0,00 INR

No products in the cart.

பட்சணத் திருவிழா!

கட்டுரை : தனுஜா ஜெயராமன்
ஓவியம்: தமிழ்

தீபாவளியன்று பட்சணம் செய்வதே ஒரு இனிமையான அனுபவமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே பட்சண வாசம் காற்றில் கலந்து மணத்தைப் பரப்பும். வீடு நிறைய கடலை எண்ணெய் வாசம் கலந்திருக்கும். அரிசி களைந்து உலர்த்துவது, மாவாக திரிப்பதென வீட்டுப் பெண்கள் பரபரப்பாக இருப்பார்கள். வீட்டு சிறிசுகள் சந்தோஷமாக மிஷினுக்கு மாவு திரிக்கச் செல்வது தீபாவளி வரப்போகும் நாட்களில் மட்டுமே.

வீடு முழுக்க அரைத்த முறுக்கு மாவுகளும், அரிசி மாவுகளும் பலகார ஆசையைத் தூண்டிச் செல்லும். ஓமம் சேர்த்து அரைக்கப்படும் கடலை மாவு அப்போதே ஓமப்பொடி வாசனையை வீடு முழுக்கப் பரப்பும். பரணிலிருந்து இறக்கப்படும் பெரிய ஜல்லிக்கரண்டிகள், சீவல் அச்சுகள், முறுக்கு அச்சுகள், அதிரசம் பிழியும் கட்டைகளை கழுவித் துடைத்து வெயிலில் காயவைக்கும்போதே பலகார வாசம் வீட்டுக்குள் வந்து விடும். இப்படியாக, வீடு முழுக்க பலகார நெடி, பலகாரம் செய்வதற்கு முன்பே நுழையும் நாட்கள், வசந்த காலங்கள்.

முறுக்கு சுற்ற, அதிரசம் தட்ட, தட்டை செய்ய, ஜாங்கிரி பிழிய, லட்டு உருட்ட அத்தை, சித்திகள், அக்கம் பக்கத்துப் பெண்கள் என கூடிக்களித்து கும்மாளம் போட்டு, பலகார கடை போல் கடைவிரித்து பலகாரம் செய்யும் அழகைக் காண, கண் கோடி வேண்டும்.

பெரிய அடுப்பை கீழே இறக்கி வைத்து, அந்த இடத்தை மெழுகி, மாக்கோலமிட்டு அழகுப்படுத்தி மஞ்சள் குங்குமமிட்டு, மங்களகரமாகவே பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். வழக்கம்போல மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வழிபட்ட பிறகே மாவு பிசைவது நமது மரபு. பிசைந்த மாவிலும் பிள்ளையார் பிடித்து வைத்த பிறகே மற்ற பலகாரங்களைச் செய்யத் தொடங்குவர்.

அதிரசப் பாகு எடுப்பதென்பது ஆகச் சிறந்த அழகுக்கலை. அந்த வருடம் அதிரசம் ரசமாக வந்துவிட்டால் வீட்டுப் பெண்களுக்கு வரும் மகிழ்ச்சிக்கு அளவேது. அவ்வருட தீபாவளியே களைகட்டுவதோடு, மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பி வழியும். அந்த அதிரசக் கட்டையின் நடுவில் வைத்து அதிரசம் பிழிவதே தனி ரசனையாக இருக்கும்.

விதவிதமான முறுக்குகள் இல்லாமல் தீபாவளியா? முறுக்கு செய்யாத தீபாவளி நிறைவடையாது என்பது தீபாவளி பழமொழி எனில் மிகையாகாது. தமிழர்களின் முதன்மை பலகாரமென்பது முறுக்கே. முறுக்கு தராததால் முறுக்கிக்கொண்ட மாப்பிள்ளைகளும், சம்பந்திகளும் ஏராளம்.

ஓவியம்: தமிழ்

தீபாவளிக்கு லட்டு செய்வதென்பது ஆதிகால வழக்கம். தற்போது அது நெய் மைசூர்பாவாக உரு மாற்றமடைந்து நெடுநாளாகிறது. பலகாரம் எதுவோ மூலப்பொருட்கள் ஒன்றுதானே. கடலை மாவும் நெய்யும் கலந்து வீசும் இனிப்பு வாசத்திற்கு சொத்தையே எழுதித் தரலாம். ஆஹா… அற்புதமான வாசம் ஒன்று அப்போதே காற்றில் கலந்து வீசும்.

பெண்கள் அனைவரும் கூடி, அரட்டை அடித்தபடியே மாவு பிசைந்து, தட்டை தட்டி, முறுக்கு சுற்றி பலகாரம் செய்யும்போது களைப்போ அலுப்போ தெரியாமல் வளைய வருவர். வீட்டுச் சிறுசுகள் முதல் ஈடு முறுக்கையோ, தட்டையையோ சுவை பார்த்துத் தர காத்துக்கிடப்பர்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள் இல்லாத அக்காலத்தில் அல்வாக்களை பாத்திரத்தோடு ஒட்டாமல் கிண்டுவது தனிக்கலை. அதில் அக்காலப் பெண்கள் கைதேர்ந்தவர்கள். பலவித அல்வாக்களை வீட்டிலேயே செய்து அசத்தக்கூடியவர்கள்.
முறுக்கு, மைசூர்பா உடைக்க சுத்தி தேவை போன்ற ஜோக்குகளும், அல்வாவை கோந்து என கிண்டல் செய்யும் ஜோக்குகளும் வழக்கமானவை. இவ்வாறாகக் கிண்டலும் கேலியுமாகவே பலகாரம் செய்யும் நிகழ்வுகள் களைகட்டும்.
பலகாரம் செய்வது தனி அழகெனில், அதனை உற்றார், உறவினர்கள், அக்கம்பக்கத்தவரோடு பகிர்ந்து உண்பதோ, பேரழகு. நம் வீட்டு அல்வாவும், அதிரசமும், முறுக்கும் பக்கத்து தெரு வரை மணக்கவல்லது. ஜாதி, மத பேதம் பார்க்காமல் தெரு முழுவதும் பகிர்ந்து உண்ட காலங்கள் பரவசமானவை.
அக்காலத்தில் திருமணமான வீட்டுப் பெண்களுக்குப் பலகார சீர் தருவது என்பது பிரபலமானது. திருமணமான பெண்ணை தலை தீபாவளிக்கு அழைக்கும்போதே மாப்பிள்ளை வீட்டில் பலகார சீர் செய்தே அழைத்து வருவது வழக்கம். பின்னர் பண்டிகை முடிந்து கிளம்பும்போது, பெரிய பெரிய டப்பாக்களில் பலகாரங்களை வைத்து சீராக புகுந்த வீட்டிற்கு அனுப்புவது நமது மரபு.

