தலைமுறையைக் காக்கும் கன்னிகாதானம்!

தலைமுறையைக் காக்கும் கன்னிகாதானம்!
Published on

– எஸ்.தண்டபாணி

ரு மனிதன் தனது வாழ்வில் பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும் என்கிறது இந்து தர்ம சாஸ்திரம். உதாரணமாக, தந்தையாகப்போகும் ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த உடனே நெல்லை தானமாகத் தர வேண்டும். இதைப்போல், ஆண் பிள்ளையாக இருந்தால் அவனுக்கு உபநயனம் செய்யும்பொழுது, பெண்ணாக இருந்தால் அவள் பருவம் அடைந்தவுடன், பிள்ளைகளுக்கு விவாகம் செய்து வைக்கும்பொழுது, சஷ்டியப்த பூர்த்தி செய்யும் பொழுது… இப்படி ஒவ்வொரு சடங்குகளின்போதும் பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும். 'மரணபரியந்தம்' என்பதைப் போல தானம் எல்லா காலகட்டத்திலேயும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

தானமாக அரிசி, பருப்பில் ஆரம்பித்து காசு, வெள்ளி, தங்கம், பசு, நிலம் என்று எதை வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், இவையெல்லாம் சிறந்த தானங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லவில்லை. தானங்களில் சிறந்ததாக, பசியைப் போக்குகிற, ஏழைகளின் முகத்தில் மலர்ச்சியினைக் கொண்டு வரும் அன்ன தானத்தையே பலரும் சிறந்த தானம் என்று குறிப்பிடுவர்.

ஆனால், அதையும் மிஞ்சிய ஒரு தானம் உண்டு என்கிறது இந்து தர்ம சாஸ்திரம். தானங்களிலேயே மிகப் பெரிதாக, மகா புண்ணியமாக, உயர்ந்த தானமாகக் கருதப்படுவது, 'கன்யாதானம்' என்கிற கன்னிகாதானம்.

திருமணச் சடங்குகளில் பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் செய்யக்கூடிய முக்கிய தானம் இந்த கன்னிகாதனம். ஒரு தந்தை தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை, பல ஆண்டுகள் சீராட்டி கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, படிக்க வைத்து, பருவம் அடைந்தவுடன் அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து, அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த நல்லதொரு ஆண் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது, தனது பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்கும், தந்தை செய்யும் தானமே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம். அக்னி சாட்சியாக அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைக்கின்ற ஒரு உன்னதமான சடங்குதான் இந்த கன்னிகாதானம்.

இந்த சம்பிரதாயத்தைத்தான் தாரை வார்த்தல் என்று மரபு வழியாகக் கூறுகிறார்கள். வாங்கிக் கொள்பவர் கை கீழேயும், கொடுப்பவர் கை மேலேயும் வைத்து நீரை ஊற்றி உரிய காரணத்தைச் சொல்லி தானமாக கைமாற்றி விடுவதற்குத்தான் தாரை வார்த்தல் என்று பொருள். அதைப் போலத்தான் கன்னிகாதானத்திலும், மாப்பிள்ளையின் கை கீழேயும் மணப்பெண்ணின் கை மேலேயும் வைத்து பெண்ணின் தந்தை நீரை ஊற்றி அதற்கு உரிய மந்திரத்தை உச்சாடனம் செய்து தாரை வார்ப்பது கன்னிகாதானம் என்று வழங்கப்படுகிறது.

இன்றைய சூழலில் திருமணங்களில் எத்தனையோ நவீன முறைகளும் புதுமைகளும் வந்து விட்டன. ஆனால், சில சடங்குகள் எத்தகைய நவீனமான திருமணத்திலும் மாற்ற முடியாததாக உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கன்னிகாதானம். இந்து சமய திருமணங்களில், பெண் வீட்டார்கள் இந்தத் தாரை வார்த்தலை கன்னிகாதானம் அல்லது கன்னியாதானம் என்றும், மணமகன் தரப்பில் அவர்கள் பெற்றுக் கொள்வதனால், 'பாணிகிரகணம்' என்றும் குறிப்பிடுவர்.

ந்த உலகில் பலவிதமான தானங்கள் செய்யப்பட்டாலும், அவை அனைத்திலும் உயர்ந்தது கன்னிகாதானமே என்பதற்கு, இந்தச் சடங்கின்போது சொல்லப்படுகின்ற மந்திரமும் சங்கல்பமுமே சான்று. கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து மொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரை சேர்க்கும் விதமாகவும் மேன்மையாக விளங்க வேண்டும் என்பதற்காகவும் கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற
மகா தானத்தைச் செய்கிறேன் என்பதுதான் இந்த மந்திரத்தின் பொருள்.

மேலும், உங்களின் வம்சத்துக்காக, வம்ச விருத்திக்காக எங்கள் வீட்டு குலவிளக்கை மணமகனாகிய உனக்கு தானமாக அளிக்கிறேன். இனி இவள் உங்கள் குலம் மற்றும் உங்கள் கோத்திரம் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப் பெரியது என்று சாஸ்திரம் போதிக்கின்றது.

ஒரு ஆண் பிள்ளையை மட்டும் பெற்றவன், அவன் வாழ்நாள் முழுவதும் செய்கின்ற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண் பிள்ளையைப் பெற்ற தந்தை, அவளை கன்னிகாதானம் செய்து கொடுப்பதனால், அவனது வம்சத்தின் 21 தலைமுறைகளும் கரையேறி நற்கதி அடைகின்றது என்றால் பெண் குழந்தையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலியாகவும் புண்ணியம் செய்தவனாகவும் இருக்க வேண்டும். எனவே, பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் கன்னிகாதானம் செய்வதன் மூலம் பெருமை அடைகிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com