
அமரர் கல்கியின் அமரத்துவமான படைப்புகள் பற்றி அனைவரும் அறிவர். ஆனால், அமரர் கல்கி திரைப்படங்களுக்கும் இசைத்தட்டுகளுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத தகவல் என்று சொல்லலாம்.அதிலும் குறிப்பாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பற்றி அமரர் கல்கி எழுதிய கவிதையை எம்.எஸ். அவர்கள் பாடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 12ம் தேதி பாரதியாரின் நினைவுநாளை யொட்டி, அமரர் கல்கியின் கவிதை இதோ…
தெய்வத்தமிழ் நாட்டினிலே…
தெய்வத்தமிழ் நாட்டினிலே – வெண்ணிலாவே – நாங்கள்
தீரமின்றிப் பேதையர் போல் வாழ்ந்திருந்தோம் – ஏதும்
செய்வதறி யாதிருந்த போதினிலே – ஒரு
சிங்க நாதம் கேட்டெழுந்தோம் – வெண்ணிலாவே!
இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார் – அந்த
இழிவும் ஒரு பெருமையென்று எண்ணி வாழ்ந்தோம் – நல்ல
அறிவொளியால் இருளகற்ற ஒருவர் வந்தார் – இதை
அமரர் நாடென்றறிந்தோம் – வெண்ணிலாவே!
கங்கையெனப் பொங்கி வரும் தண்தமிழினில் – இன்பக்
கவிதை பல புனைந்தளித்தார் – வெண்ணிலாவே – வெற்றிச்
சங்கமூதி முரசறைந்து எழுக என்றார் – இந்த
தரணியில் நமக்கு நிகர் இல்லை யென்றார்!
கவியரசர் பாரதியின் கவிதை இன்பம் – உன்
கதிரொளியில் காண்பதென்ன – வெண்ணிலாவே – இந்தப்
புவியில் நீயும் தமிழன் என்னப் பிறந்ததுண்டோ? – அவர்
புதுமைக் கவி மது அருந்தி மகிழ்ந்ததுண்டோ?