பொதுவாக, பண்டிகைகளும் அது சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களும் எப்போதுமே மகிழ்ச்சியை மட்டுமே பரப்பவல்லவை. பண்டிகைகளின் தாத்பர்யமே கூடிக்களிப்பதும், பகிர்ந்து உண்பதும், மகிழ்ச்சியைப் பரப்புவதுமே தவிர வேறல்ல. தற்போதைய காலகட்டத்தில் சில சாத்தியமானவை, சில சாத்தியமற்றவையாக இருக்கலாம். பலகாரங்களின் வகைகள் பலவாக உருமாற்றம் பெற்றிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் கூடிக்களிப்பதும், பகிர்ந்துண்பதும், எளியோர்க்குத் தந்து மகிழ்வதும், மகிழ்ச்சியை பரப்புவதும் மாறது; மாறவும் விடக்கூடாது. இந்தத் தீபாவளிக்கும் இயன்றதைச் செய்வோம்; இயலாதவர்க்கு பகிர்ந்துத் தருவோம். மகிழ்ச்சியை வீதியெங்கும் பரப்பி மகிழ்வித்து மகிழ்வோம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

———————–

தீபாவளி லேகியம்

வழக்கமாக எல்லோருமே தீபாவளிக்கு விதவிதமான பட்சணங்கள் செய்வோம். எண்ணெயில் பொரித்த பட்சணங்களையும் நெய்யில் செய்த இனிப்புகளையும் அதிக அளவில் குழந்தைகள் சாப்பிடும்போது, வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டே தீபாவளிக்கு, லேகியம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால், எங்கள் வீட்டில் வழக்கமாக லேகியம் செய்யும் எளிமையான முறையை நான் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

தேவையானவை : மிளகு – 25 கிராம், ஜீரகம் – 25 கிராம், சுக்கு – 5 துண்டுகள், அரிசித் திப்பிலி – 20 கிராம், கண்டந் திப்பிலி – 20 கிராம், ஓமம் – 20 கிராம், சித்தரத்தை – நான்கு துண்டுகள், மல்லி விதை – 20 கிராம், கிராம்பு – 10 கிராம், ஏலக்காய் – பத்து, விரலி மஞ்சள் – நான்கு துண்டுகள், வெல்லம் அரை கிலோ, நெய் – 150 மில்லி.

செய்முறை : முதலில் சுக்கு, சித்தரத்தை, விரலி மஞ்சள் மூன்றையும் தனித்தனியாக நசுக்கி, சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, மேற்குறிப்பிட்ட பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். அவ்வப்பொழுது சலித்து, மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் அளந்து கொள்ளவும். அதே அளவு வெல்ல தூள் எடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லத்தைப் போட்டு, கால் டம்பளர் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வரும்போது, அடுப்பை அணைத்து விட்டு வெல்லக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் அதே வாணலியில் போட்டு, அதனுடன் அரைத்து சலித்து வைத்துள்ள லேகிய பவுடரையும் சேர்த்துக் கிளறி அடுப்பில் ஏற்றவும். அவ்வப்பொழுது கொஞ்சம் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாகி நெய் பிரிந்து வரும். கையில் உருட்ட வரும் பதத்தில் இறக்கி வைக்கவும். தேவையானால் ஆறியதும் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

சுத்தமான எவர்சில்வர் சம்படத்தில் எடுத்து வைத்தால் அருமையான லேகியம் ரெடி.

இந்த லேகியத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிளகு, சுக்கு எல்லாம் இருப்பதால் ஜலதோஷம் வயிற்றுக் கோளாறு, அஜீரணம் எல்லாவற்றிற்கும் அருமையான ஒரு ஆரோக்கியம் தரும் மருந்து.
– பி.லலிதா, திருச்சி

2 COMMENTS

  1. தனுஜா அவர்களின் பட்சண தயாரிப்பு வேலைகளை படித்ததும் நினைவு பின்னோக்கி சென்று விட்டது.மறக்க முடியாத சந்தோஷ அனுபவங்களை மனம் அசை போட ஆரம்பித்து விட்டது.இனி அதுபோன்று செய்ய முடியுமா என்ற ஏக்கத்தை. தந்து விட்டது
    மகாலட்சுமி சுப்பிரமணியன்
    காரைக்கால்.

  2. எங்கள் வீட்டிலும் ஒவ்வொரு வருடமும் இதேபோல்தான் லேகியம் கிளறுவது வழக்கம். இவ்வளவு மெனக்கெட முடியாதவர்கள் தனியா, இஞ்சி, சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறி இறக்க ஐந்தே நிமிடத்தில் தீபாவளி மருந்து செய்துவிடலாம்

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...