அழகிய எகிப்தின் அதிசயங்கள்

அழகிய எகிப்தின் அதிசயங்கள்

பயண அனுபவம்

பகுதி - 8

அணைக்கட்டு நகரம் அஸ்வான்

எகிப்தின் தென்பகுதியில் ,நைல் நதியின் அழகிய வளைவுகளில் அமைந்த, சுறுசுறுப்பான, அமைதியான வணிக வாசல் நகரம். 

நைல் பள்ளத்தாக்கின் அழகிய பசுமையும், பண்டைய காலத்து  ஃபிலே கோயிலும், அஸ்வான் அணைக்கட்டும் உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

ஆங்காங்கே நதியின் நடுவே  காணப்படும் சிறிய தீவுகளும், நதியில் மிதக்கும் ஃபெலூகா (felucca) என்னும் மரத்தாலான செய்லிங் படகுகளும் கனவுச் சித்திரம் போல காட்சியளிக்கின்றன.

அங்கே வசிக்கும் நியூபின் இன மக்களின் வாழ்விடங்களாக மண் மற்றும் செங்கல்லால் ஆன வீடுகள் இவையும் ரசிக்க வைக்கும் காட்சிகள்.

ஃபிலே (Philae Temple) கோயில்

ஃபிலே என்பது ஐஸிஸ் கடவுளுக்காக தாலமி வம்சத்தால் 2380 ஆண்டுகளுக்கு முன், அஸ்வானில் கட்டப்பட்ட ஒரு தீவுக் கோயில். ஐஸிஸ் நோய்களை குணப்படுத்தும் அன்னை. தாலமி, கிரேக்க, ரோமாபுரி உட்பட பல அரச பரம்பரைகளைக் கண்ட கோயில்.

இந்தக் கோயிலுக்கு,எங்கள் கப்பலில் இருந்து இறங்கி ஒரு சிறு படகில் செல்ல வேண்டும்.

ஆட்டம் காட்டும் படகுக்கு மாறுவது ஒரு பிரச்னையாக இருந்தது.  கால் தவறிற்று. விழப் போனபோது, படகை ஓட்டிய பையன் கையைப் பற்றி பலமாக இழுத்துக் காப்பாற்றினான். இங்குள்ள முதலைகள் 20 அடி நீளம் வரை இருக்கக் கூடியவை என்று எங்கள் கைட் சொல்லியிருந்தாரா... நடு நதியில் விழாமல் தப்பித்தோமே  என்று தோன்றியது.

படகு, ஃபிலே கோயிலின் அருகே நிற்க, இறங்கி மணலில் நடந்தோம்.காலையிலேயே கலாய்க்கும் பாலைவன வெயில்.

இந்த கோயிலை முதலில் வேறு இடத்தில் இருந்ததாம். அஸ்வான் அணை கட்டும் போது, இந்த கோயிலில் இருந்து ஒவ்வொரு கல்லாக மிக நுணுக்கமாக பெயர்த்து எடுத்து, அகில்கியா தீவிற்கு (Agilkia Island) கொண்டு வந்து, ஒரிஜினலாக இருந்தது மாதிரியே  மீண்டும் கட்டியிருக்கிறார்கள்.  யுனெஸ்கோ மீட்புக் குழுவினர்.

லக்ஸார் கர்னாக்  கோயில்களைப் போலவே இங்கும் இரண்டு பிரம்மாண்ட  சுவர்கள், அவற்றின் முன்னே, இரு பக்கமும் பெரிய கிரானைட் சிங்கங்கள் கம்பீரம் காட்டுகின்றன. இரு பக்கமும், 43 அடி உயர ஒபிலிஸ்க்ஸ் ஸ்தூபிகள் நிற்க, எல்லாவற்றிலும் செதுக்கப் பட்டிருக்கும் அரசர்களின் உருவங்கள்.. பெயர்கள்

சுவர் முழுவதும் ஐஸிஸ் உட்பட பல புராதனக் கடவுளரின் கதைகள், வழிபாட்டு முறைகள், மத குருக்கள் செய்யும் சடங்குகள் இவற்றை   விளக்கும் சித்திரங்கள் , ஹீரோக்ளிபிக்ஸ் எழுத்துக்கள். 

இரண்டாவது பைலோன்களைத் தாண்டிச்  சென்றால், வித்தியாசமாக ஓங்கி உயரந்த தூண்கள், அருகருகே, இரட்டை வரிசையில் பாபிரஸ் பூக்கள் டிசைனில் , ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகின்றன. 

