0,00 INR

No products in the cart.

லோக க்ஷேமத் திருநாள் தீபாவளி!

ஆர்.ஜெயலெட்சுமி

மஸோ மா ஜ்யோதிர் கமய’ என்பது வேத வாக்கியம். ‘இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்’ என்பது இதன் பொருள். நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகி, ஞான ஒளி பிரகாசிக்கத்தான் இறைவனை தீப ஒளியில் கண்டு வணங்குகின்றோம். அந்த வகையில், மனிதன் தமது அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் திருநாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் பார்வையில் இத்திருநாளில் ஏற்றப்படும் தீபங்களும், விடப்படும் வான வேடிக்கைகளும் நாட்டின் சுபிட்சத்தைக் காட்டும் குறியீடுகளாக விளங்குகின்றன.

சைவமும் வைணவமும் தோளோடு தோள் சேரும் திருநாள் தீபாவளி பெருநாளாகும். ஐப்பசி மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தின அருணோதய காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், நரகாசுரனை வதம் செய்தார். மறுதினம் அமாவாசை அன்று விடிந்தபோது உலகிற்கு விடிவு காலமாயிற்று. கிருஷ்ணபட்ச சதுர்த்தசி பரமசிவனுக்கு மிக உகந்த நாள். மாதந்தோறும் வரும் அந்தத் திதிக்கு, ‘மாத சிவராத்திரி’ என்று பெயர். ஆக, பகவான் கிருஷ்ணர் ஐப்பசி மாத சிவராத்திரியில் போர் செய்து நரகாசுரனை வதம் செய்தார். ‘லோக க்ஷேமம்’ என்ற நிலை ஏற்பட்டால், புத்ரவாசத்தையும் பெரியோர்கள் ஒதுக்கி விடுவர் என்பதை பூமா தேவியின் அவதாரமான சத்யபாமா நிரூபித்திருக்கின்றாள். நரகாசுர வதம் முடிந்ததும், அவனது தாய் சத்யபாமா தனது மகனை, மக்கள் எப்போதும் நினைவுகொள்ளும் வகையில் அதை, தீபாவளி பண்கையாகக் கொண்டாட வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள்.

அதேபோல் நரகாசுரனும், கிருஷ்ண பரமாத்மாவிடம் வரம் கேட்கும்போது, “பகவானே, என் நினைவு நாளில் எல்லோருடைய வீட்டிலும் உள்ள நீர், கங்கா தீர்த்தமாக மாற வேண்டும்” என்று கேட்டானாம். கிருஷ்ண பரமாத்மாவும், “அப்படியே ஆகுக” என்று வரம் கொடுத்தாராம். ஆண்டவன் கட்டளையின்படி ஆகாச கங்கை அனைவருடைய இல்லங்களில் இருக்கும் நீரில் அன்று கங்கா தேவியாக எழுந்தருள்கிறாள் என்பது புராணச் செய்தி.

தீபாவளியன்று அருணோதய நேரத்தில்தான் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம். அருணன் என்பவன் சூரிய பகவானின் தேரோட்டி. இவனது நிறம் சிவப்பு. சூரியன் உதிக்க ஒரு முகூர்த்தம் (இரு நாழிகை) முன்பாகவே அடிவானத்தில் லேசாக சிவப்பு நிறம் பரவ ஆரம்பிக்கும். அந்தக் காலம்தான் அருணோதய காலம்.

தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்தாள். அதனால், தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதில் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும். ‘தீபாவளி பண்டிகையன்று காலையில் கங்கை காவிரி பூஜையும், மாலையில் சத்யநாராயண பூஜையும் அவசியம் செய்ய வேண்டும்’ என்று காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் அருளியிருக்கின்றார்.

இன்று மாலை வீட்டின் பின்புறம் தீபம் ஏற்றுவது வழக்கம். ‘இப்படிச் செய்வதால் எமதர்மனுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். அதனால் அந்த வீட்டில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. மேலும், யாருக்கும் நரக பயம் இல்லை’ என்கிறது பவிஷ்யோத்ர புராணம். ஜோதி ஸ்வரூபமான இறைவனை நாமும் தீப ஒளி ஏற்றி, புத்தாடை அணிந்து வணங்கி ஆனந்தம் பெறுவோம்!

