0,00 INR

No products in the cart.

லொள்ளுக்கு பின்னால ஒரு லவ்வு…!

சிறுகதை

– எஸ். ராமன்
ஓவியம் : தமிழ்     

 

“முக்காடு போல், பேப்பரால் முகத்தை மறைச்சுக்கிட்டு, அக்கப்போரான செய்திகளை, நாள் முழுக்க விழுந்து  விழுந்து,  படிச்சது போதும். குடும்ப  விவகாரங்களிலும்  கொஞ்சம் கவனம் செலுத்துங்க…” வழக்கமான  அதிகார  குரலுடன்,  நான் படித்துக் கொண்டிருந்த என் அருமை
செய்தித்தாள் கம் கேடயத்தை  என்னிடமிருந்து பிரித்து, அதை  பிடுங்கி எறிய வந்தாள் மனைவி. அந்த துல்லிய தாக்குதலில், செய்தித்தாள் கிழிந்து, அதன் வழியாக என் அழகிய(?) முகத்தை  தன்  கோபப் பார்வையாலேயே கிழித்தவள், என் எதிரில் சேரை இழுத்துப்  போட்டுக்கொண்டாள்.

அவளுடைய அந்த ஸ்டேட்டஸ், ஏதோ குறுக்கு விசாரணைக்கு அவள் தயாராகிறாள் என்பதை உணர்த்தியது. அத்துடன், என்னை ஏதோ வம்புக்குள் இழுக்கப் போகிறாள் என்பதும் புரிந்தது.

“வெளிய போயிட்டு வந்தவ, ஏன் என் மேல, வள்…வள்னு எரிஞ்சு விழறே…?” என் நாக்கு ஆடியது.

“உங்க குடும்பத்தில யாராவது, உடம்பில், புள்ளியோட இருக்கிற மிருகம் எதையாவது இம்சை படுத்தியிருக்காங்களா..?” – உட்கார்ந்திருந்தவள், எழுந்து, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே,  தன் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தாள்.

“அந்த புள்ளி விவரக் கணக்கெல்லாம் எனக்கு தெரியாது…இதை ஏன் திடீர்னு கேக்கற…?”

“உங்களுக்கு இன்னும் கல்யாண ஆசையே வரலையா..?” வழக்கம்போல், ட்ராக் மாறினாள்.

“இத்தனை வயசுக்கப்புறமாவா…அதுவும் நீ ஒத்துக்கணுமே…”

“அடச்சீ… உங்களைப் பற்றி  பேசல… 25 வயசில், உங்களுக்கு  ஒரு பொண்ணு இருக்கா… அவளுக்கு இன்னும் கல்யாணம்  ஆகலைங்கற  விஷயம் தெரியுமா… தெரியாதா..? எங்க வம்சத்தில் இதுவரை, யாருக்கும் காதல் கல்யாணம் கிடையாது. அந்த பாரம்பரியத்தை, நம்ம பொண்ணு விஷயத்திலும் கட்டிக் காக்கணும்…”

“தற்போதைக்கு வேலைதான் முக்கியம்…கல்யாணத்திற்கு இப்ப என்ன அவசரம்னு உன் எதிரில்தானே சொன்னா..?”

“வயசு பொண்ணு சொன்னா, அப்படியே விட்டுட்டு, படிச்ச பேப்பரையே திரும்ப படிச்சு, ரிவைஸ்  பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருப்பீங்களா… எதிர்த்த வீடு, பக்கத்து வீட்டு பெண்களுக்கெல்லாம், போன வருஷமே கல்யாணம் முடிஞ்சுடுச்சுனு தெரியுமில்ல..”

“நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னு வருத்தப்படறியா… இல்ல… அந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு வருத்தப்படறியா..?” இது ஒரு லொள்ளுன்னு தெரிந்தும், என் வாய் சும்மா இருக்க மறுத்தது.

“வாயைக் கழுவுங்க… உங்க குடும்பத்துக்குத்தான் அப்படியெல்லாம் கொடூர எண்ணங்கள் வரும்…”

“கொரோனாவுக்கு கையைத்தான் கழுவச் சொல்றாங்க…நீ வாயைக் கழுவச் சொல்றே… அதையும்  செய்துட்டால் போச்சு…”

“உங்களை எவ்வளவு கழுவி ஊத்தியும், இந்தக் கொழுப்பு பேச்சு குறைய மாட்டேங்குதே… இவ்வளவு  பேசறீங்களே… நான் சொல்றதை செய்து காட்டுங்க… அப்புறம் உங்க பராக்கிரமத்தை ஒத்துக்கறேன்…”

உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, என்னை வேலை வாங்குபவளின் இன்னொரு ஸ்பெஷல் உசுப்பல் யுக்தி இது என்பது புரிந்தது. ஆனால், அவள் கொடுத்த வேலையை முழுவதும் செய்யாமல், என்னை விடமாட்டாள் என்பதும் தெரியும்.

