ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது
Published on
ஸ்டார்ட்…கேமரா…ஆனந்த்-15
எஸ்.சந்திரமௌலி

"டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள் வெற்றி பெற்று விடுகின்றன" இதுதான் ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில் நான் ஒளிப்பதிவாளராக ஒர்க் பண்ணுவதற்கு முன்பாக, ஒரு சாதாரண ரசிகனாக, அவரைப் பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம்.

அவர் 'ஜீன்ஸ்' படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், ஒருநாள் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியிடமிருந்து, டைரக்டர் ஷங்கர் என்னைச் சந்திக்க விரும்புவதாக போன் வந்தது. தோட்டா தரணியின் அலுவலகத்தில் நான் ஷங்கரைச் சந்தித்தபோது, தன்னுடைய அடுத்த படத்துக்கு நான் ஒளிப்பதி வாளராகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டார். நானும் சம்மதித்தேன். 'ஜீன்ஸ்' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, நாங்கள் மீண்டும் சந்தித்தோம். "ஒரு சாதாரண மனிதன் ஒரே ஒருநாள் முதலமைச்ச ராவதுதான் கதை" என்று ஒற்றை வரியில் முதல்வன் கதையைச் சொன்ன போது நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். அடுத்த ஒரு மணி நேரம் முழு கதையையும் சொன்னவுடன், "கதை புதுமையாக இருக்கு; ஆனாலும் இது முழுக்க முழுக்க அரசியல் கதை என்பதால் வெள்ளை வேஷ்டி கட்டின அரசியல்வாதிகள் நிறைய வருவாங்க; படத்தை விஷுவலா எப்படி கலர்ஃபுல்லாக்கறதுன்னு நிறைய யோசிக்கணும்" என்றேன்.

அந்த ஒரு மணி நேரச் சந்திப்பில் ஷங்கரிடம் நான் நிறைய விஷயங்களைக் கவனித்தேன். அடுத்தவர் சொல்லும் விஷயங்களை அவர் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார். ஒரு விஷயம் சரியாகப் புரியவில்லை என்றால், "இருங்க… இருங்க… இப்ப சொன்னதைத் திருப்பிச் சொல்லுங்க" என்று கேட்டுக்கொள்ள அவர் தயங்கவில்லை. சொல்லும் மிக முக்கியமான விஷயங்களைத் தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் சின்னக் குறிப்பு நோட்டில் உடனே குறித்து வைத்துக் கொண்டார். ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப் பதற்கு முன்னால் அவ்வளவு பக்காவாகத் திட்டமிட்டுக் கொள்கிறார். தன்னு டைய அசிஸ்டன்ட்கள், கேமராமேன் ஆகியோருடன் மட்டுமில்லாமல் எடிட்டர், காஸ்டியூமர், ஸ்டன்ட் மாஸ்டர் என்று அத்தனை டெக்னிஷியன் களையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசி, அவர்களுடைய திறமையைப் படத்துக்கு எந்த அளவுக்கு அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கிறவர் ஷங்கர்.

ஆங்கிலத்தில் Focussed என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கு ஒரு உருவம் கொடுக்கவேண்டுமென்றால் அது டைரக்டர் ஷங்கர்தான். குதிரைக்குக் கண்பட்டை கட்டினா மாதிரி, ஒரு படத்துக்கான வேலையை ஆரம்பித்து விட்டால், அவரது சிந்தனை எப்போதும் அதுபற்றித்தான் இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் இல்லாமல், சினிமா என்பது பலரது கூட்டுமுயற்சி என்று அழுத்தமாக நம்புகிறவர். அவருடனான முதல் டிஸ்கஷ னிலேயே, அவரைப் பற்றி நான் கொண்டிருந்த, ஆரம்பத்தில் சொன்ன என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்.

