார் 614 அடி உயரத்தில் உறுதியான கான்க்ரீட்  தூணாக கெய்ரோ டவர் காட்சியளிக்கிறது. அதன் உச்சியில் இருந்து பார்த்தால் நகரம் முழுவதும் அதன் அழகிய நினைவுக் சின்னங்களுடன் பார்க்கலாம் என்றார்கள்.

நாங்கள் தங்கியிருந்த  ஷெராட்டன் ஹோட்டலை அடைந்த உடன்  எங்கள் கைட், “நாளை லக்ஸ்ர் என்ற நகருக்குச் சென்று, அரசர்கள் மற்றும் அரசியர் பள்ளத்தாக்குகளைப் பார்க்கப் போகிறோம்.”என்றார்.

“அங்கே என்ன?”

பிரமீட் கட்டிய பாரோக்களுக்கு அப்புறம் அரசாண்ட மன்னர்கள், ராணிகளின் கல்லறைகள் என்றார்.

“அய்யோ…மறுபடியும் மம்மிகளா?”

லக்ஸர் (Luxor) பண்டைய தலைநகரம்

கிப்து நாட்டின் தெற்குப் பகுதியில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்ஸர்.பண்டைய காலத்தில் தெப்ஸ் (Thebes) என்ற பெயரில் அழைக்கப் பட்டு, 5000 ஆண்டுகளுக்கு முந்தைய  பாரோ அரசர்களின் தலை நகரமாக இருந்த, நைல் நதிக்கரையில் வளர்ந்த நாகரீக நகரம்.

அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings)

ரசர்களின் சமவெளி என்றும் சொல்கிறார்கள். லக்ஸர் அருகே, இயற்கையாக அமைந்த சுண்ணாம்புக்கல் பாறைப் பள்ளத்தாக்கில்  பிரமீட் மன்னர்கள் காலத்துக்குப் பின் வந்த  அரசர்களை (மம்மிஃபை செய்துதான்)  மற்றும் அரச குடும்பத்தினரைப்  புதைத்த கல்லறைகள்.  நூற்றுக் கணக்கானவைகளில் சில இன்னும் சரியாக திறக்கப் படவில்லை என்றும் பல கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இவை கல்லறைகள் மட்டுமல்ல. உள்ளே பல அறைகளும் (Chamber)  முடிவில்லாத சுரங்கப்பாதை களுமாக இன்று வரை ஆராய்ச்சியாளர் களுக்கு புதிராக இருப்பவை.

இவற்றின் சுவர்களில், கண் கவரும் வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. Murals  எனப்படும்  சுவர்ச் சித்திரங்கள் வண்ணங்களில் வரைய்ப்பட்டுள்ளன.

சூரியக் கடவுளின் 12 வாசல்களை கடக்கும் இரவுப் பயணம், அதன் மூலம் இறந்த அரசர்களின் “இரவுப் பாதுகாப்பு” இவையெல்லாம் விளக்கப்பட்டுள்ளன,

ஈமச் சடங்குகள் பற்றிய சித்திரங்களும் உள்ளன.

இவை 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் தினசரி வாழ்க்கை முறை, வழிபட்ட கடவுள்கள், மருத்துவ முறைகள், வேளாண்மை  உட்பட்ட பலதரத் தொழில்கள், வீடுகள், நீர் மேலாண்மை, மருத்துவ முறைகள் இப்படி நூற்றுக் கணக்கான சேதிகளைச் சொல்லும்  வரலாற்று ஆவணங்கள் அல்லவா? அதனால் தான் யுனெஸ்கோ, உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. (World Heritage Site) இந்த மம்மிகளுடனும், “அடுத்த வாழ்க்கைக்குத்” தேவையானஆபரணங்கள், நாற்காலி, கட்டில்கள், உணவு, வேலைக்கார சிலைகள், படகுகள் எல்லாம் வைக்கப்படிருந்தன.

சுற்றிலும் வெறும் மணல் , பாறைகள் என்பதால் வெயில் சூடேற்றுகிறது.

அழகின் இருப்பிடம்

ராணிகளின் சமவெளி அல்லது பள்ளத்தாக்கு (Valley of the queens). அரசர்களின் சமவெளி அருகிலேயே இது இருக்கிறது.

பண்டைய எகிப்து மொழியில் இதை அழகின் இருப்பிடம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரோக்களின் மனைவியர், இளவரசிகள், குழந்தைகள்  இறந்த பின், உடலை மம்மி செய்து புதைத்து வைத்திருக்கும் கல்லறைகள் இருக்குமிடம் ராணிகளின் பள்ளத்தாக்கு.

பெண் பாரோக்களாக இருந்தவர்களில் ராணி நெஃபெர்டரி (ரெமிசிஸ் அரசரின் மனைவி)  ஹட்ஷெப்சுட் (Hatshepsut),  நெஃப்ரிடிடி (Queen Nefertiti), பாரோக்களுக்குப் பின் வந்த தாலமி வம்சத்தின் (Ptolemaic dynasty) அரசியான க்ளியோபத்ரா (Cleopatra)போன்றவர்கள்  வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.

மிக பலம் பொருந்திய அரசியாக கருதப்படுபவர் ஹட்ஷெப்சுட் அரசி.

நூற்றுக் கணக்கான கல்லறைகளில் நான்கில்  மட்டுமே பார்வையாள்ர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவற்றின் சுவர்களிலும் பல வண்னங்களில் சித்திரங்களில் அரசிகளின், அவர்களது சேவகப் பெண்களின் வாழ்க்கை முறை,  பெண்களின் மேக் அப். எல்லாமே சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஒர் சுவரில், பெண்களின் பிரசவம், அறுவை சிகிச்சைகள் அதற்கான மருத்துவ உபகரணங்கள் (கிட்டத்தட்ட இன்றையவை போல) இவற்றின் விளக்கமான சித்திரங்களைப் பார்த்து மலைத்துப் போனோம்.

பாறை மலைகளின் பின்னணியில்,  பெரிய தூண்கள் முகப்போடு, ஹட்ஷெப்சுட் கோயில் என்றழைக்கப்படும் ராணிகளின் பள்ளத்தாக்குகளைப் பார்த்த பின், எங்கள் கைட்,  “கல்லறைகள் விசிட் முடிந்தது இனி அரசர்களின் அரசவை, முடிசூட்டு விழாக்கள் நடந்த  கோயில்களுக்குப் போகலாம் என்றபோது, அப்பாடா என்றிருந்தது.

(மதியம் லன்ச்சுக்கு காலையிலேயே எடுத்து வந்திருந்த ப்ரெட், ப்ழங்கள், பிஸ்கட்...)

அன்று மாலை உலகப் புகழ் பெற்ற லக்ஸர், கர்னாக் கோயில்களுக்குப் போனோம். முதல் பார்வையிலேயே அந்த பிரம்மாண்டங்கள், மனசைத் தாக்க ஆரம்பித்தன.

லக்ஸர் கோயில்

4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன  அடையாளங் களாக இன்று மிகப் பெரிய இரண்டு கோயில்கள் லக்ஸர் டெம்ப்பிள்  (Luxor Temple)  மற்றும் கர்னாக் டெம்ப்பிள்  (Karnak Temple)  இரண்டும் நைல் நதிக்கரையில் வளர்ந்த எகிப்திய நாகரீகத்தின் சாட்சியாக உயர்ந்து நிற்கின்றன.

இந்தக் கோயில்களுக்குள் நுழைவோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com