“எதுவா இருந்தாலும், இந்த சுண்டு விரலால தட்டிடுவேன்…வேலை என்னன்னு சொல்லு. அப்புறம் பாரு… ஐயாவின் பராக்கிரமத்தை…நௌ வெல்கம் டு யுவர் அறிவிப்பு…”

“வெல்கம் இல்லை… வள்கம்னு  சொல்லுங்க…”

அவள் பேசியதில், எனக்கு காலும் புரியவில்லை… வாலும் புரியவில்லை.

அதற்குள் போன் மணி அடித்ததும், எடுத்து பேச ஆரம்பித்தவள், வெகு நேரம் பேசிவிட்டு, என் பக்கம் திரும்பினாள்.

“யாரும்மா போன்ல…?  பொறுமை இழந்து கேட்டேன்.

“ராங் நம்பர்… ஒரே க்ராஸ் dog வேற… போன்ல, புயல் காற்று அடிக்கற மாதிரி, நாய்ஸ் அதிகமா வந்ததால, என்ன பேசறாங்கன்னே புரியல…”

“ராங் நம்பருக்கே இப்படின்னா…, ரைட் நம்பருக்கு சொல்லவே வேணாம்…” வெகு நாட்களாக நான் சொல்ல தயங்கியதை ஒரே ஷாட்டில் புயலாக வெளிப்படுத்தி, புயலுக்கு பின்னான, விளைவுகளை  எதிர்க்கொள்ள  தயாரானேன்.

“அது என் பேச்சுரிமை… அதுக்கு வானமே எல்லை…”

“அது பாலச்சந்தரின் ஹிட் படமாச்சே…ஹூம்…இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு…என் கிரக நிலைமை சரியில்லைன்னு நினைக்கிறேன்…”

“நான் சொல்ல வந்ததை சொல்லவிடாமல், இத்தனை நேரம் இழு இழுன்னு இழுத்துட்டு, கிரக  சப்ஜெக்ட்டை, நீங்களே இப்பத்தான் ஹிட் பண்றீங்க…”

“சப்ஜெக்டா…நீ  இப்ப என்ன சொல்ல வர…?”

“எதிலேயும், ஒரு நம்பிக்கை வேணும்…” எதையும் அரைகுறை(ரை)யாக சொல்லி, சஸ்பென்ஸை கூட்டுவதில் அவள் வல்லவள்.

“எதை நம்பணும்..?”

“ஜோசியர் சொன்னதை…” அவள் க்ளூ கொடுத்ததும், என் மண்டையில் பல்ப் எரிந்தது.

“கட்டம் போட்ட புடைவை கட்டிக்கிட்டு கிளம்பும் போதே, ஜாதக விஷயமாகத்தான்  இருக்கும்னு  கெஸ்  பண்ணேன்… அது கரெக்டா ஆயிடுச்சு… ஜோசியரை பார்த்துட்டு வரயா… என்ன சொன்னாரு..?”

“நம்ம பொண்ணு ஜாதகத்தில், கோளாறு இருப்பதால்தான், கல்யாணம் தாமதம் ஆகுதாம். அதுக்குக் காரணம், உங்க குடும்பத்தில் ஒருத்தர், தான் வளர்த்த மிருகத்திற்கு சாப்பாடு போடாமல், கொடுமை படுத்தியிருக்கார். அந்த மிருகத்தின் உடலில், சில புள்ளிகள் இருந்துச்சாம்னு, புள்ளி விவரத்தோடு சொன்னார். அதுக்கு பரிகாரமா, நீங்க நாயா அலையணும்… சாரி நாயைத் தேடி அலையணும்..”

“ஏன்… யாரோட நாய் தொலைஞ்சு போச்சாம்..?”

“இந்த மாதிரி கேலி பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. சனிக்கிழமை அன்றைக்கு, வறுமையில் இருக்கிற  ஒரு நாயை விருந்தாளியா நினைச்சு, உங்க கையால, அவருக்கு  லஞ்ச் சர்வ் பண்ணனும்.  உங்க முகம் அவருக்கு தெரியாம பார்த்துக்கணுமாம்..!”

