வார்த்தையிலும் உண்டு விஷம்!

வார்த்தையிலும் உண்டு விஷம்!
Published on

– எ.எஸ்.கோவிந்தராஜன்

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்தது. திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒருசில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனையில் அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அச்சமயம், ஸ்ரீ கிருஷ்ணர் அந்த அறைக்குள் நுழைய, திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும் ஓடி வந்து அவரிடம் ஒட்டிக்கொண்டாள். கிருஷ்ணர் அவள் தலையை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தார். அவளோ, அழத்தொடங்கி விட்டாள்.

நேரம் மெல்ல நகருகிறது. அவளிடமிருந்து விலகி, பக்கத்து படுக்கையில் உட்கார்ந்த கிருஷ்ணர் கேட்டார், "திரௌபதி, என்ன நடந்தது?"

"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!"

"விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது, அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய் திரௌபதி! உன் பழிவாங்கல் முடிந்தது. துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல; கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றார்
ஸ்ரீ கிருஷ்ணர்.

"சகோதரா, என் மனக்காயங்களைத் ஆற்ற வந்தீர்களா? அல்லது அதன் மீது உப்பு தூவ வந்தீர்களா?" என்றாள் திரௌபதி.

"இல்லை திரௌபதி… உண்மை நிலையை உனக்கு உணர்த்தவும், இவை எல்லாம் நமது தொலைநோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவுகள் என்பதை உணர்த்தவும் வந்தேன்" என்றார் கிருஷ்ணர்.

"அதனால் என்ன? இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?" என்றாள் திரௌபதி.

"இல்லை திரௌபதி… நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால், உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்திருப்பாயேயானால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க
மாட்டாய்" என்றார் கிருஷ்ணர்.

"நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?" என்றாள் திரௌபதி.

"நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப்படுத்தாமல், போட்டியில் கலந்துகொள்ள அவனுக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு விதமாக இருந்திருக்கக் கூடும்! அதன் பிறகு, குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை அப்போது ஏற்றுக்கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும். அதற்குப் பிறகு உன் அரண்மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய், 'பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்' என்று. அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும், ஒருவேளை சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்குப் பொறுப்பு திரௌபதி. பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல; உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்" என்றார்
ஸ்ரீ கிருஷ்ணர்.

பற்களில் விஷமில்லை. ஆனால், பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே, வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள். ஏனென்றால், மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com