மானுட அழகியலைச் சொல்லும் கடைசி விவசாயி!

மானுட அழகியலைச் சொல்லும் கடைசி விவசாயி!
– ராகவ் குமார்.

விவசாயத்தை பற்றி பெரிய அளவில் பிரசாரம் செய்யாமல், ஹீரோக் களின்  பன்ச் டயலாக் இல்லாமல் அழகியலுடன் ஒரு விவசாய படத்தை தந்துள்ளார் டைரக்டர் மணிகண்டன். பார்வையாளர்களான நாம் விவசாயத்தை கற்று கொள்ளும் அளவுக்கு காட்சிகளை அமைத்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் டைரக்டர்.

உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மக்களில் சிலர் குல தெய்வத்திற்கு விழா நடத்த முடிவு செய்கிறார்கள்.அதற்கு முதல் நெல்லை கொடையாக பெற பலரை அணுகுகிறார்கள் ஊரின் பெரிய மனிதர்கள்.பலர் விவசாயத்தை கைவிட்ட நிலையில் விவசாயி மாயாண்டியை அணுகுகிறார்கள். மாயாண்டியும் ஒரு மனதாக ஒப்புகொள்கிறார். மாயாண்டி தன் நிலத்தின் சிறு பகுதியில் கோவிலுக்கு தருவதற்காக விவசாயம் செய்கிறார்.

விவசாய கூலிகள் யாரும் விவசாயம் செய்ய முன் வராத நிலையில் தனி ஒருவனாக விவசாயம் செய்கிறார் மாயாண்டி.ஒரு நாள்  தனது நிலத்தில் மயில்கள் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அவற்றை தனது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார். ஆனால் மாயாண்டிதான்  மயில்களை கொன்று தன் தோட்டத்தில் புதைத்து உள்ளார் என்று தவறாக வழக்கு பதிந்து ஜெயிலுக்கு அனுப்புகிறது காவல் துறை. சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளிவருகிறார்  மாயாண்டி. அவர் செய்து வந்த விவசாயம் என்ன ஆனது,கோவிலுக்கு மாயாண்டி நெல் கொடை தந்தாரா.. குல தெய்வ வழிபாடு நடந்ததா என்பதை மிக நேர்த்தியுடனும், அழகாகவும் சொல்லியுள்ளார் டைரக்டர்.

ஊர் திருவிழா, படிப்படியாக விவசாயம் செய்வது, எளிய மனிதர்களின் சொல்லாடல் என திரைக்கதையின் நகர்வில் நாமும் இணைந்து பயணிக்கிறோம். நீதிமன்ற காட்சி நம்மை நெகிழ  வைக்கிறது.படத்தில் பலர் நடித்திருந்தாலும் மிக சிறப்பாக நடித்திருப்பது மாயாண்டியாக  நடித்துள்ள நல்லாண்டி பெரியவர்தான். நம் வீட்டுப் பெரியவரை நினைவு படுத்துகிறார். எந்த ஒரு உணர்வையும் மிக நுணுக்கமாக கடந்து செல்கிறார். விஜய் சேதுபதி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.நீதிபதியாக நடிக்கும் ரைசல் ரெபேகாவும், கான்ஸ்டபிள் பூச்சி கண்ணுவாக நடிக்கும் கலை பாண்டியனும் மிக சிறந்த தேர்வு. சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹர்வி இசை மனதில் நிற்கிறது. தோட்டா தரணியின் கலை வடிவத்தில் உருவான கிராமிய பின்புலமும், சிறை சாலையும், நீதிமன்றமும் தத்ரூபமாக உள்ளது.

கடைசி விவசாயி படம் விவசாயதிற்கு பின்னால் உள்ள கிராமியம், மண் சார்ந்த கலாசாரம் இப்படி பல மானிட அழகியலை சொல்கிறது. பல விருதுகள் இப்படத்திற்கு காத்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com