
– கே.அம்புஜவல்லி
பக்தர் ஒருவர் மனதில், 'தனது பக்தி தனக்கு மோட்சத்தைப் பெற்றுத் தருமா?' என்று நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. அதனால் தாம் சந்திக்கும் அனைவரிடமும், "எனக்கு மோட்சம் கிடைக்குமா" என்று ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தார் அவர். அவரை விநோதமாகப் பார்த்த மற்றவர்கள், அவரின் மேல் பரிதாபப்பட்டு, "ஓ… தாராளமாகக் கிடைக்குமே" என்று கூறிச்செல்வது வழக்கமாக இருந்தது.
எவரேனும், "உங்களுக்கு மோட்சம் கிடைப்பது சந்தேகமே" என்று கூறிவிட்டால் அவர்களிடம், "ஏன் கிடைக்கது? மோட்சம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு அவர்களை நச்சரித்துவிடுவார். அதற்கு பயந்தே அனைவரும், "உங்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்று கூறிவிட்டு ஓடி விடுவார்கள்.
ஒரு நாள் வேத பண்டிதர் ஒருவரைச் சந்தித்த அந்த பக்தர், அவரிடமும் 'தனக்கு மோட்சம் கிடைக்குமா?' என்று கேட்டார். அவர் மேல் கருணை கொண்ட பண்டிதர், "சுவாமி, உங்களுக்கு மோட்சம் கிடைக்குமா கிடைக்காதா என்று கூறும் வல்லமை திருவண்ணாமலையில் அமர்ந்திருக்கும் பகவான் ரமண மகரிஷிக்கு மட்டுமே உண்டு. நீங்கள் அவரைச் சந்தித்து உங்கள் சந்தேகத்தைக் கேளுங்கள். உங்களுக்கான பதிலை அவர் கூறும் வரை பொறுமையோடு காத்திருங்கள்" என்று கூறினார்.
உடனடியாக திருவண்ணாமலைக்குச் சென்ற அந்த பக்தர், பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்து வணங்கி, தனது சந்தேகத்தை அவரிடமும் கேட்டார்.
அதைக்கேட்டு புன்னகை புரிந்த பகவான் ரமண மகரிஷி, பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த பக்தர் அதே சந்தேகத்தை மகரிஷியிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் மேல் கருணை கொண்ட மகரிஷி, "நான் உனக்கு குருவும் இல்லை, நீ எனக்கு சிஷ்யனுமில்லை. என்னிடம் உனது மோட்சம் பற்றிக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்?" என்று கூறினார்.
உடனே அந்த பக்தர், "பகவானே, எனது குருவாக ஏற்றுத்தான் நான் உங்களைத் தேடி வந்துள்ளேன். இனி, நீங்கள்தான் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார் மகரிஷி.
"சரி, நீ செய்த புண்ணியங்கள் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்து விடு. குரு கேட்டால் சிஷ்யன் எதையும் கொடுக்க வேண்டும் என்பதை நீ அறிவாயோ?" என்றார்.
அதைக் கேட்டுத் திகைத்த அந்த பக்தர், தம்மிடம் இருக்கும் மிக சொற்பமான புண்ணியத்தையும் இவரிடம் சமர்ப்பணம் செய்துவிட்டால் தமக்கு மோட்சம் எப்படி கிடைக்கும்' என்று யோசித்து தயக்கத்தில் ஆழ்ந்தார்.
அதைக் கண்ட மகரிஷி, "என்னப்பா… இப்படி யோசிக்கிறாய்?" என்று கேட்டதும், தயக்கத்தோடு தமது புண்ணியங்களை பகவானிடம் சமர்ப்பித்தார் அந்த பக்தர்.
"சரி… இனி உனது பாவங்கள் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்து விடு" என்றார் பகவான்.
அதைக்கேட்டு அதிர்ந்துபோன அந்த பக்தரின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. சற்றும் தாமதிக்காமல் நெடுஞ்சாண்கிடையாக பகவானின் திருவடியில் விழுந்து கதறினார் அந்த பக்தர்.
அவரை கருணையோடு நோக்கிய பகவான் ரமண மகரிஷி, "அடியவரே கவலையை விடுவாயாக. நீ கூறியபடி உனது சொற்ப புண்ணியங்களை என்னிடம் சமர்ப்பித்து விட்டாய். உனது பாப மூட்டைகள் உனது கண்ணீரில் கரைந்து விட்டது. உனது கண்ணீர் உன்னைத் தூய்மை ஆக்கிவிட்டது. தூய பக்தியே மோட்சக் கதவைத் திறந்து விடும். அந்தக் கதவு உனக்காக எப்போதும் திறந்தே இருக்கும்" என்றார்.
அதைக் கேட்ட அந்த பக்தர் வழிந்த கண்ணீரை அடக்க முடியாமல் பகவான் முன்பு கரம் தொழுது நின்றார்.