அழகிய எகிப்தின் அதிசயங்கள்

பயண அனுபவம்
அழகிய எகிப்தின் அதிசயங்கள்

பகுதி - 6

நைல் நதிக் கரையில் விழா

க்ஸார் நகரின் மேற்குக் கரையில் விவசாய நிலங்கள் ஒரு புறமும், உயர்ந்த பாறைகள் ஒரு புறமுமாக வித்தியாசமான நிலப்பகுதி. சென்ற இதழில் நாம் பார்த்த அரசர், அரசிகளின்  மம்மிகள் கிடைத்த கல்லறைகள் இங்குதான் ஏராளம். முதலை, பூனை போன்ற விலங்குகளின் மம்மியும் இவற்றில் உண்டு

(இன்னும் இவை தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.)

லக்ஸர் நகரம் நைல் நதியின் கிழக்குக் கரையில், நவீன நகரமாக ஜொலிக்கிறது. இங்கேதான் புகழ் பெற்ற லக்ஸ்ர் மற்றும் கர்னாக் கோயில்கள் உள்ளன. உலகின் மிகப் பெரிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.

லக்ஸார்  அரசர்களின் முடிசூட்டு விழா

நைல் நதிக்கரையில் சுமார் 4000 வருடங்களுக்கு முன் சாண்ட்ஸ்டோன் (Sandstone) வகைப் பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில், குறிப்பிட்ட ஒரு கடவுளுக்காகவோ அல்லது, அரசர்களின் உடல் வைக்கவோ உருவான கோயில் இல்லை. பாரோ அரசர்கள், தங்கள் அரசாங்கத்தை புதுப்பித்துக் கொள்ளும் இடமாகவும், முடி சூட்டிக் கொள்ளும்  புனிதத் தலமாகவும் இந்தக் கோயில் இருந்திருக்கிறது.

இங்கேதான் மூன்றாம் அமெனோடெப் (Amenhotep III)  டுடான்கமென் (Tutankhamun) போன்ற பாரோக்களின் முடிசூட்டு விழா நடந்துள்ளது.

இன்று வரை  ஓரளவு  அதிக சேதமின்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதன் நுழை வாயிலில் பிரம்மாண்ட பைலோன் (Pylon) எனப்படும் சுவர்கள் இரு பக்கமும் இரண்டாம் ரெமிஸிஸ் அரசரின் (மம்மியாக பார்த்தோமே அவரேதான்)  அமர்ந்திருக்கும் மிகப் பெரிய சிலைகளுடன் காணப்படுகின்றன.

ஒவ்வொரு சுவரும் சுமார் 79 அடி உயரமும், 214 அடி  நீளமும் கொண்டவை என்றால் பாருங்களேன்! அதில் ஒவ்வொன்றிலும் ரெமிஸிஸ் அரசர், அவரது அரசவைக் காட்சிகள் ஓவியங்களாக, அவர்களது  சித்திர எழுத்துக்களாக, ம்யூரல்களாக வரலாறு சொல்கின்றன. அவர் சண்டையிடும் காட்சிகளும் உள்ளன. இவை பாலைவன மண்ணில் புதைந்திருந்ததாகவும் 1880 ம் ஆண்டு மீட்கப் பட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஒபிலிஸ்க்ஸ் (Obelisks) என்னும் ஸ்தூபிகள்

ரே சிவப்பு நிற கிரானைட் கல்லில் உருவான 80 அடி உயர ஸ்தூபிகள் கோவிலின் நுழைவாயிலில் நிற்கின்றன.

ரெமிசிஸ் அரசர் நிறுவிய இதிலும், அரச வாழ்க்கை சொல்லும் சித்திர எழுத்துக்கள் , ஓவியங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் அவரது பெயர் செதுக்கப் பட்டுள்ளது.

ஸ்தூபிகளில் ஒன்று ஃப்ரான்ஸ் நாட்டில் பாரீஸில் இருக்கிறது. நெப்போலியன் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

ரெமிஸிஸ் அரசரின் வளாகம் 74 பிரம்மாண்டத் தூண்கள்

விசாலமான இந்த வளாகத்தில் முன்பு 74 பெரிய கல்தூண்களை அரசர் கட்டினாராம்.

