வாழ்வோடு இணைந்த கோலம்!

வாழ்வோடு இணைந்த கோலம்!

கோலம்’ என்றால் அழகு என்று அர்த்தம். இறைவன் ‘கோலம்’ கொண்டிருக்கிறான் என்பார்கள்.  கோயிலுக்குப் போனால் முதலில் நம் கண்களில் தெரிவது வாயிற்புறம் போட்டுள்ள கோலம்தான். நம்மையும், கடவுளையும் இணைக்கும் பாலமே கோலம்தான்.

முதலில் கோலம், (இறைவன் சன்னிதியில் அன்றாடம் போடும் கோலம்) அடுத்தது விளக்கு ஏற்றுதல், மூன்றாவதாக புஷ்பம் சாற்றுதல், பிறகுதான் நைவேத்யம், கற்பூரம் ஆகியவை. இதன் அடிப்படையில் பார்த்தால் முதல் இடம் பெறும் பாக்கியமே கோலத்துக்குத்தான் எனத் தெரிகிறது.

நம் இந்து மதமே தர்ம அடிப்படையில் உள்ளது. இதைக் கோலம் உணர்த்துகிறது. காலை எழுந்ததுமே வாசல் அலம்பி (முன்னாளில் சாணம் தெளிப்பர்!) அரிசி மாக்கோலம் போடுகிறோம். பெரிய அன்னதானம்! (ஆயிரம் எறும்புகளுக்கும் காக்கைகளுக்கும் உணவாகிறது. (கல் மாவு கோலம் இட்டால் பாபம் சம்பவிக்கும்) இது ஒருவழிபாடு என்கிறார். உ.வே.சா! ‘குறைவற்ற செல்வன் என்றே கோல மாமறை கூறுமே!’ என்கிறார் பட்டினத்தார்.

கோலம் போடும் இரு விரல்களும் நகர்த்தி நகர்த்திப் போடுவதை விரல் நர்த்தனம் ஆடுவதுபோல் இருக்கும். கோலமிட்ட வாசலை ‘திருமருவும் வாசலிது. சிற்சபை தன் வாசலிது. கருணையுடன் நடம் செய்யும் கனகசலை வாசலிது’ என்று கும்பேசர் குறவஞ்சி அழகுறச் சொல்கிறது. பெண்களின் கிரியை என்று புராணம் சொல்கிறது. பெண்ணின் நன்மை தீமைகளைக் கருதிச் செய்யப்படும் கிரியை என்று புராணம் சொல்கிறது. பெண்ணின் நன்மை தீமைகளைக் கருதிச் செய்யப்படும் கிரியை என்று அதர்வண வேதம் சொல்கிறதாகச் சொல்வர்.

பாரதியார் ‘வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி’ எனத் தொடங்கி, ‘பலவித வண்ணம் வீட்டைப் பரவ நடத்திடும் சக்தி நிலையமே நம்மனை’ என்று நல்லமனைக்கு இலக்கணம் சொல்கிறார். மனைக்கு மங்களம் கோலம் என்று புரிகிறது. எல்லாவற்றையும்விட பெண்களுக்குச் சிறந்த உடற்பயிற்சி. ‘ஜிம்’மின்றி ‘ஜம்’மென்ற இருக்கலாம். இவ்வளவு உயர்வானது பெண்கள் அன்றாடம் வாசலில் போடும் கோலத்துக்கு இருக்கிறது. சிலர் அவசர அவசரமாக கோலம் போடுவதுண்டு.

கோலம் போடுவதால் என்ன நன்மை:- இறை அருள் கிட்டுகிறது. பொறுமை, கற்பனைத் திறன், பெருமிதம், சந்தோஷம் ஏற்படுவதால் யோகப்பயிற்சி மாதிரி ஆகிறது.

