அழகிய எகிப்தின் அதிசயங்கள்

பயண அனுபவம்
அழகிய எகிப்தின் அதிசயங்கள்

பகுதி - 7

நைல் நதியில் கப்பல் பயணம்

நைல் நதி… எகிப்தின் கொடை என்று படித்திருக்கிறோம்.

50 லட்சம் வருடங்களாக ஒடிக்கொண்டிருக்கும் நதி. ஆப்பிரிக்க நாட்டின் விக்டோரியா ஏரி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய  நன்னீர் ஏரி.  (Fresh water Lake) இங்குதான் நைல் உற்பத்தியாகி, பதினோரு ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்து, எகிப்தில் பாய்ந்து, இன்றும் எகிப்தை வளப்படுத்தும், உலகின் முதல் நீண்ட நதி. 4100 மைல்கள் நீளம்.

நைல் இல்லையென்றால் 50 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய  எகிப்து நாகரீகம் ஏது?

நைல் நதிக்கு இரண்டு முக்கிய கிளைகள் உண்டு. வெள்ளை நைல் மற்றும் நீல நைல்.

எகிப்தில் ஓடி வரும் நீல நைல் நதி, இறுதியில் மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) கலக்கிறது.  நைல் நதியை பண்டைய காலத்திலிருந்தே மக்கள் முக்கிய போக்குவரத்து வழியாக பயன்படுத்தினார்கள். எனவே, அதன் கரைகளை ஒட்டி ஊர்கள் உருவாகின. வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் கட்டப்பட்டன. இவற்றையும், எகிப்தின் பசுமையான அமைதியான கிராமப்புறங்களையும் பார்க்க  நைல் நதியில் செல்வது ஒரு முக்கியமான ஐகானிக் பயணம்.

லக்சாரிலிருந்து கிளம்பும் ‘கிராண்ட் ரோஸ் நைல் க்ரூயிஸ்’ என்னும் சொகுசுக் கப்பலில் எங்கள் நான்கு நாட்கள் பயணம் தொடங்கியது. ஆடம்பரமான பெரிய வரவேற்பறை, நடுவில் இரண்டாகப் பிரிந்து மேலே தளங்களுக்குச் செல்லும் அலங்காரப்படிகள். உணவுக்கூடம், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான தளம் என்று சொகுசுக் கப்பல்கள்  தனி உலகம். சிறிய ஆனால் எல்லா வசதிகளும் கொண்ட அறையில் ஒருபுறம் இருந்த ஜன்னல் வழியே அமைதியான நைல் நீரோட்டம். உட்கார்ந்து, கால்நீட்டி சாய்ந்து, எல்லாவிதங்களிலும் சுற்றுப்புற எகிப்தின் அழகை ரசிக்க, டெக்கில் நிற்க வேண்டும்.

எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது எது என்றால், ஒரு பக்கக் கரையில் மணல் குன்றுகள், வறட்சி,தூரத்துப் பாறைகள் என்று சஹாரா பாலைவனத்தின் நீட்சி.

மறுகரையில் எங்கும் வயல்களும் விளை நிலங்களுமாக செழுமையான பசுமையில் நைலின் ஆட்சி.

காலை நேரத்தில் கிராமங்களைக் கடந்து செல்லும் போது நைல் கரையோரமாக, மண் அல்லது செங்கல் வீடுகளையும், சில வீட்டு வாசல்களில்  நீண்ட அங்கி தலைப்பாகையுடன் புகை பிடிக்கும் ஆண்களையும், உற்சாகமாக கையாட்டும் குழந்தைகளையும் காணலாம். மெல்ல படகில் செல்லும் மீனவர், அல்லது ஸ்பீட் போட்டில் விரையும்  இளைஞர்களும் கண்ணில் படுவார்கள்.

நைல் நதியில் ட்ராஃபிக் ஜாம்

“எஸ்னா  லாக் “ என்ற இடத்தில் (Esna Lock) எங்கள் கப்பல் நிறுத்தப்பட்டது.

என்ன காரணம்... ட்ராஃபிக் ஜாம்... நதியிலா? ஆவலோடு டெக் மேலே நின்று பார்த்தோம்.

நைல் நதியின் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒன்று போல் இருப்பதில்லை.

