ஜாலியா சோத்துப்பாறை அணைக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை

கோடை காலம் தொடங்கிவிட்டது. பிள்ளைகளுக்கு கோடை விடுமுறையும் தொடங்க இருக்கிறது. இன்னும் சில நாட்களில்... தேர்தல் பரபரப்பு வேறு எல்லாம் முடிந்த பிறகு மனதுக்கு இதமான இடங்களை சுற்றிப் பார்க்க புறப்படுங்கள். அப்படி சுற்றிப் பார்க்க புறப்படும்போது நிச்சயம் உங்கள் டூர் லிஸ்டில் இந்த சோத்துப்பாறை அணைக்கட்டை குறித்து வைத்துக் கண்டு கண்டு மகிழுங்கள். அந்த அணையின் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் நம்மால் ஒரு அணை கட்ட முடியுமா முடியாது அதற்கான சாத்தியமும் இல்லை. ஆனால் நவீன உலகம் தான். எந்த நவீனமும் இல்லாத காலகட்டத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் பொழுது மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. அப்படி ஒரு அணைதான் இது.

சோத்துப்பாறை அணை, தேனி மாவட்டம் இயற்கை யிலேயே பசுமையும், அணைகளும், ஏரிகளும் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை உள்ளிட்ட பல அணைகளும், சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகளும் உள்ளன.

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை

இம்மாவட்டத்தின் மற்றுமொரு சிறப்பு தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தை தேனி சந்தை ஆகும். இதுபோல தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணையாகும்.

பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லை குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார் களாம். பிரார்த்தனைக்குப் பிறகு வாழை இலை போடாமலேயே பாறையைக் கழுவி உணவு படைப்பார்களாம்.

பாயாசம் சாப்பிட்டவுடன் மழை கொட்டுமாம். இப்படியொரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை எனப் பெயர் வந்தது. மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பழனி மலைத்தொடரில் அமைந்துள்ளது. பேரீஜம் ஏரி, இந்த ஏரிதான் சோத்துப்பாறை அணைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.

மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து 2090 மீட்டர் அடி உயரத்தில் பழநி மலையில் உற்பத்தியாகி, கிழக்குச் சரிவின் வழியாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் ஒடிவந்து ஆறாக வருகிறது. அந்த ஆற்றிற்கு வராகநதி என்று பெயர் வைத்துள்ளனர்.

சோத்துப்பாறை...
சோத்துப்பாறை...

அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்கள் தண்ணீரை அருந்தும். இதனைப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சோத்துப்பாறை அணையின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும்.

இவை தவிர அணையில் வழிந்தோடி வரும் நீரில் குளித்து மகிழலாம். மேலும் அணையிலிருந்து பார்த்தால் பெரியகுளம் நகரைக் காணலாம். கண்ணுக்கு எட்டியவரை மாந்தோப்புகள் அதிகமாக இருக்கும். அணைக்கு மேலே டைகர்பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன.

குடும்பத்துடன் சென்றால் கட்டணமில்லாமல் கண்டு களிக்கலாம். அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளளவு 100 மில்லியன் கன அடி அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டர் ஆகும்.

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 10 உபயோகமான டிப்ஸ்!
சோத்துப்பாறை அணை

அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டர் ஆகும். இந்த அணையினால் நன்செய் பாசனப்பரப்பு 1825 ஏக்கர், புன்செய் பாசனப்பரப்பு 1040 ஏக்கர் ஆகும். இதனால் தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பயனடைகின்றன. இவை தவிர சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகின்றது.

எப்படிச் செல்வது:

பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் அரசமரத்தில் பனைமரம் வளர்ந்துள்ள அதிசயமான இடம் உள்ளது. பெரும்பாலும் அரச மரத்தில் ஆலவிதைகள் இருக்கும். ஆனால் அரசமரத்தில் இரண்டு பனைமரங்கள் வளர்ந்துள்ளதைக் காணலாம். பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.தூரம் உள்ளது. பெரிய குளத்திலிருந்து அரசுப்பேருந்து உள்ளது. பெரிய குளத்திலிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com