நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!

நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!
Published on

தனுஜா ஜெயராமன்

சுக்ரனின் அருள் பரம ஏழையையும் குபேரனாக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீ சுக்ரன் அருள் பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு வளங்களையும் பெறுவர் என்பது நம்பிக்கை. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ சுக்ர தலமாக சென்னை புறநகர், மாங்காடு பகுதியில் அமைந்த அருள்மிகு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. மேலும், இக்கோயில் சென்னையின் மிக முக்கியமான பரிகாரத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் வரப்ரசாதியாக ஸ்ரீ வெள்ளீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அசுரர்களின் குலகுருவான சுக்ராச்சாரியாருக்கு வெள்ளி என்ற பெயருண்டு. கண் பார்வையைப் பறிகொடுத்த அவருக்கு சிவபெருமான் இத்தலத்தில் காட்சியளித்து அருள்பாலித்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவபெருமானால் கண் பார்வை பெற்ற சுக்ராச்சாரியார் பூஜை செய்து சிவபெருமானை வழிபட்ட சிறப்புடையது இந்தத் திருக்கோயில். அதனாலேயே சுக்ராச்சாரியாரின் பெயராலேயே சிவபெருமான் இத்தலத்தில்
ஸ்ரீ வெள்ளீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இப்பெருமானுக்கு பார்க்கவேஸ்வரர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் அம்பிகைக்கு தனிச் சன்னிதி கிடையாது. சுவாமி சன்னிதிக்கு எதிரே ஸ்ரீ காமாட்சி பாதம் மட்டுமே உள்ளது.

யிலாயத்தில் ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, உலகமே இருண்டது. இதனால் சினமுற்ற ஈசன், பார்வதி தேவி பூலோகத்தில் மானிடப் பிறவி எடுக்கும்படியும் அதன் பின் பார்வதி தேவியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அதன்படி பார்வதி தேவி இத்தலத்தில் வந்தடைந்து தவ வாழ்வு மேற்கொண்டார். அச்சமயம், அங்கு இழந்த தனது பார்வையை மீண்டும் பெற வேண்டி சுக்ராச்சாரியாரும் தவம் மேற்கொண்டிருந்தார். அம்பிகைக்குக் காட்சி தந்து அருள வந்த சிவபெருமான், சுக்ராச்சாரியாருக்கும் காட்சி தந்தார். ஆனால், அப்போது அவர் தவத்தில் இருந்ததால் சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை. அதைத் தொடர்ந்து, பார்வதி தேவியிடம் காஞ்சி திருத்தலம் வந்து தம்மை நோக்கித் தவம் செய்யும்படியும், அங்கு தாம் அம்பிகைக்குக் காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவம் மேற்கொண்டு ஈசனை வழிபட்டு நற்கதி அடைந்தார்.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மூலவர் சதுர பீடத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். கருவறை விமானத்தில் எண் திசை அதிபர்களும் வீற்றிருக்கிறார்கள். திருச்சுற்றில் வீரபத்திரரை தரிசிக்கலாம். இக்கோயில் முருகன் சன்னிதியில் இறைவனும் இறைவியும் ஒரே கல்லில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடதுபுறம் திரும்பிய நிலையில் உள்ளார். லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், விஷ்ணுவும் அவரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் மகாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடன் உள்ளார். அவ்வாறே கோஷ்டத்தில் உள்ள துர்கையும் பிரயோகச் சக்கரத்துடன் விளங்குவது சிறப்பு.

இக்கோயில் கணபதி, 'நெற்கதிர் விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இடது கரத்தில் நெற்கதிரும், கீழே மாங்கனியும் ஏந்தியுள்ளார். தல விருட்சம் மாமரம். தல தீர்த்தம் சுக்ர தீர்த்தம். இங்கு அழகிய நந்தவனம் ஒன்றும் அமைந்துள்ளது. இது, சுக்ரன் கண் பார்வை பெற்ற சிறப்புத் தலமாதலால் கண் பார்வை குறைபாடு உடையவர்கள் ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வேண்டிக் கொண்டு ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்தும், மொச்சை பயறு நெய்வேத்தியம் செய்தும் வழிபடுகின்றனர்.

இந்தக் கோயில் சென்னையின் மிக முக்கியமான நவக்கிரக கோயில்களில், சுக்ர பரிகாரத் திருத்தலமாக விளங்குகிறது. ஸ்ரீ சுக்ரன் மக்களுக்கு செல்வம், செழிப்பு, நல்ல குடும்பம் போன்றவற்றை வழங்குகிறார். இந்தச் சிறப்பு மிக்க திருத்தலத்தில் அருள்மிகு வெள்ளீஸ்வரை வழிபட்டு வாழ்வில் சுபிட்சம் பெறலாம்.

அமைவிடம் : பூவிருந்தவல்லியிலிருந்து சற்றுத் தொலைவில் மாங்காட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில். சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிறைய பேருந்து வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 6.30 முதல் 12.00 மணி வரை. மாலை 4.30 முதல் 8.30 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com