
– எஸ்.தண்டபாணி
சைவத் திருமுறைகள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் மாணிக்கவாசகர் நமக்கு தந்தருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சிவபெருமான் இந்த உலகத்தின் நன்மைக்காக பூமிக்கு இறங்கி வந்து மாணிக்கவாசகரை ஈர்த்து ஆட்கொண்டு, மாணிக்கவாசகர் சொன்ன வரிகளை சிவபெருமானே எழுதிக் கொடுத்த ஒரு அற்புதமான வாசகம். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்பது மூதுரை. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பக்தி சுவை மிகுந்த மனதை உருக்கும் பாடல்களைக் கொண்ட நூல். திருவாசகம் படிக்கப் படிக்கத் தேனாய் நம்மை இறைவனிடத்தில் கொண்டுபோய் சேர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த நூல்.
'தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்!'
இந்த நூல் தேனுக்கு நிகரானது என்பதனால், 'திருவாசகம் எனும் தேன்' என்று போற்றப்படுகிறது. திருவாசகத்தில் பல பதிகங்கள் இருந்தாலும், அதில் முக்கியமான பதிகமும் முதன்மையான பதிகமும் சிவபுராணம் ஆகும். இந்த சிவபுராண பதிகத்தை மாணிக்கவாசகர் அந்த ஈசனுடைய நாமமாகிய, 'நமச்சிவாய வாழ்க' என்ற மந்திரத்தோடுதான் தொடங்குகிறார் என்றால் இந்த வாசகத்தினுடைய சக்தியையும் மதிப்பையும் என்னவென்று சொல்வது.
சிவபுராணம் மொத்தம் 95 வரிகளைக் கொண்டது. சிவபுராணத்தை படிக்க ஆரம்பிக்கும் முன்னும், படித்து முடித்த பிறகும், 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்ல வேண்டும் என்பது மரபு. சிவபுராண பதிகத்தில் உள்ள முதல் பாடல்.
திருச்சிற்றம்பலம்
'நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!'
சிவபுராணத்தை தொடர்ந்து படிப்பதனால் கிடைக்கும் பலன்களையும் நன்மைகளையும் அனுபவிக்கலாமே அன்றி, வார்த்தைகளால் அதை விவரிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிவபுராணம் மாயப் பிறப்பறுத்துப் பிறவிப் பிணியை போக்க வல்ல மருந்து என்று ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். மறுபிறவி மற்றும் பிறவிப்பிணி என்று நாம் அனுபவிக்கக்கூடிய பிறவிப் பலன்களை சிவபுராணத்தில் வரிசைப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்.'
இத்தனை பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் அந்தந்தப் பிறவிப் பயனை அனுபவிக்காமல், பிறவிச் சங்கிலியிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைய வேண்டுமென்றால் சிவபுராணத்தை பக்தியோடு படிக்க வேண்டும். சிவபுராணத்தைச் சொல்லச் சொல்ல நம்மை நற்கதி அடையச் செய்வதற்கு உண்டான தன்மையை நம்முள் புகுத்தி விடும். அதற்கு நாம் மனதை ஒரு நிலைப்படுத்தி சிந்தையில் சிவத்தை ஏற்றி, பக்தி சிரத்தையோடு சிவபுராணத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
அதையும் மாணிக்கவாசகர், 'சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம்' என்று பாடினார். சிவனை சரணாகதி அடைய வேண்டுமென்றாலும், அவனருளும், கருணையும், அதற்கு அனுகூலமான காலமும் வர வேண்டும். இவையெல்லாம் நமக்குக் கைகூட அவனை எப்பொழுதும் மனதில் தியானித்து சிந்தையில் சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சிவபெருமான் கருணையே வடிவானவர் என்பதையும் மாணிக்கவாசகர் இந்த பதிகத்திலேயே சொல்கிறார். 'நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' நாயை விட கேவலமாய் நான் இருந்தேன், இருக்கின்றேன் இனியும் இருப்பேன். என்னையும் நீ ஒரு பொருட்டாக, தாயை விட உயரிய கருணையை என்மேல் காட்டினாய் அல்லவா? உன் கருணையே கருணை என்று பாடினாரென்றால் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது சிவபுராணப் பதிகம். அவரே இறுதியில், 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்று பாடினார்.
சிவபுராணத்தை பக்தி சிரத்தையோடு சிந்தையில் சிவனை நினைத்து உள்ளன்போடு மனம் உருகி சொல்லுகின்ற வார்த்தைக்கு பொருள் உணர்ந்து பக்தியோடு படித்தால் நம் கண்களில் கண்ணீர் வரக்கூடிய நிலை வரும் என்பது சத்தியமான வாக்கு.
எனவே, சிவபுராணத்தை பக்தியோடு படித்து எல்லாம்வல்ல அந்த சிவபெருமானின் கருணையினாலும் அருளினாலும் எல்லா வளங்களையும் நலன்களையும் நாம் பெற்று மகிழ்வோம்.