வழக்கமாக, 'ஒரு சினிமாவின் வெற்றி ரகசியம் என்ன?' என்று கேட்டால், கதை, கடுமையான உழைப்பு, திட்டமிடல், அதிர்ஷ்டம், ஈடுபாட்டுடன் கூடிய கூட்டு முயற்சி, இசை, ஸ்டார் வேல்யூ, கடவுள் அருள் என்று பலவிதமான விஷயங்களைச் சொவார்கள். ஆனால் ஷங்கருடன் ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்த சமயம் அவர் சொன்ன வெற்றி ரகசியம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் சொன்னார்: "நாம் எடுக்கும் ஒரு படம், படத்தைப் பார்க்கிற அனைத்துத் தரப்பினருக்கும் எந்த அளவுக்குத் திருப்தி யைத் தருகிறதோ, அந்த அளவுக்குப் படம் வெற்றி அடையும்! ஆக, ஒரு டைரக்டர் மிகவும் புத்திசாலியாக இருக்கலாம்; அல்லது சராசரி மனிதராக இருக்கலாம்; ஆனால் அவர் எடுக்கும் படம் அவரது பலதரப்பான ரசிகர்களின் மனதைத் தொட்டு, திருப்தியளிப்பதாக இருக்க வேண்டும்."

'முதல்வன்' படத்தில் வருகிற ரகுவரன்-அர்ஜுன் டி.வி. பேட்டி காட்சியை எடுப்பதற்கு முந்தைய தினம் அவர் எவ்வளவு டென்ஷனாக இருந்தார் என்பதை நான் கிட்டே இருந்து பார்த்தேன். அன்றைய படப்பிடிப்பு முடிந்தபோது இரவு எட்டு மணி இருக்கும். "படத்தில் சுமார் 12 நிமிடங்களுக்கு வரும் ஒரு ரீல் நீளமான அந்தக் காட்சி படத்திலேயே திருப்பு முனையான காட்சி. இரண்டு பேரும் உட்கார்ந்து உலக வங்கி ரிப்போர்டில் ஆரம்பித்து பல விஷயங்களையும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்கும்போது, கொஞ்சம் போரடித்தாலும், அது படத்தையே பாதித்துவிடும். விறுவிறுப்பா அந்தக் காட்சியை எப்படி எடுக்கலாம்னு கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணலாமே" என்று சொன்னார் ஷங்கர். அந்த டிஸ்கஷன் முடிந்து நாங்கள் வீட்டுக்குப் புறப்பட்டபோது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது. படம் ரிலீசானதும், உதயம் தியேட்டரில் நான் படம் பார்த்தபோது, அந்தக் காட்சியில் வரிக்கு வரி ரசிகர்களின் கைத்தட்டலும், உற்சாகக் குரலும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.

'முதல்வன்' படத்தை, அனில் கபூர் நடிக்க `நாயக்` என்று இந்தியில் ஷங்கர் இயக்கியபோது நான்தான் அந்தப் படத்துக்கும் கேமராமேன். ஒரு சண்டைக் காட்சியைத் தமிழில் எடுத்தது மாதிரி இல்லாமல் வித்தியாசமாக எடுக்க முடிவு செய்தார். அதில் ஒரு ஷாட்டில், அனில் கபூர் உயரே எம்பிக் குதிக்கும் சமயத்தில், அந்தரத்தில் அவரை ஃப்ரீஸ் செய்து, அப்படியே கேமராவை 360 டிகிரியில் சுற்றிவரச் செய்து படம்பிடிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய் தோம். ஆங்கிலப் படங்களில் இத்தகைய காட்சிகள் இடம்பெற்றாலும், ஒரு மனிதர் அந்தரத்தில் இருக்கும் கணத்தில் கேமராவை 360 டிகிரியில் சுற்று வது இங்கே சாத்தியமில்லை. இப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க லண்டனில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார். அவர் ஏராளமான ஸ்டில் கேமராக்களை வட்டமாக நிறுத்தி, ஒரே கிளிக்கில் அத்தனை கேமராக்களையும் இயங்கச் செய்து, படம்பிடித்துவிடுவார். ஆனால் அதற்குப் பத்து லட்சம் ரூபாய் செலவாகும்.

