0,00 INR

No products in the cart.

கொரோனா காலமும்… கல்லூரிப் படிப்பும்!

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கடந்த ஒன்றரை ஆண்டு கால கொரோனா பேரிடர் நாட்கள் உயர்கல்வி பயில்வோருக்கான சோதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனை வேதனையாக உணர்ந்தார்களா அல்லது தங்களுக்கான சாதனையாக மாற்றிக் கொண்டார்களா என்பதே கேள்வி. கல்லூரி வளாகத்துக்குள்ளே காலடி எடுத்து வைக்க இயலாத அந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமானது, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர், அவர்களது பெற்றோர்கள் என முத்தரப்புக்கும் தொடக்கத்தில் மன உளைச்சலையே தந்துள்ளது என்றால் அது மிகையல்ல. உயர் கல்வித்துறை, கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளினால் அந்த கொரோனா கால பேரிடர் நாட்களை கல்வி கற்றலில் மாபெரும் சாதனையாக மாற்றிக் கொண்டோம் என்கின்றனர், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் (தன்னாட்சி பெற்றது) கல்லூரியின் மாணவ, மாணவியர்.

மாணவர் கெளசிக்

கெளசிக்:
“நான் இந்த வருடம் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரியில் முதலாமாண்டு இறுதியைத் தொடுவதற்கு முன்பாகவே கொரோனா ஊரடங்கு நம் எல்லோரையும் தொட்டு விட்டது. அப்போது இரண்டாவது செமஸ்டரில் பாதி பேப்பர்கள் தேர்வு எழுதியும் மீதம் பாதி பேப்பர்கள் தேர்வு எழுதாமலும் இருந்தது. அப்போது இன்டெர்னல் எக்ஸாம் கல்லூரியில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் மாதிரித் தேர்வுகளும் இரண்டாவது செமஸ்டர் மிச்சமிருந்த பேப்பர்களும் ஆன்லைனில் எங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நாட்களில்தான் எங்களுக்கு முதன்முதலாக ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் தேர்வுகளும் அறிமுகமாகின. ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான சங்கடங்கள் உருவாகின. அதுவே சில நாட்கள் ஆக ஆக சரியாகிப்போனது.

முதலாவது செமஸ்டரில் எழுபத்தியொன்பது சதவிகிதமும், இரண்டாவது செமஸ்டரில் எண்பத்தி நான்கு சதவிகிதமும் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இரண்டாமாண்டு முழுதுமே ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் தேர்வுகளுமாகக் கடந்து போனது. உண்மையைச் சொல்வதென்றால், இந்த ஆன்லைன் வகுப்புகளில் எங்களின் கற்றலின் திறனும் ஆற்றலும் குறைந்து விடவில்லை. நேரடி வகுப்புகளில் அந்தந்த நேரங்களில் பாடங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போதே பேராசிரியர்களிடம் மாணவர்கள் பாடங்கள் குறித்து தங்களுக்கான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகளில் அதன் சாத்தியம் சற்றே குறைவு. ஆன்லைன் வகுப்புகளில் எங்கள் பேராசிரியர்கள் மட்டுமல்லாது, எங்கள் படிப்பு சார்ந்த மேல்நாட்டுக் கல்வியாளர்களுடனும் நாங்கள் கற்றுக்கொள்ள மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதெல்லாம் நாங்களே எதிர்பாராதது. மாணவ, மாணவியர்க்கு அவரவர் இருப்பிடங்களில் சில நேரங்களில் ஆன்லைன் தொடர்பு கிட்டாதது, அவரவர்க்கான பார்க்கின்ற ஜிபி தீர்ந்து போவது போன்ற இடையூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் பரவலாக பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் தேர்வுகளும் எங்களுக்கான வரப்பிரசாதங்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஆண்டு கல்லூரிக்குள் நான் நுழையும்போது கொரோனா டெஸ்ட் சான்றிதழும், கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் போட்டுக்கொண்ட சான்றிதழும் உடன் எடுத்துச் சென்றிருதேன். அதனைப் பெற்று சரிபார்த்து அதன் பின்னரே ஒவ்வொருவரையும் கல்லூரிக்குள் அனுமதித்தனர்” எனச் சொல்கிறார் பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கௌசிக்.

மாணவி ஜெனிபர் ஷைனி

ஜெனிபர் ஷைனி :
“நான் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு மாணவி. நான் பி.ஏ., ஆங்கில இலக்கியம் மதுரை லேடி டோக் (தன்னாட்சி) கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். அங்கு நான் படித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு முன்பாக இரண்டாம் ஆண்டின் இறுதியில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. அதனால் எனக்கு மூன்றாம் ஆண்டின் முழுவதுமே ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைனில் பருவத் தேர்வுகள், ஐந்து, ஆறாம் செமெஸ்டர் தேர்வுகள் எல்லாமே ஆன்லைனில் என்று நவீனமாக றெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டன. மேலும், உயர்கல்வியில் கற்றலில் இடைநின்று போகுதல் என்பது மிகவும் துயரமானது ஆகும். அந்தத் துயரத்தில் நாங்கள் சிக்குண்டு திசையறியாது சிதறி விடாமல் எங்களைக் காப்பாற்றியது ஆன்லைன் வகுப்புகளும் அதன் தேர்வுகளும்தான். மதுரை லேடி டோக் கல்லூரியில் இருந்து, இங்கு சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் (தன்னாட்சி) கல்லூரியில் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் நான் சேர்ந்தபோது ஆன்லைனில் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றே சேர்ந்தேன். நூறு கேள்விகள். ஒரு மணி நேரம். அதில் நான் சிறப்பாகப் பதிவு செய்திருந்ததால், அன்றிரவே எனக்கு அட்மிஷன் கால் லெட்டர் அனுப்பி வைத்தார்கள். 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலமாகவே அட்மிட் ஆனேன்.

