
இரு நாடுகளின் வரலாற்றில் அழியா இடம் பெற்றிருக்கும் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு இனி தொடர்ந்து மேம்படும் நிலையில் இல்லையோ என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டிற்கும் அரசியல் மாற்றங்கள் சீனாவுடனான அவர்களின் உறவைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் நிலையை எடுத்திருக்கிறது. இது இந்தியாவிற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத் தும் என்பது குறித்த ஓர் அலசல்.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுக நகர மசோதா என்ற மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கியிருக்கிறது. அதன் மூலம் 600 ஏக்கர் பரப்பள வில் ஒரு தீவையே சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவாக்கவிருக்கிறது.
இலங்கை தன் பொருளாதார வளத்தை மேம்படுத்திக்கொள்ள, உலக அரங்கில் தன் வணிகத்தைப் பெருக்க இப்படிச் செய்திருப்பதில் தவறில்லை. ஆனால் இந்தத் துறைமுக நகர்ப் பகுதி முழுவதையும் 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்குக் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது மட்டுமில்லாமல், இலங்கை அரசின் கட்டுப் பாட்டில் இல்லாமல் இந்தப் பகுதியில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரத்தையும் சீனாவிற்கு வழங்கியிருக் கிறது.ஏற்கெனவே கொழும்பின் தற்போதைய துறைமுகமான அம்பாந்தோட்டை துறை
முகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறது.
கொழும்பு கடல் பகுதியில் கடலை மூடிமேடுறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய பகுதிக்கு, இலங்கைத் தீவில் உள்ள முதலீடு சம்பந்தமான 21 சட்டங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டங்களுக்கு சீனாவின் தீவு கட்டுப்படாது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழுக்கள் எதற்கு முன்னரும் அச்சிறிய தீவு பதிலளிக்கத் தேவையில்லை. அதனால் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பாடாத ஒரு தீவாகப் பிறக்கிறது.
அதாவது இலங்கை என்ற கூடாரத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துக்கொண்டுவிட்டது.
இது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்பிய இலங்கையின் எதிர்க்கட்சிகள், பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. ஆனாலும் விதிகளின்படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறிவிட்டது.
இந்தியாவிற்கு ஆபத்தா?
இந்த நிலை இந்தியாவிற்கான அச்சுறுத்தலாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. இந்தத் தீவை, விசேஷ அந்தஸ்துடைய முதலீட்டு வளையமாகப் பார்க்கும்வரை, இந்தியா இது குறித்து அஞ்ச வேண்டியதிருக்காது.
இந்திய கார்பரேட் நிறுவனங்களும் அங்கு முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாக எதிர்கால நோக்கோடு பார்த்தால், அந்தத் தீவு முழுவதுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, இந்தியாவுக்குப் பல அபாயங்கள் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பது அவை பார்வை.
இலங்கைத் தீவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சீன மயமாகிவிட்டது. சீனாவுக்கும் இலங்கைத் தீவுக்கும் நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான உறவுகள் என்பது இரு அரசுகளுக்கிடையிலான உறவுகளாகப் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. ஆனால், பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அதிகார அடிப்படையிலும் இலங்கைத் தீவு கடந்த பத்தாண்டுகளில்தான், அதிகளவுக்குச் சீன மயப்பட்டிருக்கிறது. இனி இலங்கையைச் சீனாவின் பிடிக்குள் இருந்து விடுவிக்க உள்நாட்டில் யாராலும் முடியாது. வெளியில் இருக்கும் சக்திகளால்தான் அது முடியும் என்பதுதான் உண்மை.
இந்த நிலை எழ என்ன காரணம்?
"சீனாவின் ஆதரவு இலங்கை அரசாங்கத் துக்குத் தேவைப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது. இரண்டாவதாக, தமிழர் இன அழிப்புத் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க, பன்னாட்டு அரங்கில் சீன அரசின் தயவு இலங்கைக்குத் தேவைப்படுகிறது. காரணம், ஐ.நா. செக்யூரிடி கவுன்சிலில் சீனா உறுப்பினராக இருக்கிறது. அதனால்தான், முழுவது மாகத் தங்களைச் சீனாவிடம் ஒப்படைத்துக் கொள்ள இலங்கை தயாராக இருக்கிறது."
