0,00 INR

No products in the cart.

ரணங்களுக்கு மருந்தாகும் பேனா நண்பர்கள்!

கட்டுரை : ஜி.எஸ்.எஸ்.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம், இயற்கை அழகுக்குப் பெயர் போனது. ஹிந்துக்களுக்கு வேதம் கற்றுக்கொடுக்கும் ஒரு முக்கிய மையமாக செயல்படுகிறது. இஸ்லாமிய தத்துவங்களை எடுத்துக்கூறும் அமைப்புகளும் இங்கு உண்டு. தொன்மையான கலாசாரப் பின்னணி கொண்ட இங்கு, நிறைய ஆலயங்கள், மசூதிகள் உண்டு.

ஆனால், இந்தக் கட்டுரை மலப்புரம் மாவட்டத்தைப் பற்றியதல்ல. அங்கு வசிக்கும் ரெஸ்பின் அபா என்ற இளம்பெண்ணின் பொக்கிஷத்தைப் பற்றியது.

தனக்கு வந்துள்ள எக்கச்சக்கமான கடிதங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் இந்த இளம்பெண். ‘இந்தக் காலத்தில் அஞ்சல் அட்டை, இன்லாண்டு கடிதம், அஞ்சல் உறை எல்லாம் பயன்படுத்துகிறார்களா?’ என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு இதோ இன்னொரு ஆச்சரியம். இதுவரை அந்த கிராம எல்லையைத் தாண்டியிராத அந்தப் பெண்ணுக்கு வந்துகொண்டிருக்கும் கடிதங்களெல்லாம் வெளிநாடுகளிடமிருந்து மட்டுமே. அத்தனை பேரும் தங்கள் வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சிகளை அந்தப் பெண்ணிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவ்வப்போது பரிசுகளையும் அனுப்புகிறார்கள்.

ரெஸ்பின் அபா

பேனா நண்பர்கள் என்பது புதிய தலைமுறையினருக்கு அறிமுகமாகாத ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால், நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கு அதன் அருமை புரியும். இதனால் நேரில் ஒருமுறை கூட சந்திக்காதவர்களுடன் கடிதப் போக்குவரத்து நடத்தி உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். அமைதி, சந்தோஷம், ஆறுதல் ஆகியவற்றைப் பெறுதலும் இதன் மூலம் சாத்தியமாகிறது.

தன் வாழ்வின் சோகத்தை பேனா நண்பர்கள் மூலமாகத்தான் ரெஸ்பின் கரைத்துக் கொண்டு வருகிறார். ஒன்றிரண்டல்ல; நாற்பத்தி மூன்று நாடுகளிலிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பெற்றோர் விவாகரத்து செய்வது என்பது (அதற்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும்) குழந்தைகளுக்கு நரகமான ஒன்று. அதுவும் எட்டு வயதிலேயே இந்தக் கொடுமையை அனுபவிக்க வேண்டி வந்தது ரெஸ்பினுக்கு. ‘யாரோடு இருக்க விரும்புகிறாய்?’ என்ற கேள்விக்கு அம்மாவை தேர்ந்தெடுத்தது அந்தக் குழந்தை. ‘இருந்தும் இல்லாத அப்பா’ என்பதே மனதில் காயம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த சக மனிதர்கள் ரெஸ்பினை வார்த்தைகளால் மேலும் மேலும் காயப்படுத்தினார்கள். ‘அப்பா இல்லாத அனாதை’ என்று குத்திக் காட்டினார்கள். தங்கள் குழந்தைகளை அவளோடு விளையாட அனுமதிக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவள் பள்ளியைத் தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டாள். யாரோடும் பேச மறுத்தாள். தனிமையே வாழ்க்கையானது. அதற்கு ஒரு வடிகால் தேவை என்று இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டாள் இப்பள்ளிச் சிறுமி.

மெரிக்காவில் வசிக்கும் மெக்ஸிகரான சாரா என்ற பெண்மணியிடமிருந்து முதல் கடிதம் வந்து சேர்ந்தது. அதில் காணப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் ரெஸ்பினுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. ‘நான் தனியானவள் அல்ல. என் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வெளியில் சிலர் இருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினர் அலட்சியப்படுத்தினாலும் எங்கோ வெகு தொலைவில் இருப்பவர்கள் எனது ரணங்களுக்கு மருந்தாக இருக்கக்கூடும்.’

அதற்குப் பிறகு இன்னும் வேறு நாடுகளில் வசிக்கும் பேனா நண்பர்களிடம் ரெஸ்பின் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் தனக்குக் கிடைக்கும் கடிதங்கள் பொழுதுபோக்கு மட்டுமல்ல; தன் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவை என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து பலரும் அவருக்குக் கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்கள்.