எம்.ஏ., முதலாமாண்டு படிப்பானது 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் வகுப்புகளில் தொடங்கின. செப்டெம்பர் மாத வார நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதிலும் தற்போது அக்டோபர் மாதத்திலிருந்து வாரத்தின் கல்விப் பணி நாட்கள் முழுதுமாக கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் எங்களுக்கு இப்போது ஒரே கல்லில் இரண்டு மூன்று மாங்காய்கள். ஆமாம்… அவ்வப்போது ஆன்லைன் வகுப்புகளும் இயங்குகின்றன. அதில் வெளிநாடுகளில் உள்ள கல்வியாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் கற்றலில் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் புரிதலிலும் கற்றலிலும் நன்கு தேர்ச்சி உடையோரை சரியாக அடையாளம், வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளையும் தந்து வருகின்றனர். அந்தப் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று விட்டால், இங்கு கல்லூரியில் படித்துக்கொண்டே அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தருகின்ற அசைன்மென்ட்டுகளை முடித்துக் கொடுத்து பகுதி நேர வருவாயும் நாம் ஈட்டிக் கொள்ளலாம். நான் அவ்விதம் சில நிறுவனங்களிடம் பயிற்சி பெற்று வருகிறேன். அந்தப் பயிற்சி நிறைவு பெற்றவுடன் நானும் படித்துக்கொண்டே பகுதி நேர வருவாய் ஈட்டுவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது” எனச் சொல்கிறார் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயின்று வரும் ஜெனிபர் ஷைனி.

முனைவர் அசோக் (கல்லூரி முதல்வர்)

முனைவர் அசோக் (கல்லூரி முதல்வர்) :
“தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடுவில்தான் கொரோனா பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதிலிருந்து பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்வியைப் பொறுத்து இது முற்றிலும் புது அனுபவம், புது சவால், புதுப்புது முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் நமது கல்வித்துறையானது சாதித்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செமஸ்டர் தேர்வுகள் மூன்றினை திறம்பட நடத்தி முடித்து மாணவ, மாணவியர்க்கு துல்லியமாகவே மதிப்பெண்கள் போட்டு நிறைவு செய்துள்ளோம். இதற்கு முன்பு இருந்தது, ‘ஒய்’ ஜெனரேஷன். 2000க்குப் பின்னர் இப்போதிருப்பது, ‘இசட்’ ஜெனரேஷன். தகவல் தொழில்நுட்பங்கள் அவரவர் உள்ளங்கைகளுக்குள் வந்து விட்டன. எங்கள் அய்ய நாடார் ஜானகியம்மாள் (தன்னாட்சி) கல்லூரியில் மாணவ, மாணவியர் என மொத்தம் நான்காயிரத்து எழுநூற்றி அறுபது பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இளங்கலை, முதுகலை, ஆய்வுத்துறை போன்றவைகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவ, மாணவியர்கள் எல்லோரிடமும் கொரோனா டெஸ்ட், கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதற்கான சான்றுகள் பெற்று அவற்றை சரி பார்த்த பின்னரே, கல்லூரிக்குள் ஒவ்வொருவரையும் அனுமதித்துள்ளோம். இந்தக் கொரோனா பேரிடர் காலங்கள் என்பது மிகவும் அச்சுறுத்தலான நாட்கள்தான். உயர் கல்வித்துறையிலும் அதனைப் பெரும் சவாலாக ஏற்று சமாளித்து, அந்தந்தக் கல்வியாண்டினை பூரணமாக நிறைவு செய்துள்ளோம். ஒரு சமூகத்தின் கற்றலிலும் கற்றலின் ஆற்றலை மேம்படுத்துவதிலும் ‘ZERO EDUCATIONAL YEAR’ என்பதனை நடைமுறைப்படுத்தவும் கூடாது. ‘ஒன்றுமற்ற கல்வியாண்டு’ என்பதாகச் செயல்படுத்தவும் கூடாது. நவீன விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக அதனை சுலபமாக முறியடித்து முன்னேறிச் சென்றுள்ளோம்” என்கிறார் சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் (தன்னாட்சி) கல்லூரியின் முதல்வர் முனைவர் அசோக்.

1 COMMENT

 1. காெ ரா னாவினைக் கடந்து சகஜ நிலைமைக்கு கல் லூரி மாணவ, மாணவியர் திரும்பிவிட்டனர் என்பதற்கு உதாரணமாக இருந்த து “கெ ாரே ா னா காலமும் …கல்லூரிப் படிப்பும்!” கட்டுரை . தமிழகம் முழுவதும்
  கல்லூரிக் கல்வி சிறப்புடன் நடக்கிறது
  என்பதை மங்கையர் மலர் மூலம் அனைவரும் அறிந்து ெகாண் ே டாம்
  வாழ்த்துகள்.
  . .து.சே ரன்
  ஆலங்குளம்

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....