காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டுப் போ!

காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டுப் போ!
Published on

– ஆர்.வி.ராமானுஜம்

கா பெரியவரை தரிசனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார்சத்திரம் அருகில் வந்தபோது, கூட வந்த தாத்தாவுக்கு இயற்கை உபாதையின் காரணமாக சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தினர். அப்பாவும் மகனும் சாலையைக் கடந்து எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஐந்து விநாடிகளுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது அந்த சாலையில் போய்க்கொண்டிருந்தன.

காருக்கு வெளியே தனது அம்மாவுடன் நின்று கொண்டிருந்த அந்த ஐந்து வயது குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவைப் பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதிதாகப் பார்ப்பது போல், "தாத்தா!" என்று கூறிக் கொண்டு, திடீரென்று துள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க ஆரம்பித்தாள்! வேகமாக வரும் வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப்போன சமயம், வேகமாக வந்த லாரி ஒன்று அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது!

ண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது! அலறியபடி குழந்தையைத் தூக்கிச் சென்று காஞ்சிபுரத்தில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே, "குழந்தையை உடனே சென்னைக்குக் கொண்டு போய்டுங்க! ரொம்பவும் சீரியஸ் கேஸ்!" என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய உறவினர் மருத்துவமனைக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு மகா பெரியவாளிடம் ஓடி, "பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில குழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் குழந்தையைக் காப்பாத்தணும்னு" அழுதார்.

"என்னைப் பார்க்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?" என்று கேட்டுவிட்டு, சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார் மகா பெரியவர். பிறகு அருகில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவர் கையில் பிரசாதமாகப் போட்டுவிட்டு, "சென்னைக்கு குழந்தையைப் பார்க்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டுப் போ!" என்று உத்தரவிட்டார்.

ந்த உறவினரும் உடனே காமாக்ஷியை தரிசனம் பண்ண கோயிலுக்குப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால் அவரால் ஒரே ஒரு கணம் மட்டுமே அம்பாளை தரிசனம் பண்ண முடிந்தது. நெய் தீபச் சுடரில் சர்வாலங்கார பூஷிதையாக, பச்சைப் பட்டுப் புடைவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு கணமே தரிசனம் பண்ணினாலும், மனதில் அந்தக் கோலத்தை இருத்தியபடி சென்னைக்குப் பேருந்து ஏறினார்.

நேராக மருத்துவமனைக்குச் சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை வைத்து விட்டார். அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றியும் கூறினார்.

"குழந்தை கோமாவுக்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர் சொல்றார்…" அம்மா கதறினாள். சில மணி நேரங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலில் அந்தக் குடும்பமே அமர்ந்திருந்தது.

தோ…! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! "கோமா… மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் மாற்றி, "அம்மா!" என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின் அனுக்ரஹம்! அந்தக் குடும்பத்தின் அழுகையெல்லாம் நிமிஷ நேரத்தில் காணாமல் போனது. ஓரிரண்டு நாட்களில் நன்றாகத் தேறிய குழந்தையை தனி ரூமுக்கு மாற்றினார்கள். மகாபெரியவர் அனுக்ரஹித்த ஆப்பிளைக் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.

"அம்மா…" தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.

"என்னம்மா?"

"எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?"

"பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும் இல்லியேடா!"

குழந்தை சிணுங்கினாள். "அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்."

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி, அவளை சமாதானப்படுத்த வேண்டி, "எந்தப் பாப்பா? எப்படி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டு வரேன்" என்றாள் அம்மா.

"பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!"

ற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த அந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!

'போறதுக்கு முன்னாடி காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டுப் போ!' என்று பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு கணமே தரிசனம் தந்தாலும், இருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காட்சி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!

மகா பெரியவா சொன்னதுக்கு எத்தனை மகத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

அந்தக் குழந்தையின் உறவினர், மற்றவர்களுக்கு அவர் நடந்ததைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி தரையில் விழுந்து நமஸ்கரித்தனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com