பத்து சேம்பர்களை உள்ளடக்கிய ஹைபோஸ்டைல் வளாகம் கண் முன்னே விரிகிறது.இங்குள்ள தூண்களில் சுவர்களில் எல்லாம் ஐஸிஸ் கடவுள், தனது மகன் ஹோரஸ்க்கு பாலூட்டும், மற்றும் அவரது கணவர் ஒஸிரிஸ் உயிர்த்தெழும் சித்திரங்கள்.

மத குருமார்களுக்கு வழங்கிய சன்மானம் பற்றிய குறிப்புடன், பாறையில் செதுத்தப்பட்ட  பாரோ அரசரின் சாசனம் ஒன்று,அபூர்வமான கண்டுபிடிப்பு. வளாகங்கள்  பல உள் பக்கமாக விரிவடைந்து கொண்டே செல்ல, அங்கும் பல கடவுளரின் வழிபாட்டுக் கூடங்கள். சுமார் இரண்டு  மணிநேரம் சுற்றி,  ஃபிலே கோயிலின் புராதனத் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து, அடுத்து நாங்கள் சென்றது அஸ்வான் டேம்.

அஸ்வான் அணைக்கட்டு

நாசர் ஏரி என்றழைக்கப்படும் , கடலைப் போல பரந்த ரிசர்வாயர் அருகில் சென்று தூரத்தில் தெரிந்த அஸ்வான் அணைக்கட்டைப் பார்வையிட்டோம். மனிதன் உருவாக்கிய செயற்கை ஏரிகளில் இது மிகப் பெரியது.

எகிப்தின் அப்போதைய அதிபர் நாசர், அஸ்வான் அணையையும் இந்த ரிசர்வாயரையும்  உருவாக்கியதால் அவருடைய பெயரிலேயே  அழைக்கப்படுகிறது.

நைல் நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த  முதலில் தாழ்ந்த லெவலில் ஒரு அணை இருந்தது. அதை உயர்த்த விரும்பிய அதிபர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி , அதன் வழியே கப்பல்கள் செல்லவும், அதற்கான வரி மூலம் வருவாய் வருவதற்கும் வழி செய்தார்.

இஸ்ரேல், பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த சூயஸ் கால்வாயை நாசர் எடுத்துக் கொண்டதால் போர் நடந்து எகிப்து வெற்றி பெற்றது இது. 1950 களின் இருதியில் நிகழ்ந்த வரலாறு.

பின்னர் நைல் நதியில் அஸ்வான் அணைக்கட்டை, சோவியத் யூனியன்  உதவியுடன் கட்டவும், நீரைத் தேக்கி வைத்து, அதனால் மின் உற்பத்தி செய்யவும்  திட்டமிட்டார். 1960 களில் துவங்கிய இந்தப் பணி, 1968 ல் நிறைவுற்றது.

அஸ்வான் உலகின் மிகப் பெரிய, செயற்கையான, தடுப்புச் சுவர் அணையாகும் (Embankment dam) 13000 அடி நீளமும் , 365 அடி உயரமும் கொண்டது.

பரந்த ஏரியையும் வெகு தூரத்தில் தெரிந்த குன்று களையும்,நேரம் செல்வது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, மனமின்றி கிளம்பினோம். படகு மூலம் எங்கள் எம்.எஸ். க்ராண்ட் நைல் க்ரூயிஸ் கப்பலுக்கு வந்து, மீண்டும் லக்ஸார்வந்து, அங்கிருந்து கோச்சில் கெய்ரோ வந்தோம். கெய்ரோவிலிருந்து கிளம்பி ஐந்து நாட்கள் கடந்திருந்தன.

அலெக்சாண்டிரியா கலங்கரை விளக்கம் உலக அதிசயம்

பண்டைய  ஏழு  உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்த லைட்ஹவுஸ் தெரியுமல்லவா?

அந்த கலங்கரை விளக்கம் இருக்கும் அலெக்சாண்டிரியா நகரம் எங்களது அடுத்த விசிட். கெய்ரோவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு.

மத்திய தரைக் கடலின்  கரையை ஒட்டிய, நைல் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் எகிப்தின் இரண்டாவது பெரிய, துறைமுக  நகரம். கி.மு. 356ல் அதாவது சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் பிறந்தவர் அலெக்சாண்டர் தி க்ரேட். (Alexander the Great). உலகின் பல பகுதிகளையும் போரிட்டு வென்று வந்த  தோற்கடிக்க முடியாத கிரேக்க வீரர்.