எங்கெல்லாம் போடலாம் என்றால் வாசற்படியில் அவசியம் கோலம் போட வேண்டும். லட்சுமி வாசமும் லட்சுமி நரசிம்மன் வாசமும் வாசற்படிதான். அடுப்பு மூட்டுமுன் அடுப்பில் கோலம் (தற்போது காஸ் அடுப்பானாலும்) போட வேண்டும். ஏனெனில் அடுப்பு அக்னி சம்பந்தப்பட்டது. கல்யாண வீடுகளில்கூட சமையல்காரர்கள் கோலம் போட்டு கண்களில் ஒற்றுக்கொண்ட பின்னர்தான் சமையலே ஆரம்பமாகும். ஏராளம் பேர் உண்ணும் இடமாயிற்றே!

ஒற்றை இழையில் கோலம் போடுவது கூடாது. அபசகுனம், துக்கம் நேர்ந்த வீட்டில் கோலம் பத்துநாள் போடக்கூடாது. வீட்டு வாசலில் கோலம் இல்லாவிடில் தவறாக நினைக்கத் தோன்றும். இரட்டை இழையில்தான் கோலம் போட வேண்டும். இவையெல்லாம் சாதாரண நாட்களுக்கு உள்ள சாஸ்திரம்.

தீபாவளி, கார்த்திகை (விளக்கு வைக்கும் பலகையில்) அன்று பலகையில் கோலமிட்டே உட்கார வேண்டும். திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளிலும் பலகையில் மாக்கோலம் போடுவர்.

மார்கழி மாதம் பிறந்தால் மங்கையர்களுக்குக் குஷியான மாதம். கண்ணுக்கு இனிய மாதம். கண்ணனுக்கு உகந்த மாதம். பீடை மாதம் என்பது தவறு. பீடையைப் போக்கும் பீடுடைய (பெருமை, வலிமை) மிகுந்த மாதம். வார்த்தை சிதறி பீடை என்ற சொல் வந்துள்ளது. சிவ, விஷ்ணு பெருமைகள் பேசும் மாதம் – மார்கழியில் மட்டும் வீதியில் பிரமாதமான கோலங்களைப் பார்க்கலாம். காரணம் பஜனை கோஷ்டி (அடியவர்கள்) வரும் வீதிகள். இறைவன் திருஉலா வரும் வீதி. ஆகவே, அவர்கள் போடும் கோலங்களைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும். வீதி நிறைந்து கோலங்களை அழிக்காமல் நடக்க வேண்டும் என்ற உணர்வு வரும்.

வண்ணமயமான கோலங்கள், செங்காவியிட்ட மரபு கோலங்கள், வீதிகளில் போடுவதால் பசுஞ்சாணம் தெளித்துப் பெருக்கியபின் கோலம் பளிச்சென்று இருக்கும்.

கோலத்தின் நடுவே பூஷணி, பரங்கிப் பூ வைப்பர் (இது முன் காலத்தில்) தற்போது காண்பது அரிது. ஆனாலும் பாமர மக்கள் ஏதாவது பூ வைக்கி்ன்றனர். வாசற்படி ஓரத்தில் இருபுறமும் மண் அகலும் எரியும். அந்தக் காலத்தில் பூசணிப் பூ நடுவில் இருந்தால் அந்த வீட்டில் கன்னிகை இருக்கிறாள் என்பதை உணர்த்த என்று எனக்கு வேலை செயெயும் பெண்மணி (50 வருட முன்) கூறிய விஷயம்.

சாதாரணமாக கோலக் கலை புராதனமானது. தபம் செய்பவர் குடிலில் சுவற்றில் சாணம் பூசி காவியால் கோலம் போட்டு விடுவர். யாகம், யக்ஞம் நடக்கும் இடத்தில் யாக குண்டங்களுக்குக் கோலம் போடுவது உண்டு. பிறகுதான் யாகம் தொடரும்.

