யோகத் திதிகள்!

யோகத் திதிகள்!
Published on

– எம்.அசோக்ராஜா

ல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும், யோகிகளாலும், தபஸ்விகளாலும் கண்டுணர்ந்து சொல்லப்பட்ட பொக்கிஷம் திதிகள்.
வானில் தோன்றும் நட்சத்திரங்களை 27 ஆகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி, ஏனைய ஜீவராசிகளின் ஏற்றத்தாழ்வுகளை கணித்தனர்.

அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர்பிறை (சுக்ல பட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) காலமாகும். வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய்பிறை காலத்தில் சுப காரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். 'தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு' என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இனி, எந்த திதியில் என்ன காரியங்கள் செய்யலாம் என்பதையும், அந்தந்த திதியின் அதிதேவதைகளையும் காணலாம்.

பிரதமை : வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கு உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் இன்று ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.
இந்தத் திதிக்கு அதிதேவதை அக்னி.

துவிதியை : இந்தத் திதியில் அரசு சம்பந்தமான காரியங்களை ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். விரதங்களை மேற்கொள்ளலாம். இஷ்ட தேவதையை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். இந்தத் திதிக்கு அதிதேவதை பிரம்மன்.

திருதியை : இந்நாளில் குழந்தைக்கு முதன் முதலில் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் போன்ற சுபச் செயல்களைச் செய்யலாம்.
சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).

சதுர்த்தி : முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த திதியாக இந்நாளைத் தேர்ந்தெடுத்தார்கள். அக்னி பயன்பாடு உடைய, நெருப்பு சம்பந்தமான காரியங்களைச் செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதியில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி : இந்நாள் அனைத்து சுப காரியங்களையும் செய்ய உகந்த திதி ஆகும். குறிப்பாக, சீமந்தம் செய்ய சிறப்பு நாளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புதிதாக மருந்து எடுத்துக்கொள்ள, ஆபரேஷன் செய்து கொள்ள மிக நல்ல நாள். இந்தத் திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவர். எனவே, நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது.
நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட, தோஷம் விலகும்.

சஷ்டி : இன்று சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடவும், வாகனம் வாங்கவும், புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளவும் நல்ல தினம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாவதோடு, சத்புத்திர பாக்கியமும் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை இந்நாளில் வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

சப்தமி : பயணங்கள் மேற்கொள்ள மிக உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்க, வீடு, தொழில் இடமாற்றம் செய்து கொள்ள, திருமணம் புரிய நல்ல நாளாகும். இந்தத் திதியின் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரிய பகவானை வழிபடுவது சிறப்பாகும்.

அஷ்டமி : இந்நாளில் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவபெருமானே (ருத்ரன்) இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்.

நவமி : சத்ரு பயங்களை நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

தசமி : இந்தத் திதியில் அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப் பணிகளுக்கு மிக உகந்த நாளிது. பயணங்கள் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.

ஏகாதசி : புதிதாக விரதங்கள் மேற்கொள்ள மிக உகந்த திதி இது. இந்நாளில் திருமணம் செய்யலாம். சிற்ப காரியங்கள், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு ருத்ரனே அதிதேவதை ஆவார்.

துவாதசி : மதச்சடங்குகளில் ஈடுபட மிக உகந்த நாள் இது. இந்தத் திதியின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார்.

திரயோதசி : இந்தத் திதியில் சிவ வழிபாடு செய்ய மிகவும் விசேஷமாகும். பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்நாளில் செய்யப்படும் வழிபாடு எதிர்ப்புகளை விலக்கும். தெய்வ காரியங்களில் ஈடுபட உகந்த நாள்.

சதுர்த்தசி : ஆயுதங்களை உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி தேவியே இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவாள்.

பௌர்ணமி : இந்நாளில் ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதங்கள் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு அன்னை பராசக்தியே அதிதேவதை ஆவாள்.

அமாவாசை : இன்று பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை, வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தான, தர்ம காரியங்கள் செய்ய மிக உகந்த நாள். இயந்திரப் பணிகளை மேற்கொள்ளலாம். இந்தத் திதிக்கு சிவன், சக்தி ஆகியோர் அதிதேவதை ஆவர்.

மேற்கண்ட திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். இன்று சுப காரியங்களில் ஈடுபடலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com