கேள்வி நேரம்

கேள்வி நேரம்
Published on

– ஞானகுரு

பெண்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

– ப.சிவகாமி, வேடசந்தூர்

திருமணமான பெண் மகாலட்சுமிக்குச் சமமானவள் என்று தமிழ் கலாசாரத்தைப் பின்பற்றுவோர் சொல்லி வருகின்றனர். எதிரில் வருகின்ற பெண் இன்னொரு ஆண் மகனுக்குச் சொந்தமானவள். அதனால் நம் மனதில் தீய எண்ணங்களோடு பார்க்கக் கூடாது என்பதை அறிவுறுத்தும் அடையாளமாக மெட்டி அணிவிக்கப்படுகிறது.

மணக்கோலத்தில் இருக்கின்ற பெண்ணை, 'நீ என்னோடு வாழும் காலத்தில் அகலிகை போல கற்பில் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்று, ஒருவகைக் காப்பு போல மெட்டியை மணப்பெண்ணின் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணிவித்து, அவளோடு வாழ்க்கையில் இணைகிறான் மணமகன், அம்மி மேல் கால் வைக்கும்போது, 'மணமகளே! கற்பில் நீ கங்கை போல் உறுதியாக இரு' என்று கணவன் கூறுவது போல மனைவியின் காலைப் பற்றி, கல்லைப் போல நீயும் திண்மையாக இரு என்ற வேத மந்திரப் பொருள் விளங்கச் சொல்லப்படுகிறது.

மேலும், அருந்ததியைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணும் கற்பு நெறி தவறாதவளாக இருக்க வேண்டும் என்ற பொருள்படும்படி மெட்டி அணிவிக்கப்பட்ட பின் அந்த மன உறுதிச் சடங்கு நிகழ்கிறது. மெட்டி, பெண்ணின் கருவறை மற்றும் மூளைக்குச் செல்லும் நரம்புகளைத் தூண்டுகிற சாதனம் எனவும் அறிதல் வேண்டும்.

'ஸ்வர்ண விளக்கு' என்பது என்ன? அதை ஏன் ஏற்ற வேண்டும்?

– ந.மணிமேகலை, கடலூர்

மண் அகலுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வைத்து, அதில் 11 காசுகளை இட்டு வழிபடுவதை ஸ்வர்ண விளக்கு என்பர். கடன் தொல்லை தீர்வதற்கும், பண வரவு திடீரென நின்று போய்விட்டாலும் மகாகணபதி முன்பு ஏற்றப்படுவது ஸ்வர்ண விளக்கு. இந்த விளக்கை ஏற்ற சதுர்த்தி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு தினங்கள் ஆகும். 'ஸ்வர்ணம்' என்பதற்கு, பூமி, மண் எனவும் பொருள் கொள்ளலாம். இந்த வழிபாட்டின்போது,

'ருண ரோக சாந்தீனாம் மித்ர கால யோஜன:
கலெள ஜென்ம பாபானாம் ருணம் சத்ரு ருபிணம்
தோரண கணேச தெய்வானாம் சக்தி மேகல வாசினம்
ஸ்வர்ண தீப ஸ்மரணானாம் சகல ருண ரோக நிவாரணம்!'

எனும் மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு.

பூஜை அறையில் பதினாறு சங்கு கோலமிட்டு, ஒரு பெரிய தட்டில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் வலம்புரி விநாயகரை ஸ்தாபனம் செய்து செந்நிற மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் கடன் பிரச்னை தீர்ந்து வாழ்வில் நிம்மதி ஏற்படும்.

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

– என்.காண்டீபன், வந்தவாசி

இன்றைய நவீன யுகத்தில் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் கோயிலுக்குச் செல்வதும் வழிபடுவதும் சாதாரணமாகி விட்டது. இதனால் வாழ்வில் பல குழப்பங்களையும், இடையூறுகளையும் சந்தித்து அல்லல் பட நேரிடுகிறது. முதலில் குல தெய்வத்தை அறிய இரண்டு வழிகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. ஒன்று, முன்னோர்களின் கோத்திரத்தை அறிந்து, அதன் மூலம் மூலாதாரப் பட்டியலில் காண்பது. இரண்டு, ஜனன ஜாதகத்தில் சந்திரன் நிலை கண்டு, ஆண் தெய்வமா? பெண் தெய்வமா? என்று தெரிந்து தாய்-தந்தையரின் கோத்திரப் பெயர் தெரிந்து அதை வைத்துக் கண்டறிவது.

'உங்கள் குலதெய்வம் தெரியவில்லை என்றால், திருப்பதி வேங்கடாஜலபதியை குல தெய்வமாக வழிபடுங்கள்' என்று பல ஜோதிடர்கள் வழிகாட்டுகிறார்கள். இது மிகவும் தவறு. உதாரணமாக, ஆத்ரேய கோத்திரமும் காசிபரும் சேரும்போது அங்கே சக்தி தேவி குலதெய்வமாக வரும் என்பதைக் கணக்கிட்டு அறியலாம். அதனால், விஷயம் அறிந்தவர்கள் மூலமாக விவரமறிந்து குல தெய்வத்தைக் கண்டறிய முயலுங்கள்.

நவ துர்கை திருநாமங்களும் அவர்களுக்கு எதைக்கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்பதையும் பற்றிக் கூறுங்கள்?

– கே.மலர்விழி, சென்னை

துர்கையை, வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா என ஒன்பது வடிவங்களாக, 'நவ துர்கா' என்ற பெயரில் வணங்குகின்றனர். 'துர்கா' என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்கை ஆகும். 'துர்க்கம்' என்றால் மலை, அரண், மலைக்கோட்டை, அகழி என பொருள்படும். எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புக முடியாதபடி தடுப்பவை இவை. அதுபோல மனிதர்களுக்கு வரும் துன்பங்களை துர்கா தேவி தடுத்து நிறுத்துகிறாள். எனவே, இவள் துர்கை எனப் பெயர் பெற்றாள். வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள்.

துர்கா எனும் சொல்லை த், உ, ர், க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களாகப் பிரிப்பர். 'த்' என்றால், அசுரர்களை அழித்தல் அல்லது தீய எண்ணங்களை அழித்தல். 'உ' என்றால், பக்தர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நீக்குதல். 'ர்' என்றால், ரோகங்களை குணமாக்குதல். 'க்' என்றால், பாவங்களை நீக்குதல். 'ஆ' என்றால், பயத்தையும், எதிரிகளையும் அழித்தல்.

இந்த ஐந்து கடமைகளையும் செய்பவள் துர்கா தேவி. அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து காப்பவள் என்பதால் துர்கா என பெயர் வந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத நோய், துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். 'ஜெய் ஸ்ரீ துர்கா' என யார் கூறினாலும், அவர்களுக்கு வெற்றி சந்தேகமில்லமல் கிடைக்கும்.

குங்குமம், பன்னீர் தெளித்த வாசனை மலர்களால் துர்கையை பூஜை செய்வது உத்தமம். சாரதா நவராத்திரி காலத்தின் ஒவ்வொரு நாளும் இந்த நவ துர்கா தேவியரை வழிபடுவது வழக்கம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com