அதற்குப் பதிலாக நான் ஒரு ஐடியா சொன்னேன். லண்டனிலிருந்து அவ்வளவு செலவழித்து ஸ்டில் கேமரா ஸ்பெஷலிஸ்ட்டை வரவழைப் பதற்குப் பதிலாக இங்கேயே ஐம்பது மூவி கேமராக்களை ஏற்பாடு செய்து, வட்டமாக நிறுத்திப் படம்பிடித்து, ஒவ்வொரு கேமராவிலும் எடுத்த காட்சி களிலிருந்து ஒரே ஒரு ஃப்ரேமை மட்டும் தேர்ந்தெடுத்து இணைத்துவிடலாம் என்பது என் ஐடியா. ஆனால் இங்கே ஒரே நாளில் ஐம்பது கேமராக்கள் கிடைக்கவில்லை. கடைசியில், படப்பிடிப்பு நடைபெறாத ஒரு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று, படப்பிடிப்பு நடத்த பெஃப்சியின் தலைவராக இருந்த இயக்குநர் கே, பாலசந்தரிடம் பேசி ஸ்பெஷல் அனுமதி வாங்கி, 38 கேமராக் களைப் பயன்படுத்தி அந்தக் காட்சியை எடுத்தோம்.

நான் பணியாற்றிய டைரக்டர்களிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது அவரது டிசிப்ளின். எதைச் செய்தாலும் சரியானபடி பிளான் பண்ணுவது; நேரப்படி எதையும் செய்வது; சின்சியாரிட்டி, நேர்மை. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம், செய்யும் வேலையை முழுமையாக ஈடுபாட்டுடன் அனுபவித்துச் செய்வது. உணவு இடைவேளையில் சாப்பிடுகிறபோது தேவை இல்லாமல் எடுத்த காட்சியைப் பற்றியோ, அடுத்து எடுக்கவேண்டிய காட்சி யைப் பற்றியோ பேசமாட்டார். ரசித்துச் சாப்பட்டபடியே சாப்பாடு பற்றித்தான் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார்.

முதல்வன், நாயக் இரண்டு படங்களும் வெளியான பின், ஷங்கரின் பாய்ஸ், அன்னியன் இரண்டு படங்களிலும் நாங்கள் இணைந்து பணியாற்றவில்லை. இடையில் நான் 'கனாக் கண்டேன்' படத்தை இயக்கினேன். அடுத்து எழுத் தாளர்கள் சுபாவுடன் 'அயன்' படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஆரம்பித்த சமயம். டைரக்டர் ஷங்கரிடமிருந்து போன் வந்தது. சந்தித்தேன். "ரஜினி நடிக்க, ஏவி.எம்.க்காக 'சிவாஜி'ன்னு ஒரு படம் பண்ணப் போறேன். என்னோட ரெண்டு படத்துக்கு நீங்க ஒர்க் பண்ணலை. இப்ப நீங்கதான் கேமராமேனாக ஒர்க் பண்ணணும்னு விரும்பறேன். சம்மதமா?" என்று கேட்டார்.

"ஒருநாள் டயம் கொடுங்க! சொல்லறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

"ரஜினி படத்துல ஒர்க் பண்ணினா நிறைய பணம் கிடைக்கும்; ஆனா ஒரு கேமராமேனுக்குப் பேர் கிடைக்காதே! " என்று தான் என் மனம் நினைத்தது.

"சிவாஜி படம் பண்ணவேண்டாம்; 'அயன்' பட வேலையைப் பார்க்கலாம்" என்று தீர்மானித்து, மறுநாள் அதை ஷங்கரிடம் தெரிவித்துவிட முடிவு செய்தேன்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com