“நல்ல வேளை… சிறுத்தைகளுக்கு சிற்றுண்டி வைக்கணும்னு சொல்லாம விட்டாரே… நான் தப்பிச்சேன்… நாயை ஈஸியா ஃப்ரண்டு புடிச்சுடலாம்.”

“ஆமா…உங்களுக்குத்தான் கண்ட நாய்ங்க ஃப்ரண்ட் ஆச்சே… அப்புறம் இண்ணொன்னு… இதைப் பற்றி, உங்க பொண்ணுக்கிட்ட மூச்சு விடாதீங்க. அவளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது.”

“அனாவசியமா என் ஃப்ரண்டுகளை வம்புக்கு இழுக்காதே. அப்புறம், நம்ம பொண்ணோட பேசும்போது, பேசி’னாய்’, சொன்’னாய்’ போன்ற வார்த்தைகளைக் கூட யூஸ் செய்ய மாட்டேன்…”

“இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமா வேறு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.”

பத்து பாத்திரம் தேய்ப்பதைக் கூட, ’ப்ராஜெக்ட்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள்.

“புள்ளியை வச்சு, வேறு ஏதாவது கண்டிஷன் இருக்குமே..?’ ஒரு யூகத்தில் அடித்து விட்டேன். பரிகாரத்தில் புள்ளி விவரம் விட்டுப் போனால், தயவு தாட்சண்யமின்றி, ‘ரிபீட் கமாண்ட் பிறக்கும்’ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

“கரெக்ட்… அது எனக்கு மறந்துடுச்சு… விருந்தாளிக்கு  உடம்பில் புள்ளிகள் இருக்கணும்…” பரிகாரம் என்றதும்,  விருந்தினருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்தாள். அந்த பரிகாரத்தை செய்து முடிக்கவில்லை என்றால், கொஞ்ச நஞ்சம் எஞ்சி இருக்கிற என் மரியாதை, பறி போய்விடும் அபாயம் உண்டு என்பது எனக்கு தெரியும். ஆகவே, வேறு சாய்ஸே இல்லை என்று தோன்றியதால், களத்தில் இறங்கினேன்.

முதலில் வீட்டுக்கு அருகில் இருக்கும் தெருக்களில், நாயாய் அலைந்து, ஒரு ப்ராஜெக்ட் சர்வே எடுத்தேன். முதல் நாள், சோதனையாக, ஒரு நாய் கூட கண்ணுக்கு தென்படவில்லை. ‘நாலு தெரு தள்ளி, உறவுக்கார பொண்ணு பிரசவச்சிருக்கா…அவளைப் பார்த்துட்டு, அப்படியே பக்கத்தில் இருக்கிற பார்க்கில் கொஞ்ச நேரம் நடந்துட்டு, பொழுது சாயும் நேரத்திற்குத்தான் வருவாங்க…என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் சிரிக்காமல்  சொன்னதை நம்புவதா, வேண்டாமா என்று புரியவில்லை. அவர் என்னை கலாய்ப்பதாகவே எனக்கு தோன்றியது.

விடா முயற்சியுடன், மறுநாள், தெருவின் மூலை முடுக்குகளில் சுற்றி திரிந்ததில், சில லொகேஷன்களில்  நாய்கள் கண்ணில் தென்பட்டன.  தகுதியான (!) இரண்டை தேர்ந்தெடுத்து, செல்லில் போட்டோ எடுத்ததும், சொல்லி வைத்தாற் போல், என்னைப் பார்த்து, அவைகள் குரைக்க ஆரம்பித்தன. வறுமையில் இருப்பதாக, அவைகளைக் குறைத்து மதிப்பிட்டது, என் தப்புதான் என்று சமாதானம் செய்து கொண்டேன். உடுக்க ஆடை இல்லாமல், இருக்க வீடு இல்லாமல் தெருவில் குடியிருக்கும் நாய்களை, வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பதாகக் கருதுவதில் தவறில்லை என்று, எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன். ”நாளைய விருந்தாளிகளை தவறாக எதுவும் பேசக் கூடாது” என்ற எண்ணத்துடன், என்னைப் பார்த்து குரைத்த நாய்களை எதிர்த்து, வாய்ஸ் எதுவும் கொடுக்காமல், அங்கிருந்து நகர்ந்தேன்.

