ஆடி அதிசய விழாக்கள்!

ஆடி அதிசய விழாக்கள்!
Published on

– டி.எம்.இரத்தினவேல்

டி மாதம் – தமிழர்களின் வாழ்வோடு கலந்தது. சமயம், சமுதாயம், பண்பாடு எனப் பல கோணங்களிலும் தமிழர்தம் ஒரு பகுதியாக மாறிவிட்ட இம்மாதம், கடவுளை வழிபடுவதற்கு மிக உகந்ததாகும். உழைப்பை ஆராதிக்கும் மாதம். உறவுகளைப் போற்றும் மாதம். பொங்கும் புதுப்புனலை உற்சாகமாக வரவேற்கும் மாதம்.

ஆடி மாதம் கொண்டு வருவது காற்றையும் நீர்ப்பெருக்கையும் மட்டுமல்ல; புத்துணர்ச்சியோடு உற்சாகத்தையும் உழைப்பதற்கான ஊக்கத்தையும் அது கொண்டு வருகிறது. ஆடிப்பெருக்கு பல்வேறு ஊர்களில் பலவித வைபவங்களாக, விழாக்களாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். இவற்றைத் தவிர மண்ணின் மணமும், பாரம்பரியமும் இழையோடும் எத்தனையோ சடங்குகள், சம்பிரதாயங்கள் தமிழகமெங்கும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ந்த வகையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்த அமணலிங்கேஸ்வரர் கோயிலில், 'ஆடித் திருவிழா' வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருமூர்த்தி மலையில் வாழும் பதினெட்டு கிராம மக்களும் அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை, 'கஞ்சிமலையான் கோயில்' என்று அழைக்கிறார்கள். இன்றும் கஞ்சிமலையான் என்றுதான் போற்றி வணங்கி வழிபடுகின்றனர்.

ஆடி 18ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் இங்கே களைகட்டும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து கூடுவர். இத்தலத்தை, 'புதுமணத் தம்பதிகளின் சடங்கு தேசம்' என்கிறார்கள். தம்பதிகள் சமேதராக பெரும்பாலான மக்கள் திரண்டு வருவது சிறப்பு. அவர்கள் பல சடங்குகளை இங்கு செய்து முடிக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் வாழும் மக்கள் பெரும்பாலோர் விவசாயிகள் என்பதால், ஆடிப் பட்டம் சிறக்க அவர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்து பக்தியுடன் வேண்டிக்கொள்வது மெய்சிலிர்க்கச் செய்யும்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஐந்து ஆறுகள் ஒன்றாகக் கலந்தோடி வருகின்றன. அந்த ஆற்றில் பல வகையான மீன்கள் உள்ளன. இக்கோயில் மூலவர் அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் ஆற்றில் உள்ள மீன்களை யாரும் பிடிப்பதில்லை. நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி பாய்ந்து டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கிறது. ஆடி முதல் நாளும், 18ம் பெருக்கும் இப்பகுதி மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு காவிரி ஆற்றுப்படுகையில் நடக்கும் விழாவுக்கு நிகராக கொல்லிமலையில் ஆண்டுதோறும்  ஆடிவிழா 'வல்வில் ஓரி விழா'வாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருவது வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

குமரி மாவட்டம், குழித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆடி 18ல் தாமிரபரணியில் நீராடி, மறைந்த முன்னோர்களின் நினைவாக ஒரு மரக்கன்றை வாங்கி நட்டுச் செல்கிறார்கள். இதை, 'வாவு பலி விழா' என்கிறார்கள். 'வாவு பலி' என்ற பெயரில் ஒரு பொருட்காட்சியும் நடத்தி வருகிறார்கள். இவ்விழா முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தப்பட்டது. இன்று இங்கு அனைத்து விவசாய விளைபொருட்களையும் கொண்டுவந்து பொருட்காட்சியில் வைத்து கண்டுகளிப்பார்கள். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொள்வது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com