நலம் தரும் நவ நாயகியர் வழிபாடு!

நலம் தரும் நவ நாயகியர் வழிபாடு!
Published on

பண்டிகை

– எம்.கோதண்டபாணி

அம்பிகைக்குரிய பண்டிகைகள் எத்தனையோ இருந்தாலும், அதில் முக்கியமானது நவராத்திரி விழாவாகும். வருடத்தில் நான்கு நவராத்திரிகள் அனுசரிக்கப்பட்டாலும், அதில் முக்கியமாகக் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாத சாரதா நவராத்திரி பண்டிகையே ஆகும். இது, புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலக்ஷ்மியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம். பத்தாம் நாளன்று அம்பிகையின் வெற்றித் திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் அன்னை பராசக்தியை நவ கன்னி தேவியர் வடிவில் வணங்கப்படுவது மரபு. அந்த நவ கன்னியர் ஒன்று முதல் பத்து வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இத்தினங்களில் அப்பெண்களுக்கு புதிய ஆடை உள்ளிட்ட மங்கலப் பொருட்களைப் பரிசாக வழங்குவது ஐதீகம். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். பொதுவாக, நவராத்திரி பூஜையை இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை செய்வது உகந்ததாகும். நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் விரத தினங்களில் தரையில்தான் படுத்து உறங்க வேண்டும்.

நவராத்திரி என்றதும் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கொலு படிகள் ஆகும். ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உலக உயிர்கள் அனைத்திலும் தேவி பராசக்தியே குடிகொண்டுள்ளாள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. அம்பிகை சங்கீதப் பிரியை என்பதால் நவராத்திரி தினங்களில் கொலு மண்டபத்தின் முன்பு அமர்ந்து, குறைந்தது ஒரு பாடலாவது பாட வேண்டும். அதேபோல், இத்தினங்களில் தேவியின் நாமத்தை பாராயணம் செய்வதும் அம்பிகைக்கு மிகுந்த உவப்பை அளிக்கும். மந்திரம், சுலோகம் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லயா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ' என்று நூற்றியெட்டு முறை சொன்னாலே அனைத்து நலன்களும் உண்டாகும்.

இனி, நவராத்திரி குறித்த சில விசேஷத் தகவல்களைக் காண்போம்.

நவராத்திரி பண்டிகை பெண்களுக்கே உரியது என்றாலும், இந்தப் பண்டிகையை முதன் முதலில் அனுசரித்தவர் ஸ்ரீராமர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோரும் நவராத்திரி பூஜை செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.

நவராத்திரி காலத்தில் கொலு வைப்பவர்கள், கொலு மண்டபத்தில் நவக்கிரக கோலம் போடுவதால் அம்பாளின் அனுக்ரஹமும் நவக்கிரகப் பலனும் ஒருங்கே கிடைக்கப் பெறுவர்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்கு அரிசி மாவையே பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் பெருகும். அதேபோல் கோலத்தை செம்மண் கலந்து போடுவது இன்னும் சிறப்பைத் தரும்.

நவராத்திரி காலத்தில் வரும் வெள்ளிக்கிழமையன்று ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு திருப்தியாக அன்னமிட்டு, அவர்களுக்கு புடைவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

அதேபோல், நவராத்திரி கால திங்கட்கிழமை ஸ்ரீ லலிதாம்பிகையின் அவதார தினமாகக் கருதப்படுவதால் இத்தினத்தில் ஒன்பது சிறுமிகளுக்குப் பட்டுப் பாவாடை தானம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் வழக்கமான நிவேதனங்களுடன், அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்வது கூடுதல் பலனைப் பெற்றுத் தரும்.

நவராத்திரி நாட்களில் தினமும் பூஜைக்குப் பிறகு, மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்ற மங்கலப் பொருட்களை ஏழைப் பெண்களுக்கு தானமாக அளிப்பது சிறப்பு.

நவராத்திரியில் நவ நாயகியரை வழிபட்டு நலன்களை அனைத்தையும் பெறுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com