spot_img
0,00 INR

No products in the cart.

மாமி

எழுத்து : லேzy
ஓவியம்: வேதா

காலை சுமார் 10.30 மணி அளவில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அம்மா வீட்டிற்குச் சென்றேன்.

வாடா, காப்பி சாப்பிடுறியா?” என்றாள் அம்மா, அப்பாவுக்கு டபராவில் காப்பி ஆற்றிக்கொண்டே.

ஒரு அரை வா குடு போதும். இப்பதான் குடிச்சுட்டு வந்தேன்” சுடச்சுட காப்பி வந்தது. வாங்கி ஆத்தி குடிச்சேன்.

இந்தாமா, நேத்திக்கு மாம்பலத்துல ராமகிருஷ்ண மடம் போயிருந்தபொழுது வாங்கினேன்” என்று சொல்லி, கையிலிருந்த ‘பன்னிரெண்டு ஆழ்வார்கள்’ புத்தகத்தைக் கொடுத்தேன்.

அதை வாங்கி புரட்டிப் பார்த்தா. திடீரென்று, “டேய், எனக்கு இந்த சுந்தர காண்டம் புஸ்தகம் வேணும்டா, இங்க ராமேஸ்வரம் ரோட்டுல கிடைக்குதாம்” என்றாள்.

அப்படியா? சரி வாயேன் போய் வாங்கிண்டு வருவோம்” என்றேன். அப்பாவுக்கு வயது 85 ஆகிவிட்டது. காப்பி சாப்பிட்டுவிட்டு தம்ளரை கீழே வைத்துவிட்டு, ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு, Mute செய்த ஆங்கில நியூஸ் சேனல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் கொஞ்சம் மாம்பலம் வரைக்கும் போயிட்டு வரேன். மாம்பலம், மாம்பலம்”னு சொல்லிக்கொண்டே அம்மா புறப்பட்டாள்.

ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு மெதுவாக சென்றோம். 1960, 70களில் நடந்த ஏதோ பழைய குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டு சென்றேன். ‘அந்த மாமாஇந்த சித்திஅத்த மாமி’ என்று காலத்தின் ஓட்டத்தில் மறைந்துவிட்ட சொந்தங்களைப் பற்றி அம்மாவிடம் பேசிக்கொண்டு மெதுவாக (சோம்பேறித்தனமாக) வண்டி ஓட்டுவதில் ஒரு தனி சுகம் எனக்கு.

ஒருவழியாக ராமேஸ்வரம் ரோடு வந்தாகிவிட்டது. “கடை பேரு என்னம்மா” என்று கேட்டு, மேலும் மெதுவாக வண்டியை ஓட்டியவாறு, ஒவ்வொரு கடை போர்டையும் பார்த்துக் கொண்டு சென்றோம்.

இந்தப் பக்கம் துரைசாமி subwayவிலிருந்து அந்தப் பக்கம் ரங்கநாதன் தெரு வரைக்கும் பார்த்தாகிவிட்டது. கடையைக் காணோம். திரும்பி மெதுவாக வண்டியை உருட்டிக் கொண்டு வந்தேன்.

எப்படி இருந்த ராமேஸ்வரம் ரோடு, எப்படி மாறி விட்டிருந்தது.

1970களில் அப்பாவுடன் ஸ்கூட்டரில் யாரோ தூரத்து சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்க வந்ததுதான் கடைசி. அது ஆச்சு 45 வருஷங்களுக்கு மேலே. அப்பொழுது கடைகளே கிடையாது. எல்லாம் வீடுகள்தான். எல்லார் வீட்டு வாசலிலும் தென்னை மரமும், மா மரமுமா இருக்கும். தி.நகர் அமைதியாக இருந்த காலம் அது. இப்போ எல்லாம் மாறிப் போச்சு. அந்தக் காலம் மாதிரி தனி வீடுகளே இல்லை. கூட்டமும் கூச்சலும்தான் இருக்கு.

சரிகதைக்கு வருவோம்.

