ஆனி திருமஞ்சனமும்; ஆடி அமாவாசை வழிபாடும்!

ஆனி திருமஞ்சனமும்; ஆடி அமாவாசை வழிபாடும்!

Published on

– மாலதி சந்திரசேகரன்

'கோயில்' எனும் வார்த்தை பொதுவாக இரண்டு கோயில்களையே குறிக்கும். ஒன்று, வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்; மற்றது, சைவர்களுக்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் அருள்பாலிக்கும் சிதம்பரம் ஆகும்.

கயிலையங்கிரியில், சிவபெருமான் ஆடிய தாண்டவத்தைக் காண வேண்டும் என்று ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரும் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய சிவபெருமான், 'பொன்னம்பலம்' என்று கூறப்படும் சிதம்பரம் க்ஷேத்ரத்தில் அவர்களுக்காக ஆடிய தாண்டவம், 'ஆனந்தத் தாண்டவம்' என்று கூறப்படுகிறது. இவர் பூலோகத்தில், ஆனந்தத் தாண்டவம் புரிவதற்காக, இந்த க்ஷேத்ரத்தில் ஆதி ஸ்வயம்பு மூலவராக எழுந்தருளியதால், இங்கு இருக்கும் மூலவருக்கு, 'திருமூலநாதர்' என்ற திருப்பெயர் உண்டானது. 'திருமந்திரம்' இயற்றிய திருமூலர் வேறு; இந்த மூலவர் பெருமான் வேறு.

சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் உணர்த்துகிறது. சிதம்பரம்,
ஸ்ரீ நடராஜா் கோயிலின், சித்சபையில் உள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத
ஸ்ரீ நடராஜ மூா்த்திக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்திலும் , ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலும்,  ஆவணி மாதம் சதுர்த்தசியிலும் , புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும், மாசி மாதம் சதுர்த்தசியிலும் என ஆறு மாதங்களில் ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு தொடரும் வழக்கமாகும். இந்தத் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி முனிவர் ஆவர்.

அன்றைய நாளில், ஸ்ரீ நடராஜரையும், அன்னை ஸ்ரீ சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். அங்கே அவர்களுக்குத் திருமஞ்சனம்   நடைபெறும். நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருளுவார்கள். அப்பனும் அம்மையும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி திவ்ய தரிசனமாகும். அன்றிரவு சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் ஆனி உத்திரத் திருவிழா, இதற்கு அடுத்த நாள் விடையாற்றி உத்ஸவத்திற்குப் பின் கொடி இறக்கத்துடன் இத்திருவிழா நிறைவுபெறும்.

இந்த வருடம், ஆனி திருமஞ்சனம் ஜூலை 6ஆம் தேதி அமைகிறது. திருமஞ்சனம் என்றால் மங்களகரமான மகா அபிஷேகம் என்று பொருள். திருமஞ்சனத்தின் பொழுது, பதினாறு வகையான குளிர்ந்த அபிஷேகப் பொருட்களால் பகவானுக்கு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் தேவர்கள், ஸ்ரீ நடராஜப் பெருமானை பூஜிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனி திருமஞ்சனத்தன்று ஆலயத்தில், ஸ்ரீ நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசித்தால், சுமங்கலிகளுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புத்திரப்பேறு, கல்வியில் மேன்மை, குடும்ப ஒற்றுமை ஆகியவை அனுக்கிரகமாகும்.

வீட்டில் நடராஜர் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் அபிஷேகம், ஆராதனை செய்யலாம். ஸ்ரீ நடராஜப்பெருமானின் விக்ரஹம் இல்லாதவர்கள், சிவலிங்கத்தையே நடராஜர் ஸ்வரூபமாக பாவித்து அபிஷேகம், ஆராதனை செய்து சிவ ஸ்தோத்திரங்களைப் படித்து, மிளகு சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்யம் செய்யலாம்.

னி மாதம் முடிந்த பின், அடுத்தது ஆடி மாதம் பிறக்கப்போகிறது. ஆடியில் அநேக விசேஷ நாட்கள் உண்டு. ஆடியில் வரும் சுப நாட்களை நாம் கொண்டாடினாலும், முக்கியமாக பித்ருக்களைக் கொண்டாட வேண்டிய தர்ப்பண நாட்களில் நாம் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை மறந்து விடக்கூடாது.

அமாவாசை திதியை, 'பித்ரு திதி' என்று கூறுவர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் மற்றும் தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் விலகி, அவர்கள் தம் சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காகவே செய்யப்படுகின்றன.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னரே தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களும் ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.

