அருள்வாக்கு

அருள்வாக்கு
Published on

தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம்

ராஜா, அவனுக்கு ஆலோசனை சொல்கிறவர்கள், ஊர் சபைக்காரர்கள் ஆகியவர்களால் மொத்தத்தில் நிர்வாகம் நடந்தது. யார் வேண்டுமானாலும் ராஜாவாக வரமுடியாது. அது ஹெரிடிடரி.

மற்ற ஸ்தானங்களுக்கு அதாவது அவனுடைய ஆலோசனை சபை, ஊராட்சி சபை முதலியவற்றில் யார் வேண்டுமானாலும் இடம் பெறலாமா? 'கூடாது. ஊர் நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியன சிக்கலான விஷயம். நாட்டு நிர்வாகத்தை விட ஊர் நிர்வாகம் சிக்கல் குறைந்தது, பொறுப்பு குறைந்தது என்றாலும் இதிலேயும் சிக்கல் உண்டு, பொறுப்பு உண்டு. எனவே, உரிய தகுதி பெற்றிருப்பவர்களிடம்தான் பொறுப்புக் கொடுத்து மேலே சொன்ன சபைகளில் அமர்த்தலாம்' என்று ஏற்பாடு செய்தார்கள்.

இப்படி அமர்த்துவதிலேதான் ஜனங்கள் தங்களுக்கும் பங்கு இருக்கிறதென்று சந்தோஷப்படும்படியாக ஒரு தேர்தல் முறையை ஊர் விஷயத்தில் கையாண்டார்கள்.

இப்போது இப்படி உங்களையெல்லாம் மெனக்கெடுத்தி உட்காரவைத்து முக்கியமாகச் சொல்ல நினைத்து, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தற்போது ஜனநாயகத்தின் மூச்சாக நினைக்கப்படும் "தேர்தல்" என்ற ஏற்பாடுகூட இருந்தது என்பதைப் பற்றித்தான். தேர்தல் இருந்தாலும் இப்போதுள்ள தேர்தல் முறைக்கு எப்படி அந்தக் கால முறை வித்தியாசமாயிருந்தது என்பதைச் சொல்லி, இப்போதிருப்பதைவிட அந்த முறை எப்படி சிலாக்கியமானது என்று கொஞ்சம் காட்ட ஆசை.

'ராஜ்யத்தையோ, ஊரையோ நிர்வாகம் செய்பவர்களுக்குத் தகுதி இருக்க வேண்டும், எல்லாரையும் அதில்விட முடியாது' என்றால், அப்போது,  'இப்படிப்பட்ட தகுதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துத்தான் அவர்களுக்கு ஸ்தானம் தரவேண்டும்' என்றும் ஆகிவிடுகிறது. ராஜ்யத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ராஜகுமாரன் பட்டத்துக்கு வரும்போது, அவனுடைய தகப்பனாருக்குத் துணையாயிருந்த சதஸ் பெரியவர்களே இவனுக்கும் ஆலோசனை சொல்லி நல்ல வழியிலே போகப் பண்ணுவார்கள். அப்புறம் அவர்கள் வயோதிகத்தில் பதவியை விட்டுவிட்டுப் போனாலோ, அல்லது காலமாய்விட்டாலோ, அந்த ராஜாவே அதற்குள் நல்ல ஆட்சி அனுபவமும், விவேகமும் பெற்றிருப்பானாதலால் தனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார் என்று பார்த்து அப்படிப்பட்டவர்களை நியமனம் செய்துகொண்டுவிடுவான். இங்கே ராஜாவேதான் 'அப்பாயின்டிங் அதாரிடி'.

ஊர் விஷயத்தைப் பார்க்கலாம். ஊர் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் சபையினருக்  தகுதிகள் இருக்கவேண்டும்.  ஆனாலும் ராஜா அல்லது ராஜாங்க அதிகாரியால் அவர்கள் நியமிக்கப்பட்டதாக இல்லாமல், 'தங்கள் ஊரை நிர்வகிப்பவர்களின் நியமனம் தங்கள் ஊராராலேயே முடிவாயிற்று' என்று ஜனங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்படிச் செய்தால் நன்றாய் இருக்கும்.  'எந்த ஊரிலோ இருந்துகொண்டு, யாரோ உத்தரவு போட்டு நம்முடைய இந்த சொந்த ஊரை நிர்வகிக்க ஆசாமிகள் வரவேண்டுமா' என்று அவர்கள் நினைக்காமல்,  'தங்களுக்கே இதில் பங்கு இருக்கிறது, 'பார்ட்டிஸிபேஷன்' இருக்கிறது' என்று பெருமையுடன் நினைக்கப் பண்ணவேண்டும். இதற்கான ஒரு தேர்தல் முறையைத்தான் சோழர் ஆட்சியில் பார்க்கிறோம்.

சரி, அப்படியானால் பொது ஜனங்களையே, "உங்கள் பிரதிநிதிகளாக சபைக்காரர்களை 'எலெக்ட்' செய்யுங்கள்" என்று விட்டுவிட்டார்களா?

தற்போது (1949) இப்படித்தான் நடக்கவேண்டுமென்று ஏற்பாடாகி வருகிறது. ஊர் மட்டுமில்லை, மாகாணம், தேசம் பூராவுக்குமே இப்படி நடத்துவதுதான் உத்தேசமாயிருக்கிறது. குடியரசாக தேசம் ஆகிறபோது ஜனங்கள் எல்லாரும் வோட்டுப் போட்டு பார்லிமென்டுக்கும், அஸெம்ப்ளிக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தப் பண்ணவேண்டும் என்பதற்கு ஏற்பாடாகி வருகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com