அழகிய மணவாளர் நம்பெருமாள் ஆனார்!

அழகிய மணவாளர் நம்பெருமாள் ஆனார்!
Published on

– மஞ்சுளா சுவாமிநாதன்

ஸ்ரீரங்கம் கோயிலின் உத்ஸவ மூர்த்தி அழகிய மணவாளர்,
48 ஆண்டுகள் பல்வேறு இடங்களில் வாசம் செய்து, மீண்டும் 1371ஆம் ஆண்டு ஶ்ரீரங்கம் வந்தடைந்த அற்புத நிகழ்வின் சுருக்கம் இந்தப் பதிவு…

ஸ்ரீரங்கம் கோயில் 1323ஆம் ஆண்டு பங்குனி திருவிழா அரங்கனிடம் உத்தரவு கேட்டுத்தான் துவங்கப்பட்டது. திருவிழாவின் எட்டாம் நாள் அரங்கனின் பக்தர்கள் அனைவரும் திருமுற்றத்தில் கூடி அரங்கனுக்கு திருமஞ்சனம் ஆவதை கண்ணாரக் கண்டு தரிசிக்கக் காத்திருந்தனர். தொண்டை மண்டலத்தை வெற்றி கொண்டு தெற்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த முகம்மதியப் படையின் நோக்கம் திருவரங்கத்தை வசப்படுத்துவதும் அற்புத அழகிய மணவாளர் விக்ரஹத்தை கவர்ந்து செய்வதும் ஆகும்.

கொள்ளிடம் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஈரம்கொல்லிகள் (சலவையாளர்கள்) மூலமும் அரங்கனின் மீது மதிப்புக் கொண்டிருந்த ஒற்றர்கள் மூலமும் படைகள் நெருங்குவதை உணர்ந்தனர் கோயிலார்கள். மாற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தில் நிகமாந்த தேசிகர், பிள்ளைலோகாசாரியார் போன்ற ஆச்சாரியர்கள் முக்கியப் பங்காற்றி வந்தனர். முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து மூலவர் அரங்கனை கல் திரையிட்டு மூடி, அதன்முன் வேறு ஒரு விக்ரஹத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியில் பாதுகாப்பாக மறைத்து வைத்தனர். மற்ற ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் மறைத்தனர். அழகிய மணவாளனுக்கு திருவாராதனம் செய்யும் பாவனையில் திரை சேர்த்தனர். பன்னிரண்டாயிரம் ஸ்ரீ வைணவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அழகிய மணவாளர் அங்கேயே இருப்பதான தோற்றத்தை உருவாக்கினர்.

பிள்ளைலோகாசார்யர் தலைமையில் ஒரு குழு அந்தரங்க சீடர்களுடன் அழகிய மணவாளனை மங்களாசாஸனம் செய்துகொண்டு அவனோடு பல்லக்கில் தெற்கு திசை நோக்கி விரைந்தனர். படையெடுத்து வந்த உலுக்கான் உத்ஸவ விக்ரஹம் அழகிய மணவாளனைக் காணாமல் கோபம் கொண்டான். தங்கள் இளவரசி சுரதாணியை (துலுக்க நாச்சியார்) இந்த வைணவக் கூட்டம்தான் விக்ரஹத்தைக் காட்டி மயக்கி ஏதோ செய்து கொன்று விட்டனர் என்று முடிவு செய்தான். திருக்கோயிலில் இருந்து பெருமாள் போனார் என அறிந்து அதனை தரைமட்டமாக்கினான். சுமார் ஒரு லட்சம் படை வீரர்களுடன் ஸ்ரீரங்கத்தில் நுழைந்தான். கண்ணில் கண்டவர்களை அழித்தொழித்தான்.

