வீட்டை விசாலமாக்கும் வழிமுறைகள்!

வீட்டை விசாலமாக்கும் வழிமுறைகள்!

வீட்டை விசாலமாக காட்டுவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது வீட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். தேவை இல்லாத கட்டில், பீரோ என்று பழைய பொருட்களை தினந்தோறும் வீதியில் கூறிக் கொண்டு வரும் பழைய பொருட்கள் வாங்குபவர்களிடம் கொடுத்து, புதியதாக வீட்டிற்கு வேண்டியதை வாங்கி அழகு படுத்தலாம். இதனால் வீட்டில் குப்பையும் சேராது. வீடும் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக, அழகா இருக்கும். இதனால் வீட்டில் சமைப்பதில் இருந்து எந்த வேலையையும் சட்டென்று செய்து முடித்து விடலாம். வேலை செய்வதற்கு சோம்பலும் வராது அதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் இதோ:

வால்பேப்பர்:

முதலில் வீட்டு சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள அகலத்தை அதிகரிக்கும். 

விளக்குகள்:

பிரகாசமான விளக்குகள் சிறிய அறையைக் கூட பெரிதாகக் காட்டும் மாய  தோற்றத்தை உருவாக்கும். பளிச்சிடும் ஷான்ட்லியர் விளக்கை ஹாலில் மாட்டலாம். சுவர்களில் நிறைய எல்இடி விளக்குகள் பொருத்தி அறையை பளிச்சிட செய்யலாம். எல்இடி விளக்குகள் குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தருகின்றன. 

வண்ணம்:

மென்மையான நிறங்களில் பெயிண்ட் அடிப்பது உங்கள் வீட்டை பெரிதாக்கி காட்ட உதவும். வெள்ளை, இளமஞ்சள் வெளிர் நீலம் போன்ற வண்ணங்களை பயன் படுத்துங்கள். மேற்கூரைக்கு வெண்மையே சிறந்தது. அது அறையில் உயரத்தை அதிகமாக்கி காட்டும். மேற்கூரையும் சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பாடர் போல வால்பேப்பர் ஒட்டுவது அறையில் அகலத்தை இன்னும் அதிகமாக்கி காட்டும். 

மடக்கு டேபிள்;

சுவரில் மடக்கி வைக்கும் டைனிங் டேபிள் வாங்கி வைக்கலாம். சாப்பிடும்போது விரித்து  வைத்துக் கொண்டால், முடித்ததும் மடக்கி சுவரோடு சுவராக பொருத்தி விடலாம். மடக்கிய அதில் அழகான வால்பேப்பர் ஒட்டி வைத்தால் அதுவும் ஒரு அலங்காரம் ஆகிவிடும். 

டைனிங் சேர்களை ஒன்றின் மீது ஒன்று என்று வைக்கும் விதமாக வாங்கினால், மொத்தமா அடுக்கி ஒரு மூலையில் வைக்கலாம். டைனிங் டேபிளுக்கான மொத்த இடமும் மிச்சமாகும். 

சோபா -கம்- பெட்:

லவித பயன்பாடுகளைக் கொண்ட பர்னிச்சர்களை பயன்படுத்தலாம். சோபாவுக்கு பதிலாக சோபா -கம்- பெட் வாங்குவது நல்லது. பகலில் சோபாவாகவும் இரவில் படுக்கையாகவும் அது பயன்படும். அதுவும் இடத்தை அடைக்கிறது எனில், மடக்கி வைக்கும் நாற்காலிகளை வாங்கலாம். யாராவது வரும்போது மட்டும் விரித்து வைத்து பயன்படுத்தலாம். பெரிய சோபாக்கள் கை வைத்த ஆடம்பர நாற்காலிகளை தவிர்ப்பது நல்லது. 

சுவர் அலமாரி:

பெட்ரூமில் இப்படி சுவர் அலமாரி அமைத்து துணிகளை அடுக்கி வைக்கலாம். கடையில் வாங்குவதாக இல்லாமல் நாமே அமைப்பது என்பதால் எந்தெந்த துணிகளை வைக்க, எப்படி இட வசதி செய்யலாம் என்பதை நாமே தீர்மானித்து இடத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும் சுவர்களில் கப்போடுகள் அமைத்து அவற்றை பொருட்களை ஸ்டோர் செய்யும் இடமாக, புத்தக அலமாரியாக பயன்படுத்தலாம். திறந்த கபோர்டு ஆக இருந்தால் அதில் தூசி சேரும் பூச்சிகள் கூடும் கதவுகள் அமைத்து சுவர் அலமாறியாக இதை ஆக்கலாம். 

