வெண்சங்கா, செந்தாழையா?

வெண்சங்கா, செந்தாழையா?
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க
– அபர்ணா சுப்ரமணியம்

*முகம் என்பது தாடை, கழுத்து இரண்டையும் சேர்ந்த அமைப்புதான். ஆனால், கழுத்தும் மிக அழகாகப் பராமரிக்கப்பட வேண்டும். தினமும் பதினைந்து நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணை அல்லது பாதாம் எண்ணை தேய்த்து, லேசாக சூடு பறக்க, பிடித்து விடலாம். கழுத்தின் பின்புறம் ஆரம்பித்து மேலிருந்து கீழாக இரு கைகளாலும் மிருதுவாக மசாஜ் செய்யலாம். பிறகு, கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கத்திற்கும், இடப் பக்கம் இருந்து வலது பக்கமாகவும், வலது பக்கத்திலிருந்து இடதுபுறமாகவும் மாற்றி செய்யவும். சுத்தமான பயத்தம் மாவு அல்லது சீயக்காய் கொண்டு தேய்த்து அலம்பி விடவும்.

* பஸ்ஸில் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதோ, டி.வி. முன்னால் அமர்ந்திருக்கும் போதோ பத்து நிமிடம் கீழ்க்கண்ட பயிற்சிகளைச் செய்யவும். நேராக உட்கார்ந்து கொண்டு, கழுத்தை 90 டிகிரி கோணத்தில் ஒருமுறை வலப்பக்கமும், ஒருமுறை இடப்பக்கமும் திருப்பவும். முக வாயை தாழ்த்தி, தோளைத் தொட முயற்சி செய்யவும். தலையை நேராக வைத்து உங்கள் தாடை மார்பைத் தொடும் அளவுக்கு முன்னோக்கி மெள்ளக் குனிந்து நிமிரவும். அதேபோல, கழுத்தைப் பின்பக்கமாகச் செய்து வந்தாலே கழுத்தில் சதை விழாது இருக்கும்.

* ஒரு ஸ்பூன் கொள்ளுப் பயறை ஊற வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து பசை போல அரைத்துக்கொண்டு, அதைக் கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் கழுத்தின் கருமை மறையும். கொதிக்காத பால் ஒரு ஸ்பூனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, சிறிது தேன் கலந்து கழுத்தில் பூசி வந்தால், 'ப்ளீச்' செய்த பலன் கிடைக்கும். சருமத்தில் பளபளப்பு ஏறும்.

* முகத்தை விட, கழுத்துப் பகுதி நிறம் குறைவாகத் தெரியும். இதற்கு படுக்கச் செல்லும் முன் கழுத்துப் பகுதியை, 'க்ளென்ஸிங் மில்க்' உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். காலையில் வெளியே கிளம்பும் முன் மாய்சரைஸர் கொண்ட சன்ஸ்க்ரீன் லோஷனை கழுத்தில் மட்டுமல்லாமல்; முதுகு, தோள் பகுதிகளிலும் தடவிக்கொள்வது அவசியம். இதனால் சூரியனின் யூ.வி. கதிர்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்கும்.

* முகத்திற்குப் போடும் ஸ்னோ, க்ரீம் பவுண்டேஷன் எதுவாக இருந்தாலும், கழுத்துக்கும் சிறிது போட்டு, லூஸ் பவுடர் அல்லது காம்பாட் பவுடர் போட்டு ஒற்றி விடவும். கனமான சங்கிலி, மஞ்சள் தடவிய தாலிக்கயிறு உராய்வதால் கழுத்துப் பகுதி கறுத்து விடும். உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்து அதனுடன் சில சொட்டுகள் தேன் கலந்து கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் கருமை மறைந்துவிடும். வெண்சங்கு போன்ற கழுத்தைப் பெறலாம். கழுத்தை முறையாகப் பராமரித்து வந்தால், 'இது கழுத்தா? அல்லது வெண்சங்கா? செந்தாழையா?' என பார்ப்பவர் பிரமிப்பார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com