இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம்
Published on
தலையங்கம்

ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் தொழில் வளர்ச்சி விஷயத்தில் தி.மு.க. அரசானாலும் சரி, அ.தி.மு.க. அரசானாலும் சரி, பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. மோட்டார் வாகனத் தொழில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 3 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கிறது அதில் கணிசமான பகுதி தமிழ்நாட்டில்தான். இந்த நிலையில் அண்மையில் சென்னையில் ஃபோர்டு நிறுவனம் தொடங்கி 25 ஆண்டு களுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் தொழிற்சாலையை மூடப் போகிறோம் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஃபோர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. தமிழகத் தொழிற்துறை வரலாற்றைப் பொறுத்தவரை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. அடுத்தடுத்து பல கார் தொழிற்சாலைகள் தங்கள் தயாரிப்பைத் தமிழகத்தில் தொடங்க இந்த ஒப்பந்தம் காரணமாக அமைந்தது. 1996-ல் 1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் தொடங் கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப் பளித்தது. பிறகு படிப்படியாகப் பல அடுக்குகளாகத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது. ஏறத்தாழ தமிழகத்தை ஆண்ட முதல்வர் கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

2015-16-ல் இந்த நிறுவனம் தன் முழு உற்பத்தித் திறனாக ஒரு நாளைக்கு 650 முதல் 700 கார்கள் வரை உற்பத்தி செய்து வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக இதன் உற்பத்தி 20 சதவிகிதமாகச் சரிந்தது. அதாவது ஒரு நாளைக்கு ஏறத்தாழ 130 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த 25 ஆண்டுகளில் 12 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டத்தால் இந்தியாவில் உள்ள அமதாபாத், சென்னை ஆலைகளை மூடுவதாகத் திடீரென அறிவித்துள்ளது ஃபோர்டு நிறுவனம். இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது தவிர, இந்தியா முழுவதும் உள்ள 391 விற்பனை நிலையங்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருக்கிறது. ஃபோர்டு தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலை குலைந்து போயுள்ளனர்.

ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரோனா கால வருவாய் இழப்புகள் எனத் தமிழகம் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை.

லாபம் வந்தால் எனக்கு, நஷ்டம் வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் என்ற மனப்போக்கில் இயங்கும் ஃபோர்ட் நிறுவனத்தில் அவர்களால் செய்யப்பட்ட பணமுதலீட்டை மட்டுமே கணக்கிடுகிறது. ஆனால் அரசுகள் கடுமையான முயற்சிகள் எடுத்து ஏராளமான சலுகைகளை அறிவித்து அன்னியத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது நம் மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான். இதுநாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், சாலை கட்டமைப்பு வசதிகள், துறைமுகத்தில் தனி வளாகம், தொழிற் சாலைக்கு நீர் உள்ளிட்ட வளங்கள் போன்றவை எல்லாமே அரசு இந்தத் துறையில் மக்களின் வரிப் பணத்திலிருந்து செய்யபட்ட நேரடி மற்றும் மறைமுக முதலீடுகள். அன்னிய முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துவதில், பல அதிகாரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பியதில் காட்டிய அக்கறையும் கவனமும் அந்நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்டவேண்டும்.

தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லாமல் மூடப்படும் முடிவை அறிவிக்கக்கூடாது என்ற புதிய விதிகளுடன் மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடவேண்டும் அவசியமானால் இந்த நிலையைச் சமாளிக்க ஒன்றிய அரசின் உதவியை நாடி புதிய கடன் வசதி, சலுகைகள் வழங்கி நிறுவனம் மூடும் முடிவைக் கைவிடச் செய்ய அனைத்தையும் செய்யவேண்டும். இது மாநில, மத்திய அரசுகள் தொழிலாளர்களுக்குச் செய்யும் உதவி இல்லை. அவர்களது கடமை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com