அமெனோடெப் பாரோவின் சபை  நடக்கும் மிகப் பெரிய முற்றத்தில் பதினான்கு பிரம்மாண்ட தூண்கள் ஒவ்வொன்றும் 170  அடி உயரத்தில், 33 அடி சுற்றளவில்

பாபிரஸ் பூக்கள் விரிந்தாற் போன்ற உச்சியுடன் வானம் பார்த்து நிற்கின்றன. நிமிர்ந்து பார்ப்பதற்குள் கழுத்து வலிக்கிறது.

இவற்றின் அலங்காரச் சித்திரங்களில் 19 வயதில் இறந்த டுடான்குமன் மற்றும் ஹோரெமெப் அரசர்,  முதலாம், இரண்டாம் சேத்தி அரசர்கள், ரெமிஸிஸ்  (Tutankhamun, Horemheb, Seti I, Rameses II and Seti II ) இவர்களது பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.

லக்ஸார் கோயிலின் ஒரு பகுதியில் கிபி. 395ல் சர்ச், பின்னர் அதே இடத்தில் கி.பி.640 ல் மசூதி இவை ரோமாபுரி மன்னர்களால் கட்டப்பட்டதாக  சொல்லப்படுகிறது.

கர்னாக் டெம்ப்பிள்    1087 ஸ்பிங்க்ஸ்  

க்ஸார் கோயிலில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கர்னாக் கோயில், எகிப்திய நம்பிக்கைப் படி, உயிர்கள் தோன்றிய இடமாகவும், (Where creation began) சூரியக் கடவுளுடன் எகிப்தியர்களுக்கு தொடர்பு  உண்டாக்கும் புனித இடமாகவும் கொண்டாடப்பட்டது. கர்னாக் என்றால் அராபிய மொழியில் பலம் வாய்ந்த என்று பொருளாம்.

புராதன காலத்தில் லக்ஸாருடன் இந்த கர்னாக் கோயில், ஒரே அளவிலான  நீண்ட வரிசை ஸ்பிங்க்ஸ் சிலைகளால் இணைக்கப்பட்டிருந்தது.

3500 ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்ட இந்த சிலைகள் முழுவதும் பாலைவன மண்ணில் புதைந்து போயிருந்தன. 1949ல் எட்டு சிலைகள் என துவங்கி இதுவரை 1087 ஸ்பிங்க்ஸ்கள் மீட்கப்பட்டுள்ளன

சிங்க உடல், செம்மறியாட்டின் தலை, முழுவதும் செம்மறி ஆடுகளின் தலை, உடல், மற்றும் மனிதத் தலை, சிங்க உடல் கொண்ட ஸ்பிங்க்ஸ் அவை. இந்த இடம், அவென்யூ ஆஃப் ஸ்பிங்க்ஸ் என்றும் அரசர்களின் விழாக்காலப் பாதை (The King's Festivities Road ) என்றும் அழைக்கப் பட்டதாம். நிலவுக் கடவுளான அமூன், அவரது மனைவி முத், மகன் கொன்சு ஆகியோருக்கு விழா எடுத்திருக்கிறார்கள். (Amun, Mut,Khonsu) (நாமும் தெய்வங்களைக் குடும்பமாகத்தானே வழிபடுகிறோம்)

அவர்கள் நம்பிக்கைப்படி, அறுவடைக்காலம் முடிந்ததும் வேளாண் கடவுளும், பூமியும் சோர்வடைவதால் அவர்களுக்கு 11 நாட்கள் ஓபெட்  என்ற விழா எடுப்பார்கள்.(Opet festival) அமுன் சிலையை புனித நீராட்டி, புது உடை அணிவித்து, தங்க ஆபரணங்களால் அலங்கரித்து, ஒரு பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து கர்னாக்கில் இருந்து லக்ஸார் வரை நடக்கும் ஊர்வலம் இது. அரசருக்கு சகல சக்திகளையும் கடவுள் கொடுப்பார் என்பது நம்பிக்கை (இதுவும் நம்ம ஊர் உற்சவம் போலத்தான்)

ஜேம்ஸ்பாண்ட் படம் ஹைபோஸ்டைல் ஹால் Hypostyle Hall

ரோஜர் மூர் நடித்தஜேம்ஸ்பாண்ட் படம், The Spy who loved me பார்த்திருப்பீர்களே. அதில் எகிப்தில் அவர் ஒரு மைக்ரோ ஃபிலிம் தேடிச் சென்று, வில்லனோடு சண்டையிடும் காட்சி, கர்னாக் கோயிலின் இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது.