ஆடி அமாவாசையை ஒட்டி, பெண்கள் அனுசரிக்க வேண்டிய ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மாங்கல்ய பலம் பெற, ஆடி அமாவாசைக்கு முதல் நாள் பெண்கள் படிக்க வேண்டிய ஒரு கதை.

முன்னொரு காலத்தில், அழகாபுரி என்ற பட்டணத்தை, கத்தலை ராஜா என்கிற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அம்மன்னனின் போதாத காலம் பிறந்த ஆண் குழந்தை பதினாறு வயதில் இறந்து விடுவான் என்றும், சடலத்திற்கு நற்குணங்கள் பொருந்திய ஒரு பெண் மாலையிட்டாள் என்றால், அதாவது திருமணம் செய்து கொண்டாள் என்றால், இறந்த மகன் மீண்டும் உயிர் பெறுவான் என்றும் காளி தேவி அசரீரியாக வாக்குக் கூறினாள்.

கத்தலை ராஜாவின் மகன் பேரழகனாகத் திகழ்ந்தான். ஆனால், காளி தேவியின் வாக்குப்படி பதினாறாவது வயதில் உயிர் துறந்தான். அப்பொழுது நாட்டில் பறை அறிவிக்கப்பட்டது. எந்தப் பெண்ணாவது, சடலத்தைத் திருமணம் செய்து கொண்டால், அவள் குடும்பத்திற்குத் தேவையான அளவு பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வூரில் கங்கா என்று ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண் இருந்தாள். தாய் தந்தையை இழந்த அவளை, அண்ணன்மார்களும் அண்ணிகளும் மிகுந்த கொடுமைக்கு உள்ளாக்கி வந்தார்கள். இந்தப் பறை அறிவிப்பைக் கேட்ட அண்ணன்களும் அண்ணிகளும் எப்படியாவது கங்காவை அந்த சடலத்திற்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் தேவையான அளவு பொன்னும் பொருளும் கிடைக்கும். சுகமாக வாழலாம் என்று கருதினார்கள்.

அவர்களின் கருத்தினை அரச குடும்பத்தினருக்குத் தெரிவித்தபொழுது, அரசனும் அரசியும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அவளை அழைத்து வர அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு ஒன்று அனுப்பப்பட்டது. அண்ணன்மார்களும் அண்ணிகளும் கங்காவின் கண்களைக் கட்டி, அவளை அப்பல்லக்கில் ஏற்றி, விஷயத்தைக் கூறாமல், அரச மாளிகைக்கு அனுப்பி வைத்தனர். அரச மாளிகையை அடைந்ததும் படுக்க வைக்கப்பட்டிருந்த சடலத்தை கண்ட கங்கா, தனக்கு இப்படி ஒரு வாழ்வா? இவ்வளவு அழகான ஒரு புருஷனா? என்று மலைத்து நின்றாள். கையில் கொடுக்கப்பட்ட மாலையை சடலத்திற்கு அணிவித்து விட்டு, இறந்த ராஜகுமாரனை தட்டி எழுப்பினாள். பிறகுதான் அவளுக்கு உண்மை தெரியவந்தது. கதறினாள்… தான் வஞ்சிக்கப்பட்டது புரிந்தது.

அந்த சமயம் வானவீதியில் சிவபெருமானும், பார்வதி தேவியும் உலா சென்று கொண்டிருந்தார்கள். கங்காவின் நிலைமையைக் கண்ட பார்வதி தேவி, தன் கணவரிடம், இளவரசனுக்கு மீண்டும் உயிரைத் தருமாறு வேண்டிக் கொண்டார். சிவபெருமானும் வஞ்சிக்கப்பட்ட கங்காவுக்கு நன்மை செய்யும் பொருட்டு ராஜகுமாரனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து ஆசிர்வதித்தனர். இது நடந்தது ஒரு ஆடி அமாவாசை தினத்தில்தான்.

அப்பொழுது கங்கா ஒரு வரம் கேட்டாள். சிவபார்வதியும் அவள் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்கள். அதாவது, ஆடி அமாவாசைக்கு முன்தினம் சுமங்கலிகள் இந்த கதையைக் கேட்டாலோ அல்லது படித்தாலோ அவர்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்க வேண்டும் என்பதே அந்த வரம். தான் சுமங்கலித்துவம் பெற்றதோடு அல்லாமல், எல்லா பெண்களுக்குமே அந்தப் பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி வரம் பெற்ற கங்காவை அன்றைய தினம் மனதில் கொள்ள வேண்டும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com