தியானம் என்ற பெயரில்…

தியானம் என்ற பெயரில்…
Published on
தொகுப்பு     : சேலம் சுபா
ஓவியங்கள் : பிள்ளை

தன், மணி இருவரும் நண்பர்கள். மணி மளிகைக் கடையை நிர்வகிப்பவர். மதன் அரசு அதிகாரியாகப் பணிபுரிபவர். இருவரும் விடுமுறை நாட்களில் சந்தித்து மனம்விட்டுப் பேசிக் கொள்வார்கள். இதில் மணி தானும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ வைப்பார். மதனோ, சிடுசிடு முகத்துடன் எதையோ தொலைத்து போலவே எப்போதும் கவலையுடன் இருப்பார்.

இத்தனைக்கும் படிப்பு, அந்தஸ்து, வசதி வாய்ப்புகள் எல்லாம் மதனிடமே அதிகம்.

இருவரும் ஒருமுறை சந்தித்தபோது பேசிக்கொண்டார்கள். மணி உற்சாகமாக, "என்னப்பா எப்படி இருக்க?" எனக் கேட்க, மதன், "என்னமோ போ… வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குது."

"உனக்கு என்னப்பா, கவர்மெண்ட்வேலை. பண்பான பொண்டாட்டி புள்ளைங்க."

"ஆமா… அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல. மனசுல வெறுமையாதான் இருக்கு. நிறைவே வர மாட்டேங்குது. அதுக்கு என்ன பண்ணனும் தெரியல. தியானம் செய்தால் மனசுல அமைதி வரும்னு என் மனைவி சொல்றாங்க. நானும் தியானப் பயிற்சியில சேர்ந்து என் மனசுல இருக்கிற விரக்தி போகுதான்னு பாக்குறேன்."

மதன் சொல்ல, மணியும் "சரி சரி… உன் இஷ்டப்படியே செய்யப்பா" என்றார்.

"நீயும் என் கூட தியானப் பயிற்சிக்கு வர்றீயா மணி" என்று கேட்டார் மதன்.

"அட போப்பா, என் மளிகைக் கடையை விட்டுட்டு எங்க வரது? எனக்கு தியானம் எல்லாம் பொட்டலம் மடிக்கிறதுதான்…" உரையாடல் முடிந்தது.

இங்கேதான் விஷயம் இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் மணியை போல என்று பார்த்தால் வரும் சதவீதம் குறைவுதான். ஆனால், நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மனிதர்கள் அரசு அதிகாரியான மதனைப் போலவே தியானத்தின் மூலம் அமைதியைத் தேடி வருகின்றனர்.

தியானம் கற்றுக்கொண்டார் மதன். சரி, இனியாவது சந்தோஷமாக இருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. தினமும் தியானத்திற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற கவலை. இடையூறு இல்லாத தியானம் செய்ய முடியவில்லையே என்ற எரிச்சல். பழைய சிடுசிடு ஆளாகவேதான் இன்னும் வலம் வருகிறார் மதன்.

அப்ப தியானத்தினால் அமைதி கிடைக்காதா? தியானம் செய்யுங்கள் என்று கூறிய முன்னோர்களும் அவர்கள் கூறிய வழியில் தினம் தியானம் செய்யும் நாங்களும் என்ன முட்டாள்களா? என்று தியானத்தினால் பயனடைந்தவர்கள் கோபத்துடன் பற்களை நறநறப்பது கேட்கிறது.

தியானத்திற்கு எதிராளி அல்ல நான். ஆனால், முழுமையான தியானம் என்பது என்ன என்பதே என் கேள்வி. மனமும் உடலும் ஒன்றி ஒரு செயலில் ஈடுபாட்டைக் காட்டும்போது நம் எண்ணங்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு நம் மனம் நிறைவடைவதையே தியானம் என்கிறோம். தன்னை மறந்து முழுமையாகத் தம்மை அர்ப்பணிக்கும் எந்த ஒரு செயலும் தியானத்திற்கு சமமானதே. அந்த மளிகைக் கடை நண்பரைப் போல, தன் வேலையை உயிர் மூச்சாக தியானிப்பவர்க்கு தனியான தியான பயிற்சி தேவையில்லை என்பது அவர் எண்ணம்.