கி.மு. 332 ல் எகிப்துக்குள் நுழைந்தவர்க்கு மற்ற இடங்கள் போலன்றி நல்ல வரவேற்பு கிடைத்தது. துறைமுகமாக இருந்த அலெக்சாண்டிரியா நகரைப் பார்த்தவர், அதை எகிப்தின் த்லைநகராக்கினார். அவர் பெயரும் சூட்டப் பட்டது.

கி.மு.332 ல் இருந்து, கி.பி.642 வரை சுமார் 1000 ஆண்டுகள் இதுவே எகிப்தின் தலை நகராக இருந்தாக வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன.

பண்டைய தாலமி அரசர்களால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், பண்டைய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டு வந்தது.

சுமார் 340 அடி உயரத்தில், கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கல் பாறைகளால் கட்டப்பட்ட  இந்த கலங்கரை விளக்கம், பல நூற்றாண்டுகளாகவே, மனிதன் உருவாக்கிய மிக உயர்ந்த அமைப்பாக இருந்து வந்திருக்கிறது.

இது பல முறை நில நடுக்கங்களால் சிதிலமடைந்து போய் செப்பனிடப்பட்டு, 1500 ஆண்டுகளுக்கும் மேலாக நின்று,  பூகம்பத்தால் கடலுக்குள் மூழ்கி விட்டது.

அதன் இடிபாடுகளை மீண்டும் 1994 ல் கண்டு பிடித்தனர். இப்போது கடலுக்குள் டைவ் அடித்துச் சென்றுதான் பார்க்க முடியும், அலெக்சாண்டிரியாவின் நூலகம் உலகின் மிகப் பெரிய நூலகம், The Bibliotheca Alexandrina  எகிப்தின் அலெசாண்டிரியாவில் இருக்கிறது.

புராதன எகிப்தில்  தாலமி அரசர்களால்  ஒரு நூலகம் நிறுவப்பட்டு, அதில் அரசர்களின் சட்ட திட்டங்களை விளக்கும் பாபிரஸ் சுருள்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. 40,000 முதல் நான்கு லட்சம் சுருள்கள் வரை இருக்கலாம் என்பது ஆட்சியாளர்களின் கருத்து.

கிறிஸ்து பிறப்புக்கு முன்பிருந்தே நிறைய அறிஞர்களும், பலதுறை நிபுணர்களும் வந்து கூடும் இடமாக இருந்தது. பல கவிதை, அறிவியல், ஆராய்ச்சி  நூல்கள், கதைகள் எழுதப்பட்டன. இதை ஒரு அறிவுக் கூடமாகப் போற்றினார்கள். ஹோமர், சாக்ரடீஸ், ப்ளேடோ போன்ற மேதைகளின் படைப்புக்கள் இங்கே நிறைந்திருந்தன.

ஜூலியஸ் ஸீசர் காலத்தில் நூலகத்தின் கிடங்குப் பகுதி எரிந்து போயிற்று என்றும், பின்னர் கிபி. 647 ல் எகிப்தில் குடியேறிய இஸ்லாமியர்கள் அதை தொடர்ந்து பாதுகாத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

பல காலம் காப்பாற்றப் பட்டு அரிய புராதன தகவல்களைச் சேகரித்து வைக்கும் களஞ்சியமாகவும், கலைகளின் மையமாகவும், ஆராய்ச்சியாளர்களின் களமாகவும் இருந்து வந்திருக்கும் இந்த நூலகம், இன்று உலகிலேயே மிகப் பெரியது.

வட்ட வடிவில் இருக்கும் 11 தளங்கள்  கட்டிடக் கலையின் சிறப்பு. யுனெஸ்கோ உதவியுடன் நவீனப்படுத்தப் பட்டுள்ளது. பிரமிப்பைத் தரும் நூலகம் இது.

அலெக்சாண்டிரியாவில் இருக்கும் ஸ்டான்லி ப்ரிட்ஜ் என்ற பாலம் கடல் மேல் அலங்காரத் தூண்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. கெய்ரோ திரும்பும் முன்,சில உள்ளூர் கேக் ஸ்வீட் வகைகளை அங்கே வரிசையாக அமைந்திருந்த கடைகளில் வாங்கிக் கொண்டோம்.

எங்கள்  இனிய எகிப்துப் பயணம் நிறைவு பெற, பிரமீடுகளும், பாரோக்களின் ஓவியங்களும், நைல் நதியும், அதில் பயணித்ததும்  மனதில் நிரந்தர இடம் பிடித்தன.

நிறைவுற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com