ட்ரெஸ்ஸிங் டேபிள்:

ட்ரெஸ்ஸிங் டேபிளையும் இப்படி பயன்படுத்தலாம். கண்ணாடிக்கு பின்னாலும், அடியிலும் அதிலேயே அடுக்குகள் அமைத்து மேக்கப்  அயிட்டங்கள் அனைத்தையும் அடுக்கி வைக்கலாம். 

சமையலறை:

மையலறையிலும் நிறைய ஸ்டோரேஜ் வசதிகள் செய்யலாம். சமையல் மேடைக்கு கீழும் எதிர்ப்புற சுவரிலும் சுவர் அலமாரிகள் அமைத்து பாத்திரங்கள், உணவு பொருட்களை தனித்தனியாக வைக்கலாம். எப்பொழுதும் புகை செல்லும் இடம் என்பதால் மூடிய அலமாரிகளாக இவற்றை அமைப்பது நல்லது. கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன் என எல்லாவற்றையும் வைப்பது போன்ற அடுக்கு டேபிள் இருந்தால், நிறைய இடம் அடைக்காது. சுவர்களில் ஹோல்டர் அமைத்து வாணலி, தோசைக் கல், வடிகட்டிகள், சல்லடை போன்றவற்றை மாட்டலாம். 

கம்ப்யூட்டர் டேபிள் தனியாகவும் ஸ்டடி டேபிள் தனியாகவும் வாங்குவதை தவிர்த்து இரண்டையும் இணைத்ததாக வாங்கலாம். கம்ப்யூட்டர் வைக்கவும் அதற்கு மேல் அடுக்குகளில் புத்தகங்கள் வைக்கவும் இதை பயன்படுத்தலாம். தேவைப்படும் போது கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங்களில் படிக்கவும் எழுதவும் பயன்படுத்தலாம் .

டிவிக்கு என தனியாக ஸ்டாண்ட் தேவையில்லை. எல். சி. டி அல்லது எல்.இ.டி டெலிவிஷன்கள் வாங்கினால் சுவரிலேயே பொருத்திக் கொள்ளலாம். ஹாலில் மற்ற பொருட்களை வைப்பதற்கு, சுவரிலேயே அதுக்கும் அலமாரி செய்து அதற்கு மத்தியிலேயே டிவி பொருத்தலாம். உயரமான இந்த கப்போர்டு பல அடுக்குகளை கொண்டதாக அமைந்தால் ஏராளமான பொருட்களை இதனுள் வைக்க முடியும் .செய்தித்தாள்கள் அடுக்கி வைக்கலாம். பாய்கள், தரை விரிப்புகள் பயன்படுத்தாத போர்வைகள், கம்பளங்கள், டீ கப்கள், குடைகள், மருந்துகள் என சகலமும் இதில் வைக்கலாம். 

இப்படி சிக்கனமாக இடத்தை பயன்படுத்தி குடும்பத்தினர் புழங்குவதற்கு நிறைய இடத்தை மிச்சப்படுத்தலாம். அதன் பின்னும் வீட்டை விசாலமாக காட்டுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. அறையில் ஜன்னல் இருக்கும் சுவருக்கு எதிர் சுவரில் வெளிர்நிறத்தில் அழகான வால்பேப்பர் ஒட்டுங்கள். அந்த சுவரில் கண்ணாடி பொருத்துங்கள். ஜன்னலின் பிம்பம் கண்ணாடியில் பட்டு அறையில் மற்றொரு ஜன்னல் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். இது அறையை பெரிதாகக் காட்டும். 

இதுபோல் ஒவ்வொரு அறையையும் பெரிதாக்கி, அழகானதாக்க திட்டமிட்டு செயல்பட்டால், சிறப்பானதாகி  விடும். மாறுதலை புரிந்து கொண்டால் மாற்றம் நிகழ்ந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com