சகல நலம் தரும் சாதுர்மாஸ்ய விரதம்!

சகல நலம் தரும் சாதுர்மாஸ்ய விரதம்!
Published on

– ரேவதி பாலு

வேதங்களை வகுத்துக் கொடுத்த வியாச மகரிஷியின் ஜயந்தி விழா ஒவ்வொரு வருடமும் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை, 'குரு பூர்ணிமா' என்று சிறப்பித்து, குருமார்களை துதித்து வணங்கி பூஜிக்கும் நாளாக வழிபட்டு வருகிறோம். ஆத்ம ஞானமானது ஒருவர் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து விட முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சூட்சுமமாகவும் அறிவு நிலைக்குக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.  மனிதர்களின் அக இருளை (அஞ்ஞானத்தை) நீக்கி, ஆத்ம ஞானத்தை (மெய்ஞானத்தை) ஒளிர வைப்பவர்தாம் குரு.  இவ்வுலக வாழ்க்கையில் இன்ப, துன்பங்களில் உழன்று சம்சார சாகரத்தை நீந்திக் கடக்க முடியாமல் அவதிப்படும் மாந்தர்களை கருணையோடு கரையேற்றவே மகான்கள் அவதரித்து குருவாக இருந்து அனைவருக்கும் வழிகாட்டுகிறார்கள்.

'ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
வேத வியாசர் அவதரித்த நாள் இதுவென்பதால் ஆஷாட மாத பௌர்ணமி, 'வியாச பௌர்ணமி' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சன்யாசிகள் 'சாதுர்மாஸ்ய விரதம்' கடைபிடிக்கத் தொடங்கும் காலகட்டமும் இதுவே.

'சாதுர்மாஸ்யம்' என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள். இந்த நான்கு மாத காலத்தில் பெரும்பாலும் மழை பெய்யும். எனவே, புழு, பூச்சி போன்ற பல்வேறு சிறு ஜீவராசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து செல்லும் காலகட்டம் இது.  பொதுவாக, சன்யாசிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்காது, பல்வேறு இடங்களில் சஞ்சாரம் செய்வது வழக்கம். ஆனால், சாதுக்கள், சன்யாசிகள் ஆஷாட பௌர்ணமி அன்று வியாச பூஜை செய்து விட்டு, பிறகு வேறு எங்கும் சஞ்சரிக்காமல் ஒரே இடத்தில் நான்கு மாதங்கள் முழுமையாகத் தங்கி இருப்பார்கள். முக்கியமாக, அந்தக் காலங்களில் இடம் பெயர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு தங்களால் தொந்திரவு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. இந்த நான்கு மாதங்களுக்கு உணவு எடுத்துக் கொள்வதிலும் சில கட்டுப்பாடுகளோடு ஒரு விரத முறையையும் அவர்கள் அனுஷ்டிப்பார்கள். இதையே, 'சாதுர்மாஸ்ய விரதம்' என்று கூறுவர்.

துறவறம் பூணுவது என்பது இந்த உலக இச்சைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்வது என்பதால், துறவறம் பூண்டவர்களுக்கு அன்று முதல் மறுபிறவி என்கிறார்கள்.
அது மட்டுமல்ல; ஒரு சாதுவோ, சன்யாசியோ எத்தனை சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்திருக்கிறாரோ அதை வைத்துதான் அவரது வயது கணக்கிடப்படுகிறதாம்.  அதனாலேயே வயதில் பெரியவராக ஒரு சன்யாசி இருப்பினும், தன்னை விட அதிக எண்ணிக்கையில் சாதுர்மாஸ்ய விரதங்கள் அனுஷ்டித்த சன்யாசியைப் பார்த்தால் அவரை நமஸ்கரிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நான்கு மாதங்களும் அவர்கள் முழுமையாக பூஜைகள், மந்திர ஜபங்கள் செய்வதில் ஈடுபடுவார்கள்.  இப்படி சாதுர்மாஸ்ய காலத்தில் செய்யும் மந்திர ஜபங்கள் அவர்களுக்கு மட்டுமன்றி; உலகம் முழுமைக்கும் பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரக்கூடியவை. இந்தக் காலத்தில் தேவர்களும் பகவான் விஷ்ணுவும் யோக நித்திரையில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் செய்யும் அனைத்து இறை வழிபாடுகளும் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பது ஐதீகம்.

ன்யாசிகள் மட்டும் இல்லை, இல்லறத்தில் இருப்பவர்களும் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அவரவர் வசதிக்கேற்ப நேரத்தை ஒதுக்கி ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்துக் கொண்டு இறைவனின் நாமத்தை உச்சரித்து வந்தால் சகல துன்பங்களும், எப்படிப்பட்ட கஷ்டங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்தப் புண்ணிய பாரத பூமியில் எத்தனையோ மகான்கள் அவதார புருஷர்களாகப் பிறந்திருந்தபோதிலும், மனிதர்களோடு கலந்து பழகி, அவர்களோடு ஒருவராக எளிமையாக வாழ்ந்து, அதேசமயம் சாமான்யர்களும் ஆன்மிகத்தில் முன்னேற்றமடைய ஒரு குருவாக இருந்து வழி காட்டியிருக்கிறார்கள்.

குருவுக்கு உகந்த, 'குரு பூர்ணிமா தினம்' இந்த வருடம் 13.07.22 அன்று வருகிறது.   அன்று நாம் வணங்கும் மகானை நினைத்து அவர் படத்துக்கு ஒரு மலராவது சாற்றி வணங்குவது நம்மை என்றென்றும் நல்ல நிலையில் வாழவைக்கும் என்பது உறுதி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com