ராமேஸ்வரம் ரோட்டில் மேலும் கீழுமா இரண்டு வாட்டி வலம் வந்துட்டு, கடைசியா அங்க நின்ற ஒரு ஆட்டோ டிரைவரிடம் கடை பெயரைச் சொல்லிக் கேட்டோம்.

தோ, இருக்குது சார், நம்ம பிளாட்டுக்கு பின்னாடி” என்றார். அந்த Flatsக்கு அருகாமையில் இவர் தன் ஆட்டோவை நிறுத்துவதால், அது நம்ம Flat’ என்கிறார் உரிமையோடு.

சரி என்று அந்த Flatsக்குள் வண்டியை விட்டேன். நேரே பின்னாடி சென்றோம். பின்பக்கம் சுவற்றை ஒட்டினாற்போல் புத்தகக் கடை. சுவற்றுக்கு அந்தப் பக்கம் மாம்பலம் ரயில் நிலையம். ஸ்கூட்டரை நிறுத்தியதுதான் தாமதம், ‘பாம்என்று பெரும் சப்தத்துடன் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது திருச்சியிலிருந்து வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ்.

சின்ன புத்தகக் கடை. அதில் சுமார் 75 வயது மாமி எங்களை, “வாங்கோ” என்று வரவேற்றார்.

இப்பல்லாம் யாரு புத்தகம் வாங்க வர்ரா? எல்லாம் கம்பூட்டர்லேயே படிச்சிக்கிறா” அந்தக் கடையில் எங்களைத் தவிர, வேறு யாரும் இல்லை. அந்த மாமி அம்மாவிற்கு ஒரு சேர் எடுத்துப் போட்டாள்.

உட்காருங்க மாமி” என்றாள். அந்தக் குரலில் அன்பு தெரிந்தது. “வாங்கோ சார்” என்றாள் என்னைப் பார்த்து.

ரயில் சப்தம் அதிகமா இருக்குமே” என்றேன்.

பழகிப் போச்சு சார், ஒண்ணு இரண்டு வெளியூர் ரயில் வரும்பொழுதுதான் சப்தம் அதிகமா இருக்கும். மீதி நேரத்துல அமைதியா இருக்கும். போக, ஸ்டேஷன்ல வரவா, போறவாள பார்த்துக் கொண்டிருந்தா நேரம் போறதே தெரியாது” என்று சொல்லி சிரித்தாள். வாயில் பல் அவ்வளவா இல்லை மாமிக்கு.

சுந்தர காண்டம் வாங்கணும்னு போன அம்மாவிடம், மாமி பேசிப் பேசி ராமாயணம் புஸ்தகத்தை வாங்க வைத்துவிட்டாள்.

இது 350, அது 400. 50 ரூபாய்தானே வித்தியாசம். 50 ரூபாய்க்கு உங்களுக்கு முழு ராமாயணம் கிடைக்கிறது பாருங்கோ.”

வீடு எங்கே?” என்று கேட்டேன்.

சைதாப்பேட்டை சார், அங்கிருந்து பஸ்ல வந்து, இங்க Mount Roadல இறங்கி, விரு விருனு நடந்தே வந்துவிடுவேன்.

ஆத்துல மாமா என்ன பண்றார்? Retiredஆ” என்றேன்.

நான் கல்யாணம் பண்ணிக்கல சார். நான் தனி கட்டை. அந்தக் காலத்துல எங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். நாங்க மொத்தம் ஏழு பேர். நான் ஆறாவது. வீட்ல ரொம்ப கஷ்டம். அப்படியே இருந்துட்டேன். இப்போ அனாதையா நிக்கிறேன்” என்றாள் மன வேதனையோடு.

எவ்வளவு சம்பளம் வாங்கறீங்க?”

நாளைக்கு 250 ரூபாய் சார். லீவு போட்டா, அன்னைக்குச் சம்பளம் கட்.”

சொந்த பந்தம் யாராவது உதவறாளா?” என்றாள் அம்மா.

எங்க மாமி, வந்து எட்டிக்கூட பார்க்க மாட்டா. எங்கிட்ட காசு பணம் இருந்தாதானே மாமி வருவா? என்ன சார் நான் சொல்றது” என்றாள்.