கேரளாவின் தனித்தன்மைகள், பழக்க வழக்கங்கள், இயற்கை அழகு போன்றவற்றை இவர் தனது கடிதங்களில் விவரிக்க, அவரவரும் தங்கள் நாடு மற்றும் வாழ்க்கை முறை குறித்து விவரித்து இவருக்குக் கடிதம் எழுதினார்கள். தாயோடு மட்டும் வாழும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கான பயன்மிகு ஆலோசனைகளை அளித்தவர்கள் கூட உண்டு. துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்த கதையை விவரித்தார்.

இந்தப் பேனா நட்பு முதிர்ந்து பல்கேரியாவில் வசிக்கும் ஒரு பெண் தனது பெற்றோரோடு அவரை வந்து சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்.

இந்தோனேஷியாவில் வசித்துவரும் பேனா நண்பி ஒருவர் தொடர்ந்து சில காலத்துக்கு கடிதம் அனுப்பாமல் இருந்தது ரெஸ்பினுக்கு மன வருத்தத்தைத் தந்ததாம். ஆனால், பிறகுதான் தெரியவந்தது, அவரது தந்தை இறந்ததால்தான் அந்தத் தாமதம் என்று.

ந்தக் கடிதங்கள் எல்லாம் தட்டச்சு செய்து அனுப்பப்படவில்லை. கையினால் எழுதப்பட்டவை. இதன் காரணமாகவே அதிக நெருக்கம் ஏற்படுகிறது.

அந்த ஊரின் அஞ்சல் அலுவலகத்தில் ஒரே ஒரு பெண்மணிதான் பணிபுரிகிறார். எனவே, மூன்று நாளைக்கு ஒருமுறை தனக்கான கடிதங்களைக் கொடுத்தால் போதும் என்று ரெஸ்பின் கூறிவிட்டாராம்.

”கைப்பட எழுதுவது என்பதெல்லாம் அரிதாகிக் கொண்டு வருகிறது என்பதால் உடனுக்குடன் அடுத்தடுத்து கடிதம் வருவது என்பது இல்லைதான். எனினும் காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது” என்கிறார், பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரெஸ்பின்.

இதற்கும் தடை போட முயற்சித்தவர்கள் உண்டு. ‘முன்பின் அறியாதவர்களுக்கெல்லாம் முகவரியைக் கொடுப்பது முட்டாள்தனம், ஆபத்தானது’ என்றெல்லாம் கூறினார்கள். ‘இப்படி எல்லாம் பேனா நண்பர்கள் வைத்துக்கொண்டால் நாளைக்கு அவளுக்கு திருமணமே நடக்காது’ என்று கூட பயமுறுத்தினார்கள். ஆனால், ரெஸ்பின் மனம் தளரவில்லை. அன்பும் ஆதரவும் தேவைப்பட்டபோது தங்கள் வீட்டுக் கதவை மூடிக் கொண்டவர்கள் உதிர்க்கும் கருத்துகளை அவர் கேட்கத் தயாராக இல்லை. அவருடன் வசிக்கும் அம்மா ரஹீனாவுக்கும் தம்பி அபிக்கும் ரெஸ்பினின் பேனா நட்புகளில் உடன்பாடுதானாம். பிறகென்ன?

அதோ அங்கே அவர் வீட்டை நோக்கி புன்னகையுடன் நடந்து கொண்டிருக்கிறார் அஞ்சல் அலுவலர். அவர் கையில் ஒரு வெளிநாட்டுக் கடிதம்.

2 COMMENTS

 1. இன்டர்நெட் “ஜெட் “வேகத்தில் சீறிப் பாய்வதால் நட்பு வட்டங்கள் வானளாவ வேகத்தில் பெருகி வரும் இக்காலத்தில்
  அப்பா இல்லாத ரெஸ்பின் கடிதம் மூலம்
  நட்புகளை ஏற்படுத்தி தன் இதயவேதனைகளை இனிமையாக்குபவள்
  என்று ஜி.எஸ்.எஸ். கட்டுரையை படித்து
  மனம் குதூகலம் அடைந்தது.
  து.சே ரன்
  ஆலங்குளம்

  உடையவள் என்று ஜி.

 2. பேனா நட்பு எப்போதுமே உயர்ந்ததுதான். ஃபேஸ்புக் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தன் கைப்பட எழுதும் பேனா நட்பே சிறந்தது. அதில் ஒரு நெருக்கம் உண்டாகும். நாம் அதனை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...