​ஆண்டாள் நாச்சியார் அறிவுத் திறன்!

​ஆண்டாள் நாச்சியார் அறிவுத் திறன்!
Published on

– வேதவல்லி, புதுச்சேரி

ருமுறை வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் திருப்பாவை உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்,
'கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.'
என்ற பாடலைப் பாடிக்காட்டினார்.

இந்தப் பாடலுக்கான பொருள் : 'அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்குக் கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக் கதவைத் திற' என்பதாகும்.

அதேபோல், இந்தப் பாடலுக்கான விளக்கம் என்னவெனில், 'பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில், 'கேசவா' என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லி விட்டு, அன்றாடப் பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்றுதான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி தலத்தை மனதில் கொண்டே ஆண்டாள் நாச்சியார் பாடியருளினாள்' என்பதாகும்.

ரி… இனி விஷயத்துக்கு வருவோம். இந்தப் பாடலைப் பாடிய வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள், அந்த உபன்யாசத்திலேயே. ' ஆனைச்சாத்தன் பறவை இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினாராம்.

பிரிதொரு சமயம், சஞ்சாரமாகக் கொச்சிக்குச் சென்றிருந்தபோது, மழையில் நனைந்தபடி வெட்டவெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார் ஜீயர் ஸ்வாமிகள். அப்போது வழியில் தென்பட்ட சிறுவன் ஒருவன், அங்கே வந்த பக்ஷிகளைக் கண்டு, 'இதோ ஆனைச்சாத்தன்' என்று கூறியபடி ஓடினான்.

அதைக் கண்ட ஜீயர் ஸ்வாமிகள், "இல்லை என்று கூறிய எனக்கு, இதுதான் அந்த ஆனைச்சாத்தன் பறவை என்று உணர்த்தினாயே" என்றபடி அந்தச் சிறுவன் காலில் விழுந்து வணங்கினாராம். அதோடு, 'சிறுமி ஆண்டாளுக்கு எப்படிப் பறவைக்கூட்டங்கள் பற்றியும் தெரிந்திருந்தது?' என்றும் வியந்தாராம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com