“உடம்பில் புள்ளி இருக்கணும்…” என்ற மனைவியின் கட்டளை ஞாபகத்துக்கு வர,  புள்ளி போட,  கொஞ்சம் பெயிண்டும் மறக்காமல் வாங்கி வைத்துக் கொண்டேன்.

மறுநாள் சனிக்கிழமை. மதியம்,  டிபன் கேரியரில் சாப்பாடு, இலை, நிழல் குடை, ஜமுக்காளம் ஆகியவைகளை, பிக்னிக் போவது போல், முதுகில் சுமந்துக் கொண்டு, தலையில் தொப்பியுடன், விருந்தினருக்கு லஞ்ச் சர்வ் செய்ய கிளம்பினேன்.

“நீங்க எவ்வளவு மென்மையா நடந்துக்கிட்டாலும், அது உங்களைப் பார்த்து குரைக்கும்… காரணம் இல்லாமல், வள்ளுன்னு விழும்… உங்களைப் பார்த்தும், பார்க்காதது போல், முகத்தைத் திருப்பிக்கும்… அவுங்க குடும்பத்தை சேர்ந்தவங்க அருகில் இருந்தா, உங்களை மதிக்கவே மதிக்காது… அதுங்க எப்படி நடந்துக்கிட்டாலும், உங்க கோபத்தை அதுங்ககிட்ட காட்டாதீங்க. இது பரிகார விஷயம்ங்கறதை நினைவு வச்சுக்குங்க…” மனைவி அறிவுரை  வழங்கினாள்.

“ஆஹா… இந்த சீன், அப்படியே உன் நடவடிக்கைகளோடு ஒத்துப் போகுதே…!” என்றவனைப் பார்த்து முறைத்தாள்.

முதல் நாள் சந்தித்தவரில் ஒருவர்,  ஒரு வீட்டின் கேட்டுக்கு அருகில் தலை வைத்து, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். நிழலில் உட்கார்ந்துதான் விருந்தினர் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்பதால், அவருக்கு மிக அருகில், கலர்  குடையையும், ஜமக்காளத்தையும் விரித்தேன். விருந்தினருக்கு முக அடையாளம் தெரியாமல்  இருக்க, கையோடு கொண்டு வந்திருந்த முக  மூடியை, மாஸ்குக்கு மேல்  அணிந்து கொண்டேன்.

நான் சமீபத்தில் நிலைநாட்டிய குடையின் கீழ் விருந்தினரைக் கொண்டுவர நினைத்து, ‘ச்சூ…ச்சூ…பா…பா…என்று  எனக்குத்  தெரிந்த நாய்  பாஷையில்  அவரை வரவேற்க ஆரம்பித்தேன். அத்துடன், மசால் வடையையும், அப்பளத்தையும், கைகளில் வைத்து நொறுக்கி, டிஸ்ப்ளே செய்து, வரவேற்புக்கு மெருகு ஊட்டினேன். ஆனால், ஆழ்ந்த ஓய்வில் இருந்தவர், என்னைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

“அவரை இங்கே வர சொல்ல முடியுமாங்க…” முகமூடியை  விலக்கி, கேட்டுக்கு வெளியில் நின்றிருந்த வாட்ச் மேனின் உதவியை  நாடினேன்.

“நொறுக்கு தீனியெல்லாம், அவருக்குப் புடிக்காதுங்க..”நறுக்கென்று பதில் சொன்னார் வாட்ச் மேன்.

“அவருக்கு ஃபுல் லஞ்ச் கொண்டு வந்திருக்கேன்…” என்றவனை ஒரு மாதிரியாக பார்த்தார்  வாட்ச் மேன்.

“ஏதாவது பரிகார விஷயமா சார்…இல்லைன்னா, நீங்க இவங்களைத் தேடி எங்க வரப்போறீங்க…” இந்த மாதிரி, பல பரிகார  லஞ்சுகளைப்  பார்த்திருப்பார்  போல.

“ஆமா…அப்படித்தான் வச்சுக்கங்களேன்…கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா…?” நட்போடு பேசினேன்.

“நான் வேண்டாம்னு சொல்ற மாதிரியில்ல பேசறீங்க… அவரு, பன்னிரெண்டு மணிக்கு லஞ்ச் முடிச்சா, அதுக்கப்புறம் நைட்டுதான் சாப்பிடுவார்…”

“ஓ… டயட்டில் இருக்காரா… நடுவில எதுவும் சாப்பிட மாட்டாரா..?”