கைவிரல்களால் மணலில் மங்கையர் வரைவதை ‘கூடல் இழைத்தல்’ (நினைத்த காரியம் நடைபெற) என்பர். நாச்சியார் திருமொழியில் ‘ஆண்டாள் கூடலிழைக்கும்’ பாசுரம் வருகிறது.

தங்கள் உடம்பில்கூட இலைச்சாறு கொண்டு சித்திரம் வரைவார்கள். இதற்கு ‘தொய்யல்’ கலை எனப் பெயர். இன்று ‘டாடூ’ என்று உடம்பு முழுவதும் வரைந்துகொள்கிறார்கள்.

மார்கழிக் குளிரில் கைகால் சுரணையின்றி இருக்கும். வைகறையில் எழுந்து கோலம் போடும்போது ரத்த ஓட்டம் ஏற்படும். சுறுசுறுவென்று குளித்துக் கோயில் போகவும் தோன்றும்.

கோலக் கலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேத காலம் தொட்டே இருந்து வளர்ந்து வளர்ந்து வந்துள்ளது.

மாக்கோலம் (அரிசி மாவு அரைத்து), வெறும் அரிசி மாக்கோலம், பூக்கோலம், நீரில் போடும் கோலம் என்று பெண்கள் கற்பனைத் திறன் நாளுக்கு நாள் விரிவாகிறது.

பகவத் சன்னிதானத்தில் தாமரைக் கோலம், அவரவர் மரபுப்படி படிக்கோலம் போட்டு அதன்மேல் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

பழைய காலத்தில் பசும் சாணம் பச்சையாக இருக்கும். விஷ்ணுவைக் குறிக்கும். அரிசி மாவு வெண்மை – சிவன் – செங்காவி பிரம்மா ஆக மும்மூர்த்தியைக் கோலம் உணர்த்துகிறதாம்.

தேசியக் கொடியிலும் மூவர்ணம் உண்டு. இது கூட மும்மூர்த்தியைக் குறிப்பிடுகிறது. மொத்தத்தில்  கோலம் என்பது நம் பண்பாட்டை விளக்கும் ஒரு சாதனம் எனலாம்.

புது மாதிரி கோலம்

பளிச் சென்ற புதிய எவர்சில்வர் தட்டில் சிறிது நல்லெண்ணை விட்டு தட்டு பூரா பரவும்படி விரலால் தடவவும். மஞ்சள் பொடி (அல்லது ஏதாவது நல்ல கலர் பொடியை) எல்லா இடங்களிலும் ஒட்டும்படி நன்கு தூவவும். பிறகு தட்டைக் கவிழ்த்தால் அதிகம் உள்ள பொடிகள் உதிர்ந்துவிடும். பிறகு ஒரு தீக்குச்சியால் கோலமோ, பிடித்த டிஸைன் வரையவும். விளக்கு ஒளி (எலக்டிரிக் விளக்கு) அடியில் வைத்தால் போட்ட கலர்ப்பொடி நடுவில் எவர்சில்வர் பளீரென மின்னும் கோலம் தெரியும். அப்படியே இருக்கும். மஞ்சள் பொடியானால் உடம்பு பூசிக்கொண்டு வேறு கோலமும் போடலாம். உலர வைத்த காபிப்பொடிகூட நன்றாக இருக்கும்.

மாவு கோலம் போடும்போது பட்டையாகப் போடுங்கள். தீக்குச்சியால் நடுவில் இழுத்துக்கொண்டே போனால் அது ஒருமாதிரி அழகு தரும்.

குழந்தைகளுக்குப் புள்ளிக்கோலம் மூன்று புள்ளிக்கோலம் (கிட்டத்தட்ட 63 வரும்) அறுபத்தி மூவர் கோலம் என்று பெயர். (நான் கோல வகுப்பில் கற்றுக் கொண்டேன்.)  இதையே மேலே புள்ளி, இடைப்புள்ளி என்று சேர்க்கச் சொல்லி டெவலப் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com