இன்பத்த தேன் வந்து பாயுதே

இன்பத்த தேன் வந்து பாயுதே
Published on

மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப் பாளார், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியிருக்கிறார். 39 வயதில் அவர் இறந்திருந்தாலும், அவரின் எழுத்தும் புகழும் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் நம்முடன் உயிர்ப்புடனே வாழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டு  அவரது நினைவு நூற்றாண்டு

வங்கத்தில் பிறந்த ரவீந்திரநாத் தாகூரைப்போல சுபாஷ் சந்திர போஸைப் போல இந்தத் தமிழ் கவிஞனின் புகழ்  நாடு  முழுவதும் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ்கூறும் நல்லுகத்துக்கு உண்டு. 'தமிழகமே பாரதியைக் கொண்டாடு, அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய். பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை என முழங்கியவர் கவியரசு கண்ணதாசன், ஆனால் தமிழ்நாட்டிலேயே ஆட்சிக்கட்டிலில் இருந்தவர் களால் அவனுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை. தக்க அளவில் கொண்டாடப்பட்டவில்லை.

இந்தப் பழியை ஒட்டுமொத்தமாக நீக்கும் வகையில் பாரதிக்கு,  நூற்றாண்டு காணும் நினைவுப் பெருநாளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  வெளியிட்ட அறிவிப்புகள் அமைந்திருந்தன. அவை பாரதி அன்பர்களையும் அவனை நேசிக்கும் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தன.  நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு கவனம் பெறமாலிருந்த கோரிக்கைகளையும், அதற்கு மேலாகவும் பெருமழை பெய்தாற்போல கொட்டியிருக்கிறது. பாரதி இன்று இருந்திருந்தால் அவன் மொழியில் ஸ்டாலினை 'பலே பாண்டியா' எனப் பாராட்டியிருப்பான். உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் தி.மு.க. அரசின் இந்த நற்செயலுக்காக முதல்வருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

பாரதியாரின் நினைவு நாளான செப்டெம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக';f கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்" என்பது உட்பட 14 பல்வேறு அறிவிப்புகளை பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிகழ்வை ஒட்டி அறிவித்திருக்கிறார். பாரதப் பிரதமர் பாரதி வாழ்ந்த காசி நகரிலுள்ள பாரதி பயின்ற பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரால் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலந்துகொண்ட தனியார் அறக்கட்டளை விழாவில் பேசும் போது "பாரதி மறைந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும், அவர் கருத்துகளின் தேவை நம் சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருக் கிறது" என்றும், "பெண் விடுதலை தளத்திலும், சாதிய சமூக விலங்கு களை உடைத்தெறிவதிலும் பாரதியின் வரிகள் தற்காலத் தமிழகச் சூழலில் எந்த வகையிலெல்லாம் தேவைப்படுகிறார்" என்பது குறித்துப் பேசியிருக்கிறார். அது இந்த அறிவிப்புகளிலும் அதைச் செயலாக்குவதி லும் எத்துணை தீவிரமாகயிருக்கிறார் என்பதை உணர்த்தியது.

இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடக்கம் இன்றைய இளைஞர்களிடம் தாக்கத்தை ஏறப்டுதியிருப்பதைப் பல இளைஞர்கள் தங்களது கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் பாரதியாரின் உருவ ஸ்டிக்கர்களை விதவிதமாகப் போடுவதையும் `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற பாரதியின் வரிகளை ஒட்டியிருப்பதையும் பார்க் கும்போது பாரதியை அடுத்த தலைமுறைக்குச் சரியான முறையில்  அறிமுகப்படுத்த தமிழக அரசு முன்னெடுத்ததற்கும் முயற்சிகள் பலனளிக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

அதற்காகத் தமிழக முதல்வரைப் பாராட்டி நன்றி சொல்வோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com