“அவர் நடுவில உட்கார்ந்து சாப்பிடமாட்டார்… ஒரு ஓரமா உட்கார்ந்துதான் சாப்பிடுவார்…” வாட்ச் மேன் கடுப்பேற்றினாலும், பொறுத்துக் கொண்டேன்.

“யார் கொடுத்தாலும் சாப்பிடுவாரா..?”

“ஊஹும்… அவருக்குன்னு சில ஸ்பான்சர்கள் இருக்காங்க. அவுங்க கொடுத்தால்தான் சாப்பிடுவார்.  ”யாராவது சாப்பாட்டில் விஷம் வச்சுடுவாங்களோ” என்ற பயம்தான் அதற்குக் காரணம்.  நீங்க கொண்டு வந்த சாப்பாட்டை, அவர் முன் வைத்துப் பாருங்களேன்…” என்று விருந்தோம்பலுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பாதி  தூக்கத்தில், கண்களை மூடி, கால்களை நீட்டி சோம்பல் முறித்தவர்  மீது,  தூரத்திலிருந்து சிறிது பெயிண்டை தெளித்து, அவரை ஒரு புள்ளிங்கோ ஆக்கி, ‘இதுவும், பரிகாரத்தின் ஒரு பகுதி’ என்று, முறைத்துப் பார்த்த வாட்ச் மேனின் சந்தேகத்திற்கு,  பதில் சொன்னேன்.

புள்ளி நாயாக மாறியவர், முக்கால் கண் விழித்து, சுற்று முற்றும் நோட்டம் விட்டார். அவருக்கு எதிரில் இலை போட்டு, சாம்பார் சாதத்தை பரிமாற முயற்சி செய்தேன்.

என்னையே, சந்தேகத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், எதையோ கண்டுபிடித்து விட்டது போல், பின்னங்கால்களை தரையில் தேய்த்து, போருக்கு தயாராவது போல்,பற்களை வெளியில் காட்டி, உர்…உர்… என்று இன்ஜினை வாயால் ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்து, தன் கோரப் பற்களை காட்டி, ’லொள்…லொள்’ என்று குரலின் ஸ்தாயியை படிப்படியாக உயர்த்தி என்னை பயமுறுத்த ஆரம்பித்தார்.

“முகமூடி போட்ட திருடன் ஒருத்தர், வீட்டை காவல் காத்துக்கிட்டு இருந்த இவுங்க அம்மாவை விஷம் வச்சு கொன்னுட்டாங்க. அதனால, முகமூடி போட்டவங்களை, இவர் பழிக்கு பழி வாங்கிடுவாரு. அப்படித்தான் அன்னைக்கு ஒருத்தரைக் கடிச்சு குதற இருந்தாரு…பாவம்…அந்த மின் கம்பத்தில் ஏறி, தப்பிச்சார்..!” விருந்தினரின் சோகம் கம் பழி வாங்கும் மெகா சீரியல் கதையைச் சொல்லி, வாட்ச் மேன் தப்பிக்க வழி காட்டினார்.

கோப குரைப்புடன் விருந்தினர் என்னை நோக்கி முன்னேற ஆரம்பித்ததும்,  கால்கள், என்னையும் அறியாமலேயே, மின் கம்பத்தை தேடி ஓடியது.

சிறிது தூரம் தலை தெறிக்க ஓடிய பிறகு, ஒரு குட்டையான கம்பம், என் கண்களுக்கு ஆல்ப்ஸ் மலையாக தெரிந்தது. ஆனால், அதில் நோ வேகன்ஸி போல் தோன்றியது. ஏனென்றால், முகமூடி அணிந்த இன்னொருவர், அதில் ஏற முயன்றுக் கொண்டிருந்தார்.

“ஏதாவது லைன் ரிப்பேர் செய்வதற்காக ஏற்ரீங்களா… அந்த டென்ஷனிலும் அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

“நீங்க வேற… என் உடம்பு ரிப்பேர் ஆகாம காப்பாத்திக்கத்தான்…” என்று பதில் சொல்லி விட்டு, தென்னை மரம் ஏறுவது போல் அவர், சறுக்கி, சறுக்கி விளையாடி, மேல் நோக்கி முன்னேறுவதில் கவனமாக இருந்தது தெரிந்தது.