குறிப்பு : வாசகர்களே, இந்தக் கட்டுரையின் இறுதியில் தீபாவளி பண்டிகையின் பெருமை குறித்து, ‘திருப்புகழ்மதிவண்ணன் அவர்கள் நமது கல்கி குழுமத்திற்கு பிரத்யேகமாகத் தந்த சிறப்பு சொற்பொழிவை, ‘வலையொளிவடிவில் கேட்டு மகிழுங்கள்.

தீபாவளிச் செய்திகள்!

திருச்செந்தூர் முருகனுக்கு தீபாவளி சீர்!
தீபாவளி பண்டிகையை அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல், திருச்செந்தூர் முருகனும் அன்று புத்தாடை அணிந்து மகிழ்கிறார். தீபாவளியன்று காலை முருகனுக்கும் கோயிலில் உள்ள அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவர். ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதைத்த நாளில் முருகப்பெருமான் உடலும் உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடப்படுகிறது.

இந்த தினத்தில் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தார். திருச்செந்தூர், தனது மருமகன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே தீபாவளிக்கு சீர் கொடுப்பதாக ஐதீகம்.

பங்காரு காமாட்சிக்கு தீபாவளி படையல்!
ஞ்சை, மேலவீதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் பங்காரு காமாட்சியம்மன். காஞ்சி, காமாட்சியம்மனின் நெற்றியில் இருந்து தோன்றிய சக்தியாக இவள் கருதப்படுகிறாள். தீபாவளியன்று பக்தர்கள் பங்காரு காமாட்சி அம்மனுக்கு முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்களை 11, 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பணக்கஷ்டம் போக்கும் தீபாவளி குபேர பூஜை!
கும்பகோணம் அருகிலுள்ள சிவபுரத்தில் அருளும் இறைவன் சிவகுருநாதர் என அழைக்கப்படுகிறார். பதவி இழந்த குபேரன், இத்தல ஈசனை வழிபட்டு இழந்த பதவியையும் செல்வத்தையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் தீபாவளியன்று நடைபெறும் குபேர பூஜை சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பணக்கஷ்டம் நீங்கி, செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

வசந்தா, சிட்லபாக்கம்

வடநாட்டு தீபாவளி!
lதொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வட மாநிலங்களில் தீபாவளியன்று மகாலட்சுமியை வணங்குவர். அன்று வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர். தீப கடாட்சமாக திருமகள் வீட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்.
lதீபாவளி திருநாளில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சி.
lஉத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் இருப்பர். இதனால் கால்நடை வளர்ப்பு, விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.

பே.சண்முகம், செங்கோட்டை

தீபாவளியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகள்!
lதிருப்பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, திருமாலுக்கு மாலை சூட்டி, அவரது மார்பில் இடம் பெற்ற நாள் தீபாவளி.
lமகாபலி மன்னன் அரியனை ஏறிய நாள் தீபாவளி.
lசிவபெருமானை குபேரன் பூஜித்து பல செல்வங்கள் பெற்றது இந்த நாளில்தான்.
lஸ்ரீராமபிரான் வனவாசம், ராவண வதம் முடித்து அயோத்தி திரும்பிய நாள் தீபாவளி.
lதிருமாலின் வாமன அவதாரம் நடந்த தினம் தீபாவளிதான்.
lமகாவிஷ்ணு நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி.
lவிக்ரமாதித்தன் மன்னனாக முடிசூடிய நாள் தீபாவளி.
lகேதார விரதம் மேற்கொண்டு சக்தி தேவி, சிவபெருமானின் உடலில் சரிபாதியைப் பெற்றது இந்த நாளில்தான்.
lகாளி தேவி 64,000 மோகினிகள் புடைசூழக் காட்சி தந்தது தீபாவளி திருநாளன்றுதான்.

                                                                                      – மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால் 

        

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தகனத் திருவிழா!

0
- எம்.கோதண்டபாணி தென்றலெனும் தேரை கொஞ்சும் கிளிகள் இழுத்து வர, ரீங்காரம் பாடும் வண்டுகள் உடன் அணிவகுக்க, ரதி தேவியுடன் உல்லாசமாக இச்சை வீதியில் பவனி வருபவன் காதல் கடவுளாம் மன்மதன். கரும்பு எனும்...

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...