-மதுவந்தி
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா எனப்படும் அயல்நாட்டு அனுமதிச்சான்று அவசியம் என்பதும் அது வேலை நிமித்தமாகவும் இருக்கலாம் அல்லது பொழுதுபோக்கு சுற்றுலாவாகவும் இருக்கலாம் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதே விதிமுறைதான் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும். ஆனால், சில நாடுகளில் இந்த விசாவிற்கு விதிவிலக்கு உள்ளது என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம் உலகில் சில நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை.
இந்திய அரசாங்கத்துடனான நட்புறவு காரணமாகவும் அந்த நாடுகளின் சுற்றுலாத்துறையை வளப்படுத்தவும் இந்தியர்கள் விசா இன்றி உலகின் பதினாறு நாடுகள் வந்து செல்ல அனுமதிக்கின்றன. இந்தப் பதினாறு நாடுகளுக்கும் அந்த அந்த நாட்டிற்குச் சென்றவுடன் அனுமதிச் சீட்டு பெறவேண்டியது சுற்றுலாப் பயணிகளின் அவசியம் ஆகும். அவ்வாறு அனுமதி அளிக்கும் நாடுகளில் மிகவும் பிரபலமான நாடுகளையும் அங்குப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.
1. பார்படாஸ்:
மேற்கு அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள சின்ன தீவு நாடாகும் பார்படாஸ். பிரிஜ்டவுண் இதன் தலைநகராகும். பிரிஜ்டவுண், ஹாரிசன்ஸ் குகைகள், ஹண்ட்ஸ் கார்டன்ஸ், பத்க்ஷேப பீச், பெபிள்ஸ் பீச், ரீகல் பார்லே ஹில் ஹவுஸ், இரவில் நடக்கும் அட்லாண்டிஸ் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் போன்றவை இங்குச் சுற்றிப்பார்ப்பதற்கு உகந்த இடங்களாகும்.
2. பூட்டான்:
ஆசியா கண்டத்தின் ஒரு சிறிய நாடாகும் பூட்டான். இது இந்தியாவின் வடக்கு எல்லையில் ஹிமாலயச் சரிவின் தெற்கே இருக்கிறது. திம்பு இதன் தலைநகராகும். ராயல் மனாஸ் நேஷனல் பார்க், ஜிக்மே டோர்ஜி நேஷனல் பார்க், பும்டெலிங் வனவிலங்கு சரணாலயம், சக்தேங் வனவிலங்கு சரணாலயம் போன்றவை பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களாகும்.
3. ஹாங் காங்:
ஆசியக் கண்டத்தில் உள்ள சீனாவின் ஒரு மாகாணம்தான் ஹாங்காங். இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும் முக்கியமான இடங்கள் என கூறப்படுவது டிஸ்னிலேண்ட், ஓஷன் பார்க், சென்ட்ரல் மார்க்கெட், வான் சாய் ப்ரோமென்டே எனப்படும் வான் சாய் ஊர்வலம், விக்டோரியா ஹார்பர் ஆகும்.
4. மாலத்தீவுகள்:
மாலத்தீவுகள் தெற்கு ஆசியாவின் மிகச் சிறிய தீவு நாடாகும். இந்தியாவிற்குத் தென்மேற்கு திசையில் இருக்கிறது மாலத்தீவு. மாலே இதன் தலைநகராகும். ஃபுவஹ்மலாஹ், அட்டு பவளப்பாறை, அரி பவளப்பாறை, மாலே, ஞாவியணி பவளப்பாறை, ஹனிபாரு பே போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
5. நேபால்:
நேபால் தென்கிழக்கு ஆசிய நாடாகும், காத்மாண்டு இதன் தலைநகரம். இது வடக்கு எல்லை சீனாவையும், கிழக்கு,மேற்கு,தெற்கு பகுதிகள் இந்தியாவையும் எல்லையாகக்கொண்ட நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் மலைச் சிகரம் இங்கேதான் உள்ளது. சிட்வான் தேசிய பூங்கா, ஜனக்பூர், லும்பினி, முக்திநாத், பசுபதிநாத் கோயில் போன்ற இடங்களும், இமயமலை தொடர்களில் சாகச விளையாட்டுகள், பொடேகோஷி நதியில் ராஃப்டிங் போன்றவை நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கின்றன.
6. இலங்கை
இலங்கை அல்லது ஸ்ரீலங்கா இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆசியாவைச் சேர்ந்த ஒரு தீவு நாடாகும். இதன் தலைநகரம் கொழும்பு. இந்தியா இதன் மேற்கு எல்லையில் உள்ளது. இந்தியாவையும் இலங்கையும் பிரிப்பது பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வலைகுடாவாகும். சிகிரியா போர்ட்ரெஸ், உடவலவே தேசிய பூங்கா, லிட்டில் ஆடம்ஸ் பீக் வியூ பாயின்ட், பென்டோடா பீச், காலே கோட்டை, டம்புலா குகை கோயில், கொழும்பு , கண்டி போன்றவை மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.
7. கத்தார்:
கத்தார் மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்று. இதன் ஒரு பகுதி சவூதி அரேபியாவாலும் பிற பகுதிகள் பாரசீக வளைகுடாவாலும் சூழப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் தோஹா. அல் ரீம் உயிர்க்கோளக் காப்பகம், உம் தைஸ் தேசிய பூங்கா, தோஹா கோட்டை, அல் வாஜ்பா கோட்டை, ஸுபரஹ், பனானா தீவு போன்ற சுற்றுலா இடங்கள் இங்குப் பிரபலமானவை.
8. பிஜி:
பிஜி தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு. இது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சார்ந்தது. சுவா இதன் தலைநகர். நாடி, டெனாராவ் தீவு, மாமனுக்கா தீவுகள், தர்ஸ்டனின் தாவரவியல் பூங்கா, சிகடோகா மணல் திட்டுகள், கோலோ-ஐ-சுவா வன பூங்கா போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.