அன்பு வட்டம்

அன்பு வட்டம்
Published on

நவநாகரிகப் பெண்கள் தனித்து வாழ ஆசைப்படுவது ஏன்?
– ராஜேந்திரன், லால்குடி
சுதந்திரமாக, யாருடைய கட்டுப்பாடுமில்லாமல், தம்முடைய வாழ்க்கையை, தாமே பூரணமாக வாழ விரும்புவதால்தான்! அதன் பெயர் மில்லினியல் விமன் லிபரேஷன். இது ஒரு மேற்கத்தியக் கலாசாரம்தான். இப்போது உலகமெங்கும் பரவியுள்ளது. அப்படி இருக்க, நமது இந்தியப் பெண்களும் ஆசைப்படுவதில் ஆச்சர்யம் இல்லை.

''நான் வளர்கிறேனே மம்மி!'' என்று இளம் பெண்கள் தைரியமாக, தன்னம்பிக்கையுடன் சொல்வதும், ''இட்ஸ் எ பார்ட் ஆஃப் அடல்ட்டிங்… ஆல் தி பெஸ்ட் பேபி!'' என்று பெத்தவங்க மனமுவந்து தன்னந்தனிக் குடித்தனம் வைக்க அனுமதிப்பதும் சகஜமாகிவிட்டது.

எனக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவர், பெங்களூரில் சால்ஸா நடனப் பயிற்சி தருகிறார். அவரது டான்ஸ் ஸ்டூடியோவுக்கும், பெற்றோர் வசிப்பிடத்துக்கும் கிட்டத்தட்ட இருபது கி.மீ. தூரம். தினமும் கடும் வாகன நெரிசலில் பயணப்படுவது சாத்தியமா? மகளின் திறமைக்கு முட்டுக்கட்டை போட விரும்பாத பெற்றோர், "எங்கிருந்தாலும் வாழ்க!''ன்னு சொல்லிட்டாங்க. வார இறுதியில் பெற்றோர், மற்றோருடன் தங்கி பாச மழைப் பொழிகிறார் அந்தப் பெண்.

இது ஒரு குட் சாம்பிள்! ஆனால், இதற்கு அதிதப் பொறுப்பும், மன முதிர்ச்சியும் தேவை.

'மை-ஒன்-டைம்', 'மை-ஒன்-ஸ்பேஸ்' என்பதெல்லாம் பெண்களின் வாழ்க்கை குறித்த சிந்தனைகள் மாறிவிட்டன என்பதையே காட்டுகின்றன.
'வாழ்க்கை ஒருமுறை; அதை நான் என் இஷ்டப்படி வாழ்ந்து விட்டுப் போகிறேன்!' என்ற எண்ண ஓட்டத்தில் தவறேதும் இல்லைதான்.

ஆனால், அது பல சமயம் கிடைத்த சுதந்திரத்தை, தலை கால் புரியாமல் மிஸ்யூஸ் செய்து, வேண்டாத வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளவும் செய்துவிடும். எனவே, கவனம் தேவை கண்மணீஸ்.

தனித்த, சுதந்திரமான, விருப்பமான, வாழ்க்கையை ஆண்/பெண் யாருமே வாழலாம்! அது உங்களுக்கு நிஜமான பாதுகாப்பும், மகிழ்ச்சியும், ஏற்றமும் தரும் என்றால் மட்டுமே!

'கூழாங்கல்' – ஆஸ்கார் போகிறதே!
– வாசுதேவன், பெங்களூரு.

பேர்தான் கூழாங்கல்… நயன்தாராவின் கைபட்டதும் ரத்தினக் கல் ஆகிவிடும் போலிருக்கு! மேஜிக் டச்! அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான், 'கூழாங்கல்.' குடிகார அப்பாவுக்கும் பாசக்கார மகனுக்குமான உறவைச் சித்தரிக்கும் சின்னஞ்சிறு அவுட்லைன்! நம்ப விக்னேஷ் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம், ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பை நிறைய விருதுகளை அள்ளியிருக்கிறது. இப்போ… ஆஸ்கார் ரேஸிலும் நுழைந்துவிட்டது! வாழ்த்துவோம். விருது பெறும் என்று நம்புவோம்.

பிறரைப் பற்றிக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களைத் திருத்த வழி என்ன?
– அ.பூங்கோதை, செங்கல்பட்டு
கிட்டக்க வாங்க பூங்கோதை மேடம்! காதைக் கொண்டாங்க! ஒரு ரகசியம் சொல்றேன்… யாரும், யாரையும், எப்பவும் திருத்த முடியாது; திருத்தறேன் பேர்வழின்னு போய் உங்க பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ணிடாதீங்க.
'பிறரைக் குறை சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களை சமாளிப்பது எப்படி?'ன்னு வேணும்னாலும் கேளுங்க… கைவசம் நாலைஞ்சு டிப்ஸ் இருக்கு!

படம் : பிள்ளை
படம் : பிள்ளை

பாயின்ட் ஒன் : முளையில கிள்ளு! யாராவது குறை சொல்ல ஆரம்பிச்சா, 'ஸாரி… நாட் இன்ட்ரஸ்டட்!'னு சொல்லாம சொல்லி, 'எஸ்' ஆயிடணும்! நிக்கவே கூடாது!
பா. டூ : சப்ஜெக்ட்டை மாத்து! 'அப்புறம்… உன் சுகர் லெவல் நார்மலாயிடுச்சா? புதுப்புடைவையா?' இப்படி…
பா. த்ரி : காமெடி காப்ஸ்யூல் முழுங்குங்க! 'வாங்க… பேசுங்க… ஸாரி புலம்புங்க… குரங்குக்கு சதா வாழைப்பழம் நினைப்புங்கிற மாதிரி, நீங்களும் அந்தக் குமுதினி மேட்டரும்…'னு நக்கலடிச்சு விடுங்க. பார்ட்டி ஃப்யூஸ் ஆகிடும்!
பா. நான்கு : அவங்களே குறை சொல்லி வம்பு பேசிட்டு, நாம்ப பெருசா உற்சாகப்படுத்தாதனால, வெறுப்பாகி அவங்க சொன்னதை, நாம்ப சொன்னதா, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் வெச்சு பரப்பி விடக்கூடிய அபாயம் இருப்பதால, அத்தகையோரை புன்னகை மாறாமல் புறக்கணிப்பதே நல்லது. ஜஸ்ட் இக்னோர்!
(குறை வேறு, புகார் வேறு… கவனிக்கப்பட வேண்டிய, புகார் ஏதேனும் வந்தால், சற்று நிதானித்து, இரு பக்க விளக்கமும் கேட்டு, கனிவுடன் தீர்மானிக்கலாம். ஓ.கே?)

'வருங்காலத்தில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும்' என்கிறாரே பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்?
– வாணி வெங்கடேஷ், சென்னை
ஆட்டுப்பாலா? சின்ன மடியில என்ன லிட்டர் கணக்குலயா பால் கறக்க முடியும்? சுரக்குற கால் லிட்டர் பால், அது பெத்துப் போடற நாலு குட்டிக்கே பத்தாதே?! பாவம்… ஆட்டுப்பால், குட்டிகளுக்காக சாமி வெச்சது! அது மடியில கை வைக்காதீங்க அமைச்சரே!
இப்ப கொடுக்குற ஆவின் பாலை, கிழங்கு மாவு, கெமிக்கல் கலக்காம, தரமா தந்தாலே போதும் ஆவின் ஆஃபீஸர்ஸ்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com