இந்த பரபரப்பான நாகரிக உலகில் மனதையும் உடலையும் சற்று ஆசுவாசப்படுத்தி தியானம் மேற்கொள்வது நம் அனைவருக்கும் மிக நல்லதே. ஆனாலும், எந்த விஷயமும் தியானம் உள்பட, நம்மை அதற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்வது நமக்குத்தான் நல்லது.

இப்படித்தான் பாருங்கள் என் தோழி ஒருத்தியின் மகள் மிகப் பிரபலமான யோகா மையத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டாள். கல்லூரிப் பெண்ணான அவள், மிக துறுதுறுப்பானவள். எல்லாவற்றுக்கும் எதிர்கேள்வி கேட்பது அவள் வாடிக்கை. தியானம் பற்றிய எடக்குமுடக்கான அவளது கேள்விகள் அந்த பயிற்சியாளரின் கவனத்தை கவர, அந்த சந்தேகங்களுக்கான பதில்களை பயிற்சியாளர் கூறியது அவள் மனதைக் கவர, இப்போது அவள் தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவில் அந்த மையத்தின் மற்றொரு பயிற்சியாளராக முழுநேரமும் தியானம், யோகா என்றே கதியாக இருக்கிறாள். இவளை எப்படி திருத்துவது என்று புரியாமல் தோழியோ கதிகலங்கிக்கொண்டு இருக்கிறாள்.

இவள் மட்டுமல்ல; எத்தனையோ இளைஞர்கள் தங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தேடிப் போய் இப்படிப்பட்ட மாயைகளில் சிக்கி விழித்துக் கொண்டுள்ளனர். ஆகவேதான் பக்தி ஆகட்டும், பாசம் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அதில் தீவிரமாக இருக்காமல் மிதமாக இருப்பது நன்மையைத் தரும்.

சரி மீண்டும் வேறு நிகழ்வுக்கு வருவோம். ஒரு கணவன் மனைவி. கணவன் தியானத்தில் தீவிர நாட்டம் உடையவர். மனைவி தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர். ஒரு நாள் கணவர் தனது அறையில் தியானத்தில் மூழ்கி இருந்தபோது, மனைவி சமையலில் கவனமாக இருந்தார். வேலையும் முடிந்தது. தியானமும் கலைந்தது. இருவரும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். கணவன், "என்ன இன்றைக்கு சமையலில் வத்தக்குழம்பா? மணம் மூக்கை துளைத்ததே?" என்று கேட்க, மனைவியோ ஆச்சரியமாக, "ஆமா… இவ்வளவு நேரம் நீங்க வீட்டுலயா இருந்தீங்க?" என்றாள். தொடர்ந்தது உரையாடல்…

"ஆமாம்… அதோ அந்த அறையில்தான் தியானத்தில் இருந்தேன். நான் இருந்ததைக் கூட கவனிக்கவில்லையா நீ?"

"ஆமாம்… வத்தக்குழம்பு சுவையா வரணும்னு ஒரே கவனமாக சமையலில் இருந்ததால நீங்க வந்ததைக் கூட கவனிக்க முடியல."

இதில் உண்மையான தியானம் செய்த பலனை அனுபவித்தது யாரென்று நினைக்கிறீர்கள்? தியானம் என்ற பெயரில் கண்களை மட்டும் மூடிக்கொண்டு மனமெங்கும் மணக்கும் வத்தக்குழம்பு நினைவில் இருந்த கணவரா? அல்லது தாம் செய்யும் சமையல் சுவையாக வரவேண்டும் என்பதற்காக சுற்றுப்புறத்தைக் கூட கவனிக்காமல் முழு மனதையும் ஒருமுகப்படுத்தி சமையல் செய்த மனைவியா?

மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் எந்த செயலுமே முழுமையான தியானத்திற்கு சமம். இதை உணர்ந்து செயல்களை ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி என்னும் தியானத்தின் பலனை அனுபவிக்கலாம். அதுமட்டுமின்றி; நம் வாழ்வின் ஓர் அங்கமாக முன்னோர் ஏற்படுத்திய தியானத்தை முறையாக பயின்று, கடைப்பிடித்து முழுமையான தியானத்தின் முழு பயனையும் அடைந்து மகிழவும் நம்மை பழக்கப்படுத்திக் கொள்வோமா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com