அந்த மாமியைப் பார்த்தேன். மெலிந்த தேகம், கழுத்தில் ஒரு கருப்பு மாலை, காட்டன் புடவை. முக்கால் நூற்றாண்டு கஷ்டம் முகத்தில் தெரிந்தது.

எந்த ஊர் மாமி உங்களுக்கு?” என்றேன்.

எனக்கு தஞ்சாவூர் பக்கம்” அதைச் சொல்லும்பொழுது, மாமியின் முகத்தில் ஒருவித சந்தோஷம்.

சோழ நாடு சோறு தரும் நாடு, ஈழம், மலையாளம் ஏதும் இல்லை இதற்கு ஈடு!’ என்றான் யாரோ ஒரு தமிழன். அது ஞாபகத்திற்கு வந்தது.

அம்மாவிற்கு என்ன தோணித்தோ தெரியவில்லை.

சரி, அந்த சுந்தர காண்டத்தையும் சேர்த்து வாங்கிக்கிறேன்” என்று இரண்டு புஸ்தகத்தையும் வாங்கிக் கொண்டாள்.

ரூபாய் தாள் ஒன்றை சுருட்டி, மாமி கையில் கொடுத்தேன். “ஐயோ, வேண்டாம் சார், எனக்கு நீங்க புஸ்தகம் வாங்கினதே போதும்” என்று இரண்டு கைகளையும் உயர்த்தி வணங்கியபடி, நான் கொடுத்த ரூபாயை வாங்க மறுத்தாள்.

பரவாயில்லவாங்கிக்குங்கோ” என்று பிடிவாதமாக கையில் திணித்துவிட்டு வந்தேன்.

வண்டியில் வரும்பொழுது அம்மா கேட்டாள், “எவ்வளவுடா கொடுத்த?”

அதை விடும்மா” என்றேன்.

3 COMMENTS

  1. “மாமி” கதை கல்யாணம் ஆகாதபெண்களின் வலிஉணர்வினை
    உணர வைத்த கதை.
    து.சேரன்
    ஆலங்குளம்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

சம்பளம்

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி  பரிசுக்கதை - 9 கதை : ர.கிருஷ்ணவேணி ஓவியம் : சேகர் வெகுநேரம் தூங்கிவிட்டதை உணர்ந்து, பதற்றத்துடன் எழுந்தாள் அமுதா. பரபரவென படுக்கையை மடித்தாள். வாசலை சுத்தம் செய்து சின்னதாகக்...

அன்பெனும் பேராயுதம்!

2
ஜெயஸ்ரீராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - பரிசுக் கதை - 8 கதை : நித்யா ஓவியம் : ஸ்யாம் “ராதாம்மா... உங்களை எங்கேல்லாம் தேடறது போங்க…” வாசுவின் சலிப்பான குரல் காதில் விழ, நிமிர்ந்தாள் ராதா....

பெரியாத்தா…

2
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி பரிசுக்கதை - 7 கதை      : தி.வள்ளி ஓவியம் : லலிதா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நான், சட்டென விழித்தேன். மணியைப் பார்க்க... விடியற்காலை 5 மணி. வீட்டு லேண்ட்...

மாமியார் மெச்சும் மருமக!

2
சிறுகதை : மாதவி ஓவியங்கள் : பிரபுராம் கேசவனுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. ‘மாமியார் மெச்சற மருமகளா ஆயிட்டாளே என் மனைவி மாலா! எப்படி? கல்யாணம் பண்ணி வந்த நாள் முதல், ரெண்டு பேருக்கும் அண்டை மாநில அரசுகள்...

இறை விளையாட்டு!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசுக் கதை - 6 ஓவியம்: இளையராஜா - அறிமுக எழுத்தாளர் கஸ்தூரி குருசாமி “ஏய் புள்ளே! இன்னைக்குத்தானே நம்ம எலிசபெத்தை பொண்ணு கேட்டு வாறாக?” ஜேம்ஸ் மனைவியிடம் கேட்க, “ஆமா...