மனம், உடல் சார்ந்த பிரச்சினைக்கு சிகிச்சையாகும் ஜென்டாங்கிள் ஓவியங்கள்!
ஜென்டாங்கிள் என்பது தியானமும், கலையும் சேர்ந்த அழகான ஓவியம். இதன் சிறப்பு இந்த வகை ஓவியங்களை எவரும் சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.
இவை குறியீட்டு வகை ஓவியங்கள். இவற்றை வரையப் பயன்படுத்தும் 9.9 செ.மீ நீளமுள்ள, அகலமுள்ள பேப்பரை டைல்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரே மாதிரியான வடிவங்களை பென்சில் அல்லது கருப்பு நிற மை நிரப்பப்பட்ட மெல்லிய பேனாக்களால் வரைய வேண்டும். இவற்றை வரையும் போது ரப்பர் பயன்படுத்துவதில்லையாம். வரையும்போது நேரும் தவறுகள் புதிய கற்பனைக்கு இட்டுச் செல்லும் என்பது ஜென்டாங்கிள் தத்துவம்.
ஓவியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லாமல் குறுகிய நேரத்தில் ஒரு ஓவியத்தை வரைந்து விட முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். இதனை வரைய ஆர்வமும், கொஞ்சம் கற்பனைத் திறனும் இருந்தால் போதும். வேறு எந்தவித திறமையும் தேவையில்லை. எந்த வயதினரும் எளிதில் வரையத் கற்றுக் கொள்ளலாம்.
ஜென்டாங்கிள் ஓவியங்கள் வரைவதால் கிடைக்கும் நன்மைகள்:
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதனை பழக மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியைச் பெறலாம். எந்த விஷயத்தையும் ஃபோகஸாக செய்யும் ஆற்றல் கிடைக்கிறது.

* மனப்பதற்றம், பயம், சோர்வு போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மனநலனை ஜென்டாங்கிள் ஓவியங்கள் மேம்படுத்துவதாக ஆராய்ந்து சொல்லியுள்ளனர்.
* ஜென்டாங்கிள் ஓவியங்கள் ஒருவருடைய மனதின் விழிப்புணர்வை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
* மனம் மற்றும் உடல் சார்ந்த பல நோய்களுக்கு இதனை சிகிச்சையாகக்கூட பரிந்துரைக்கலாம்.
* தூக்கமின்மை, ஹைபர் ஆக்டிவிட்டி, கவனச்சிதறல், வலி, டென்ஷன் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்தக் கலை தீர்வாக இருக்கும்.
* ஜென்டாங்கிள் ஓவியங்களில் எளிதாக இருக்கும் டிசைனை கவனத்துடனும், ஆர்வத்துடனும் வரையும் போது தியானம் செய்யும் போது கிடைக்கும் மன அமைதி, புத்துணர்ச்சியை தருகிறது.
* புள்ளி, வட்டம், எஸ் வடிவ கோடுகள் வளைவுகள் மற்றும் பல்வேறு கோடுகள் என்ற ஐந்து அடிப்படை வடிவங்களை உள்ளடக்கிய இந்த ஓவியங்களை வரைவதன் மூலம் கற்பனைத் திறன் மேம்படும்.
மொபைல் பயன்பாட்டைக் குறைக்க வைத்து நம் வீட்டு பிள்ளைகளுக்கு இந்த ஜென்டாங்கிள் ஓவியத்தை பழக்கி கொடுக்க அவர்களது தனித்திறமை மேம்படும். எந்த வயதினருக்கும் ஏற்ற இவை பயனுள்ள கலைவடிவம் ஆகும்.