அதற்குள், விருந்தினர் வெகு அருகில் வந்து விட்டதால், ‘இழுக்காதீங்க…விடுங்க…விடுங்க…’ என்று அலறியும், அவர் காலைப் பிடித்துக் கொண்டு நானும் மேல் நோக்கி முன்னேறினேன். ஆபத்துக்குக் கால் கொடுத்தவருக்கு, மானசீகமாக நன்றி சொன்னேன்.

சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு, சில அடிகள் உயரத்தை எட்டியவுடன், மூச்சு வாங்கியது. கீழ் நோக்கி பார்த்ததில், இரண்டு பைரவர்கள் எங்களை நோக்கி, பற்களை காட்டி, ‘லொள்…லொள்’ என்று  உச்ச ஸ்தாயியில் குரைத்துக் கொண்டிருந்தனர்.

“தயவு செய்து என்னை கீழே பிடிச்சு இழுத்துடாதீங்க…மேலிருந்தவர் என்னிடம் முறையிட்டார்.

“கால் கொடுத்தவரை கை விடமாட்டேன்…” என்று வாக்கு கொடுத்ததும் அங்கே நட்பு மலர்ந்தது.

“மகனுக்கு திருமண தடை விலக, ஜோசியர் நாய்க்கு விருந்து வைக்க சொன்னார்… அதான்… இப்ப என் மனைவிக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை…” கீழே காத்திருக்கும் பைரவர்களை விட, வீட்டில் இருக்கும் மனைவிக்கு அவர் அதிகம் பயந்ததாக தெரிந்தது. எல்லோரும் என்னைப் போலத்தான் என்ற அல்ப சந்தோஷத்தில்  மகிழ்ந்தேன்.

“எனக்கும் அதே கதைதான்..மகள் திருமணத்திற்கு பரிகாரம் செய்ய வந்து, இப்படி மாட்டிக்கிட்டேன்…” என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தேன். மேலும் பேசியதில், இருவரையும், முகமூடியுடன் மலை ஏற வைத்தது ஒரே ஜோசியர்தான் என்று புரிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘லொள்ளுக்குப் பின்னால் ஒரு லவ்வு’ இருப்பது தெரியாமலேயே  இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் மலர்ந்தது…

பழி வாங்க காத்திருந்த பைரவர்கள், மாலை வாக்கிங்கிற்கு பார்க் பக்கம் சென்று, அடிவாரத்தில் அமைதி திரும்பியவுடன், கீழே இறங்கினோம்.

“பரிகார ஆபரேஷன் சக்ஸஸ்” என்று மட்டும் மனைவியிடம் சொல்லி, அவளைப் போலவே, சன்பென்ஸ் வைத்தேன்.

ஒப்பந்தப்படி, ஜாதகப் பரிவர்த்தனைக்குப் பிறகு,  இரண்டு நாள்கள் கழித்து, பெண் கேட்டு, மின் கம்ப நண்பர், மனைவியுடன்  எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்தார்.

பிள்ளையின் விவரங்களை மகளிடம் சொன்னதும், ‘நீங்க பார்த்து எது செய்தாலும் ஓ.கே.தான் என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்தாள்.

“அப்பா ரொம்ப தேங்க்ஸ்…நான் காதலிக்கறவர் இவர்தான். அவுங்க வீட்டிலும் காதல் கல்யாணம்னா ஒத்துக்க மாட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டு இருந்தப்பதான், நீங்க எங்க ரெண்டு பேரையும் எதிர்பாராம சேர்த்து வச்சீங்க..” சாவகாசமாக மகள் ரகசியம் பகிர்ந்ததும்,  ஆச்சரிய இன்டெக்ஸ் அதிகரித்தது.

“வாழ்க்கையில் முதல் முறையா உருப்படியா ஒண்ணு பண்ணியிருக்கேங்கறதை நினைச்சா பெருமையா இருக்கு. ஆனா, இந்த திருமணம் மின்கம்பத்தில்தான் நிச்சயிக்கப்பட்டது..!”

“என்னப்பா… ஷாக்கிங்கா ஏதோ சொல்றீங்க…” ஆச்சரியம் அவள் பக்கத்திற்கு சாய்ந்தது.

நடந்தவைகளை ரகசியமாக சொல்லி முடித்ததும், அங்கு எழுந்த சிரிப்பலைகள் ஓய்ந்து அடங்க வெகு நேரம் ஆகியது.

அத்துடன், சில தெரு நாய்களை தத்தெடுத்து பராமரிக்கவும், அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

2
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...