எனவே க்ரூயிஸ்கள் செல்லும்போது ஒரு புறம் நீர் மட்டம் உயர்ந்தும், எதிர்ப்புறம் சில அடிகள்  குறைந்தும் இருக்கும். அப்போதெல்லாம் லெவலை சமன் செய்த பின்தான் “வண்டிகள்” செல்ல முடியும்.

எங்கள் க்ரூயிஸ்க்கு எதிர்த் திசையில் இன்னோரு கப்பல் நின்று கொண்டிருந்ததால் இங்கே நீர் மட்டம் (சுமார் 12 அடிகள் வரை)  உயர்ந்தது. எதிர்க் கப்பல் மட்டம் இறங்குவதையும் கவனிக்க முடிந்தது.

நீர் மட்டம் சரியாகும் வரை சுமார் அரை மணி நேரம் இரு கப்பல்களும் நின்றன.

இங்குதான் ஒரு சுவாரசியமான விஷயம்..

உள்ளூர் எகிப்து வாசிகள் படகுகளில் வந்து, தங்கள் பொருட்களை கூவிக் கூவி விற்கிறார்கள்..

புகழ் பெற்ற (Egyptian Cotton) பருத்தியில் ஷர்ட்கள், போர்வைகள், அலங்கார டேபிள் விரிப்புக்கள், உடையாத கைவினைப்பொருட்கள், எல்லாவற்றையும் கீழே படகிலிருந்து காட்டுவார்கள். மேல் டெக்கில் நின்றபடி நாம் பார்க்கும்போது  அவற்றை பிளாஸ்டிக்

பைகளில் போட்டு குறி தவறாமல் சரியாக டெக்குக்குள் எறிவார்கள்.

பொட்டலங்கள் நடுவில் இருக்கும் நீரில் விழுந்து விடுமோ என்று நமக்குத்தான் டென்ஷன்.  பேரம் பேச வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி புரிந்துகொள்கிறார்கள்.

வாங்கிக் கொண்ட பிறகு நாம், பணத்தை அதே கவரில் போட்டு படகுக்குள் எறிய வேண்டும். அனேகமாக எல்லோரும் பெட்ஷீட்கள், அலங்கார விரிப்புக்கள் வாங்கினோம்.

எஸ்னா லாக்கிலிருந்து நீர் மட்டம் சரி செய்தபின் கப்பல் நகர, படகு மனிதர்கள்  பின்னால் மறைய ஆரம்பித்தார்கள்.

அடுத்து நாங்கள் இறங்கிச் செல்வதற்காக எங்கள் கப்பல் நின்ற இடம் புகழ் பெற்ற எட்ஃபூ (Edfu) என்ற ஊரில் இருக்கும் ஹோரஸ் கடவுளின் கோயில். (Temple of Horus)

ஹோரஸ் என்பவர், ஃபால்கன் (falcon) வகைப் பருந்து முகமும், மனித உடலும் கொண்ட  கடவுள். இவரது வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இருப்பதாக  வழிபட்டிருக்கிறார்கள்.

இங்கே ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். பாரோக்களின் சாம்ராஜ்யத்திற்குப் பிறகு நிறைய போர்களை சந்தித்த எகிப்தின் சிம்மாசனத்தை, கிரேக்க வீரரான அலெக்ஸாண்டர் தி க்ரேட்  கி.மு.332ல் பிடித்தார்.

அதாவது 2300 வருடங்களுக்கு முன்… அவரது மறைவுக்குப் பின்  கி.மு. 323ல் அவர் கிரேக்க படைத் தளபதியாகவும் எகிப்தின் கவர்னராகவும் இருந்த தாலமி என்பவர் (Ptolemy) அரியணை ஏறினார்.

எகிப்தியரின் நம்பிக்கைகளைப் போற்றும் விதமாக, அவர்களது கடவுள்களுக்காகக் கட்டப் பட்டவையே எட்ஃபு, கொமொம்பொ (Kom Ombo),  ஃபிலே கோயில்கள்.

தாலமி வம்சத்தில் வந்து எகிப்தை ஆண்ட  பேரரசிதான் க்ளியோபாத்ரா. ரோமாபுரியைச் சேர்ந்த அகஸ்டஸ் என்பவர் 2100 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை பிடித்த போது  க்ளியோபாத்ரா, அவளது காதலன் மார்க் ஆண்டனி, ஆகியோருடன் தாலமி வம்சம் சரிந்தது.