ஆசியாவின் பொருளாதார வல்லரசாகத் திகழும் சீனா, தான் அமெரிக்காவைப்போல உலகில் செல்வாக்குச் செலுத்தவேண்டும் எனக் கருதி அதற்கான ராஜபாட்டையை அமைத்து வருகிறது. அதை அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் வன்மையாக எதிர்க்கின்றன. எனினும் கடல் பட்டுப்பாதை அமைப்பதிலும் தொடர்புடைய நாடுகளில் தன் செல்வாக்கை நிலை நிறுத்துவதிலும் சீனா அசராமல் ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் கடல் பட்டுப்பாதைத் திட்டம் முற்றாக நிறைவேறுமானால், இந்தியா தொடக்கம் ஆப்பிரிக்கா வரை சீனா நீக்கமறதன் செல்வாக்கை நிலைநிறுத்தி இப்பிராந்தி யத்துக்குத் தலைமைத்துவம் தரும் நாடாக மாறிவிடும்.
அதாவது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது. இதற்கு இலங்கை இலக்காக்கி அந்த நாட்டிற்கு அளவுக்கு மீறி கடன்களை வழங்கி அதைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளி பின்னர் நாட்டையே பொருளாதாரரீதியாக வசப்படுத்தத் திட்டமிடுகிறது.
இந்த விஷயத்தில் இந்தியா
தோல்வி அடைந்திருக்கிறதா?
இந்திய வெளியுறவுத்துறை இலங்கை விஷயத்தில் முதல்கட்டத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று மேற்கத்தியப் பத்திரிகைகள் விமர்சிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை?
இலங்கையில் சீனா மேன்மேலும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், புதிய முதலீடுகளில் ஈடுபடுவதையும் தன்னைச் சுற்றிலும் விரிக்கப்படும் வலையாகவே இந்தியாகருதுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு அருகில் மூன்று தீவுகளில் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்ட மொன்றை செயல்படுத்து வதற்கான அனுமதியைச் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவிருந்த நிலையில், தனது நாட்டு எல்லைக்கு அருகில் சீன நிறுவனமொன்று மின் உற்பத்தியில் ஈடுபடு வதை முற்றிலுமாக விரும்பாத இந்தியா அதற்குத் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுவது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர மறுக்கப்படவில்லை.
தமக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தேவை என 2005ம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்சே அறிவித்திருந்தார். ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, 'சீனாவே தமது உண்மையான நண்பன்' என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்சே இன்று சீனாவே எமது உண்மையான நண்பன் எனக் கூறுவது சீனா அவருக்குக் கொடுத்த தைரியம் என்று மேற்கத்திய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இதற்கான விடையாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் வீ.ஜகனின் கருத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இலங்கையில் மாற்றம் வருகின்றதோ இல்லையோ, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே, இந்து மகா சமுத்திரத்தை சீன சமுத்திரமாக மாறுவதிலிருந்து காப்பாற்ற முடியும்.
நிகழ்ந்துகொண்டிருப்பது சீனா இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கானது மட்டுமில்லை, இது இந்து சமுத்திரத்தைக் கைப்பற்றுவதற்கான போர் எனவும், இது நீருக்கான போர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை காரணமாக, இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவை நம்பத்தயாராக இல்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காணப்படுகின்ற இடை வெளியே, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்தியாவை நெருங்காமல், சீனாவை நோக்கி நகர்வதற்கான பிரதான காரணம்.
இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டும் என்றபோதிலும், இந்தியாவின் மீது, இலங்கை உள்ளிட்ட நாடுகள் நம்பிக்கையை இழந்துள்ள சந்தர்ப்பத்தில், அந்த நம்பிக்கையை வழங்கக்கூடிய நிலைக்கு இந்தியா தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தியா இனி எவ்வளவு வேகமாகச் செயல்படுகின்றதோ, அந்தளவிற்கே, இந்து சமுத்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.