கோயிலின் மையப் பகுதியில் இருக்கும் பன்னிரெண்டு 80 அடி உயரத் தூண்கள் முன்னிலையில் நாம் சிறு துகளாகப் போனது போன்ற உணர்வு ஏற்பட்டது என்னவோ உண்மை!

பிரம்மாண்டம் காட்டும் 134 கல் தூண்கள்... டன் டனாக எடை கொண்டவை!

இந்த மாபெரும்  தூண்கள் ஒவ்வொன்றும் பாபிரஸ் வகைத் தாவரத்தின் தண்டு, மேலே அதன் விரிந்த பூக்கள் என்று டிசைன் செயப்பட்டுள்ளது. எப்படித்தான் இத்தனையையும் பாலைவனத்தில் கட்டினார்களோ.

உச்சியில் இருக்கும் வட்டதில் சுமார் 50 பேர் நிற்கலாம்  என்றும் ஒரு முறை நெப்போலியன் அங்கே ஒரு விருந்து கொடுத்தான் என்றும் கைட் சொன்னார்.

அவற்றில் கல்வெடுக்கள் போல, வரலாற்றுக் குறிப்புக்கள், ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் சொல்லப் பட்டிருந்தன. அரச பரம்பரையினர், அவ்வப்போது தங்கள் விருப்பப் படி மாற்றியிருக் கிறார்கள்.

இங்கே பைலோன் என்னும் சுவர்களை நான்கு வளாகங்களிலும் பார்க்க முடிகிறது. முதல் சுவர், சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு முற்றுப் பெறாமல், எந்த அலங்கார ஓவியங்களும் இல்லாமல் நிற்கிறது. இதன் முன்னே, செம்மறியாட்டுத்தலை ஸ்பிங்க்ஸ்களின் வரிசை பார்க்க முடிகிறது.

3400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அடுத்த பைலோன் அருகே இரண்டாம் ரெமிஸிஸ் (மியூஸியத்தில் மம்மியாக இருப்பவர்) மன்னரின் சபை வளாகமும்,  அவரது ஓங்கி உயர்ந்த  சிலையும் இருக்கின்றன.

அடுத்தடுத்த பைலோன்கள் இன்னும் பழமையானவை. பிரார்த்தனைக் கூடங்கள் விழா மண்டபங்கள் என்று கல்லால் ஆன சாம்ராஜ்யம் விரிந்து, பரந்து காணப்படுகிறது.

கோயிலுக்குள்  ஏரி ஒன்றும் , புனித சடங்குகளுக்காக மூன்றாம் டட்மோஸிஸ் அரசரால் (Tuthmosis- III) உருவாக்கப்பட்டது.

எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த இரண்டு கோயில் களையும் பார்த்து புரிந்து கொள்வது  கடினம் என்று தோன்றியது. இன்றும் ஆராய்ச்சியாளர்கள் அங்கே முகாமிட்டு வரலாற்று உண்மைகளைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

லக்ஸாரிலிருந்து அஸ்வான் வரை நான்கு நாட்கள் நைல் குரூயிஸ் என்ற சொகுசுக் கப்பல் பயணம் அடுத்து காத்திருந்தது. “ஆங்காங்கே கரையில் இறங்கி சில சிறு ஊர்களையும், அங்குள்ள சிறப்புக்களையும் காணப் போகிறீர்கள்” என்று கைட் ஆவலைத் தூண்டினார்.

உள்ளூர் கிராம மக்களையும்,  படகில் வந்து நீரிலிருந்தே கப்பலுக்குள் பொருட்கள் விற்கும் வணிகர்களையும் சந்திக்கலாம் என்றார். தயாரானோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com