ழகிய மணவாளர் முதலில் கொடிக்குளம் என்று அழைக்கப்படும் ஆனைமலையின் வடக்கு முனையில் உள்ள குகையில் தங்கியிருந்தார். அங்குதான் பிள்ளை லோகாச்சாரியார் பரமனின் திருவடியை அடைந்தார்.  பிறகு, மீண்டும் அழகிய மணவாளரின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற அச்சத்தில், திருமாலிருஞ்சோலைக்கு இடம்பெயர்ந்த அந்தக் குழு, சில மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்ட கேரளாவின் கோழிக்கோடுக்கு மாற்றப்பட்டது. ஒரு வருடம் கழித்து அவர்கள் கர்நாடகாவில் உள்ள திருக்கணாம்பிக்கு குடிபெயர்ந்தனர். மேலும் அங்கிருந்து திருநாராயணபுரம். அங்கே கடைசி ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளனின் பாதுகாப்பில் 15 ஆண்டுகள் தங்கினார். 1356ஆம் ஆண்டு சுல்தான்களுடனான போரில் அவர் இறந்த பிறகு, அழகிய மணவாளர் திருப்பதி மலைக்கு அடியில் அடர்ந்த காட்டிற்கு மாற்றப்பட்டார்.

அதற்குள் விஜயநகரப் பேரரசு ஒருங்கிணைக்கப்பட்டு, செஞ்சியின் ஆளுநர் கோபநாரியர், திருமலையை ஆண்ட யாதவராயருடன் இணைந்து அழகிய மணவாளரை திருமலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தார். திருமலை கோயிலுக்குள் உள்ள ரங்க மண்டபத்தில் வழக்கமான ஆராதனைகள் அவருக்கு நடத்தப்பட்டன. இதற்குள் விஜயநகரப் பேரரசின் முதலாம் புக்கர் என்ற மன்னரும், வீரகம்பண்ணரும், இரண்டாம் ஹரிஹரர், கோபநாரியர் மற்றும் விருப்பண்ண உடையார் ஆகியோர் தெற்கு நோக்கி படையெடுத்தனர். அப்போது செஞ்சியில் இருந்த அழகிய மணவாளர் பாதுகாப்பு கருதி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொள்ளிடம் வடகரையில் உள்ள அழகிய மணவாளன் கிராமத்தில் வைக்கப்பட்டார். மதுரை சுல்தான்களுக்கும் வீரகம்பண்ணருக்கும் கடும் சண்டை நடந்தது. இறுதியாக, சுல்தான் கொல்லப்பட்டார். முழு தெற்கு பகுதியும் சுல்தான்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு வைகாசி மாதம் பரிதாபி ஆண்டு 17ஆம் தேதி (ஜூன் 6, 1371) அழகிய மணவாளர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார்.

இருப்பினும் பெருமாள் வனவாசம் சென்று 48 வருடங்கள் ஆன காரணத்தால் அவருடன் சென்ற குழுவில் அனேகர் மறைந்திருந்தனர். இதனால் அழகிய மணவாளரை அடையாளம் காண சிறிது சிரமம் இருந்தது. அப்போது உத்ஸவ மூர்த்தியின் திருமஞ்சன நீரை ருசித்த, கண் பார்வை மங்கிய ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த முதிய சலவைத் தொழிலாளி, இது 'நம்பெருமாள்' என்று கூறி கதறினார். அன்று முதல் அழகிய மணவாளர் நம்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கோயிலில் உள்ள ராஜமகேந்திரன் திருச்சுற்றின் கிழக்குச் சுவரில் உள்ள ஓர் கல்வெட்டு, கோபநாரியர் அழகிய மணவாளரை திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பக் கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறது. இதை பிள்ளைலோகம் ஜீயர் தனது யதீந்திர பிரவண பிரபவம் என்ற மாபெரும் படைப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஸ்ரீராமர் 14 வருடங்கள் மட்டுமே வனவாசம் எடுத்தார். ஆனால், அழகிய மணவாளரோ 48 ஆண்டுகள் வனவாசம் செய்தார். சமயச் சொற்பொழிவுகளை ஆற்றும் பலர், ராமர் வனவாசத்தைப் பற்றி பேசுவதைப்போல, அழகிய மணவாளரின் வனவாசத்தைப் பற்றியும் பேச வேண்டும். ஏனெனில், இச்சம்பவம் சனாதன தர்மத்தை காக்க அரசர்கள் செய்த வீர தீர செயல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை; ஶ்ரீரங்கத்து சாமானிய மக்களின் தெய்வ பக்தியையும், தங்கள் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் கடவுளைக் காக்க அவர்கள் எடுத்த முயற்சிகளையும் பறைசாற்றுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com