
தொகுப்பு : எஸ்.மாரிமுத்து
ஏகாந்த வாசம்!
உடைமைகளும் போகப் பொருட்களும் கவலைக்கும் துன்பத்திற்கும் மூலகாரணங்களாக அமைந்திருக்கின்றன. எந்தச் சிந்தனையுமின்றி ஏகாந்த வாசம் செய்து, உள்ளத்தில் சமநிலையை ஏற்படுத்தி வாழ்வது எவ்வளவோ மேலானது ஆகும்.
ஸ்ரீ ராமபிரான்
பற்றற்று இரு!
மீன்கொத்தி பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்றபோது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டியிருக்கும். வெளியில் வந்து சிறகுகளை உதறியதும் அந்த நீர் அகன்று விடும். அதுபோல, உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஒருவன் தனது இதயத்துக்குள் இறைவனைக் கண்டால் வெளியுலகத்திலும் அவனைக் காண்பான். தனக்குள்ளே இறைவனைக் காணாதவனால் கோயிலிலோ பிற இடங்களிலோ இறைவனைக் காண இயலாது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
அனந்தசயனனை அறியும் வழி!
பசுக்கள் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றைப் பராமரித்து அவற்றிடம் உள்ள பாலைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தைப் பால் போல சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அன்பு, பக்தி எனும் தீயில் பதமாய்க் காய்ச்ச வேண்டும்.
சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்கி, இதயம் எனும் குடத்தில் அந்தத் தயிரை ஊற்றி, அது உறைந்ததும் பக்தி என்ற மத்தைக் கொண்டு கடைந்து பூத்து வரும் வெண்ணையைப் போன்ற அனந்தசயனனான பரம புருஷனைக் காண வேண்டும். நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளைக் காண வேண்டுமானால் தக்க முயற்சிகள் எடுத்தால்தான் முடியும்.
காஞ்சி மகாபெரியவர்
பிரார்த்தனை
பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. தன் உணர்வுடன் பிரார்த்தனை செய்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும். உணர்வற்ற நிலையில் செய்தால் ஒருவேளை பத்தில் ஒன்று நிறைவேறலாம். அத்தகைய பிரார்த்தனை சுயநலமானது. அதனை விட்டுவிட வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்
இறைவன் அனுக்கிரஹம் பெற…
மனிதப் பிறவி கிடைப்பதற்கு நீ பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இறைவனிடம் ஆழ்ந்த பக்திகொள். பல வேலைகளுக்கு இடையிலும் சிறிது நேரம் பிரார்த்தனைக்காக ஒதுக்க வேண்டும். அப்போது இறைவனின் அனுக்கிரஹம் உன் மீது பதியும்.
ஸ்ரீ சாரதா தேவி