தாலமி  வம்சத்தில் வந்த அரசர்கள்தான் இனி நைல் நதிக் கரையில் நாம் பார்க்கப் போகும் கோயில்களைக் கட்டியவர்கள்.

எட்ஃபு பருந்துக் கடவுள் கோயில்

2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எட்ஃபுவின் ஹோரஸ் கடவுள் கோயில்.  இங்கும் 120 அடி உயர பைலோன்  சுவர்கள் நுழைவாயிலில் பிரம்மாண்டமாக நிற்கின்றன.

அவற்றின் இரு பக்கமும் ஹோரஸ் கடவுளின் மாபெரும் சிலைகள். கிரானைட் பாறைகளால் ஆனவை.

இதன் பின்னே ஓங்கி உயர்ந்த 30 பிரமாண்டத் தூண்கள். பலவித பூக்களின் வடிவில் உச்சி கொண்டவை. சுவர்களில் காணப்படும் சித்திரங்கள், விருந்து வைபவம் உட்பட மனதைக் கொள்ளைகொள்கின்றன.

மற்றொரு ஹோரஸ் கடவுள் ஜோடி, கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டு அடுத்த நுழைவாயிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது ஒன்றுதான் உள்ளது.

இங்கும் கர்னாக் கோயில் போல, ஹைப்போஸ்டைல் வளாகம்.  மிக உயரமான தூண்கள், அவற்றில் செதுக்கப்பட்ட ஹீரோக்ளிப்ஸ், ஓவியங்கள் எல்லாமே பார்க்கப் பார்க்க பிரமிப்பைத் தருபவை. அதன் பின்னே ஒரு நேர்த்திக் கடன்களுக்கான சேம்பர். உட்பக்கமாக ஹோரஸ் கடவுளின் கருவறையும் காணப்படுகிறது.

இதனுள், முன்பு ஹோரஸின் தங்கச் சிலை இருந்ததாம். இதன் சுற்றுச் சுவரில் நைலோமீட்டர் என்ற கருவியின் மிச்சங்கள் உள்ளன.

பண்டைய காலத்திலேயே நைல் நதியின் நீர் மட்டத்தை அளக்க உருவாக்கப்பட்ட கருவி. இவற்றை எல்லாம் வியந்து கொண்டே கப்பலில் ஏறி அடுத்த ஸ்டாப் கொமொம்போவில் இறங்கினோம்.

கொமொம்போ (Kom Ombo)

கொமொம்போ என்றால் தங்கக் குன்று (The Hill Of Gold). சஹாரா பாலைவனத்தில் கிழக்குப் பகுதியில் தங்கச் சுரங்கம் இருந்ததாகவும், அதனால் இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

முதலைத் தலைகொண்ட சோபெக் (crocodile-headed Sobek) தான் இனப்பெருக்கத்துக்கான கடவுள். இவருக்காகவும் ஹோரஸ்க்காகவும் தாலமி அரசர்களால் கட்டப்பட்ட  இரட்டைக்கோயில்கள் இங்கே முக்கியமானவை. இங்கும் உயர்ந்த தூண்கள், ஹீரோக்ளிப்ஸ் சொல்லும் வாலாற்றுச் சித்திரங்கள். செதுக்கல்கள் எல்லாமே வாவ் சொல்ல வைப்பவைதாம்.

நைல் நதியைப் பார்த்தபடி அமைந்திருக்கும் இவை, பல நூற்றாண்டுகள் கழிந்தும், இயற்கைச் சீற்றங்கள், மனிதர்களின் ஆக்கிரமிப்புக்கள் இவை கடந்தும்  கம்பீரம் குறையாமல் உலகின் கவனத்தை ஈர்ப்பவை.

அஸ்வானில் அடுத்த விசிட்

வறாமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதங்களில் பொங்கி வந்த நைல் நதி

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, எகிப்து அதிபர் நாசர் அவர்களால் அஸ்வான் அணைக்கட்டு கட்டப்பட்டது.

அதற்கும், அங்கே அமைந்த ஃபிலே கோயிலுக்கும் செல்லும்போது நாங்கள் எதிர் கொண்ட பிரச்னை….

(அதிசயங்கள் விரியும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com