வரம் தரும் ஸ்ரீ வரமஹாலெக்ஷ்மி பூஜை!

வரம் தரும் ஸ்ரீ வரமஹாலெக்ஷ்மி பூஜை!
Published on

– மும்பை ஆர்.மீனலதா

டி மாதம் வரும் அடுத்தடுத்த பண்டிகைகள், விழாக்களுடன் பூஜைகளும், விரதங்களும் கூடவே அனுஷ்டிக்கப்படுகின்றன. அத்தகைய பூஜைகளில்,
ஸ்ரீ வரலெக்ஷ்மி விரத பூஜை விசேஷமானது. இந்த பூஜைக்கு வித்திட்ட விண்ணுலகக் கதை ஒன்றினைக் காண்போம். சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தில் சுவாரசியமாக தாயம் ஆடிக்கொண்டிருக்கையில், அவர்களுக்குள்ளே சிறு பிரச்னை ஏற்பட்டது. இதைத் தீர்க்க, கணங்களிலே மிகவும் நேர்மையான சித்ரநேமியை கேட்க, தீர்ப்பு சிவபெருமான் பக்கம் சென்றது. கோபமுற்ற பார்வதி தேவி, சித்ரநேமிக்கு தொழுநோய் தாக்குமாறு சாபமிட்டார். சிவபெருமான் பதறிப்போக, பார்வதி தேவி கருணை கூர்ந்து, "இன்னும் சில நாட்களில், குளக்கரை ஒன்றின் அருகே தேவ கன்னிகைகள் வரலெக்ஷ்மி பூஜை செய்வார்கள். அதனைத் தரிசித்த பின் உன்னுடைய நோய் நீங்கி, சாபத்திலிருந்து விடுபடுவாய்" என்றார். அவ்வாறே சித்ரநேமியும் செய்ய, அவளது சாபம் நீங்கியது.

இனி, மண்ணுலகக் கதை ஒன்றினையும் காண்போம். செளராஷ்டிர தேசத்திலுள்ள குண்டினபுரமெனும் நகரில், சாருமதி என்ற பெண்மணி இந்த வரலெக்ஷ்மி விரதத்தை சிராவண மாதம், சுக்லபக்ஷ பூர்ணிமாவுடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று கடைபிடித்து சகல செளபாக்கியங்களையும் பெற, பூவுலகிலும் இந்த பூஜை பிரபலமாகப் பரவியது.

இந்த நோன்பு – பூஜை, வழிவழியாக சில குடும்பங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ வரலெக்ஷ்மி நோன்பு பூஜை செய்யும் வீட்டில், அந்த வீட்டு மூத்தப் பெண்மணி வைத்த அம்மன் கலசமே முக்கியமானதாகக் கருதப்பட்டு பிரதானமாக பூஜையில் வைக்கப்படும். அப்பெண்மணியுடன் சேர்ந்து மேலும் சிலர்
ஸ்ரீ வரலெக்ஷ்மி நோன்பு பூஜை மேற்கொள்வதாக இருந்தால், அவர்களின் அம்மன் கலசங்கள் அரிசி பரப்பிய தட்டில் வைக்கப்பட்டு, பிரதான கலசத்தருகே வைத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மந்திரங்கள் கூறி பூஜை செய்து, நோன்புச் சரடு கட்டிக்கொண்டு மனதார வழிபடுவது வழக்கம். அக்குடும்பத்திற்கு வரும் மருமகளும் திருமணமான ஆண்டில் வரும் ஸ்ரீ வரலெக்ஷ்மி பூஜையை ஆரம்பித்து தொடர்ந்து செய்வது வழக்கம். இதன் மூலம் தேவியின் அருள் மற்றும் ஆயுள், ஆரோக்கியம், தனம் போன்றவை குடும்பத்தில் பெருகும். (தவிர்க்க முடியாத காரணங்களினால் விரதம் இன்று தடைப்பட்டால் அடுத்து வரும் வெள்ளியன்று பூஜையைச் செய்யலாம். விட்டுவிடக் கூடாது.)

ரலெக்ஷ்மி என்றால் வரங்களை நல்கும் லெக்ஷ்மி என்பது மட்டுமல்ல; வருகின்ற லெக்ஷ்மியை அன்புடன் வீட்டினுள் அழைத்து, மரியாதை செய்வது என்றும் பொருள்படும். சிலர் இதை, 'ஸ்ரீ வரமஹாலெக்ஷ்மி பூஜை'யெனவும் கூறுவதுண்டு.
ஸ்ரீ வரலெக்ஷ்மி பூஜை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் (வியாழக்கிழமை): பூஜைக்கு முதல் நாள் மாலை பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். கோலமிட்ட இடத்தில் மண்டபம் அமைத்து வாழைக் கன்றுகள், மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். தாமிரச் செம்பினை நன்கு சுத்தம் செய்து, அதனுள் அரிசி, மஞ்சள் கிழங்கு, காசு, ஒரு எலுமிச்சம் பழம் போட்டு மாவிலைக் கொத்தை வைக்க வேண்டும். இது கலசம் எனப்படும். இதன் நான்கு புறமும் சந்தனம், குங்குமமிட்டு, புதுத்துணி அல்லது தைத்த புதுப்பாவடையை அதன் கழுத்துப் பகுதி வரை கட்ட வேண்டும். மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றிற்கும் சந்தனம், குங்குமமிட்டு அதை மாவிலைக் கொத்தின் நடுவே வைத்து, காதோலை, மூக்குத்தி, கருகமணி ஆகிய நகைகளணிந்த வெள்ளியால் ஆன ஸ்ரீ வரலெக்ஷ்மி அம்மன் முகத்தை வைத்து மெல்லிய மஞ்சள் சரடினால் கட்ட வேண்டும். தாழம்பூ பின்னலிட்டு பூச்சூட வேண்டும். ஒரு தட்டில் நுனி வாழை இலை போட்டு, அதில் அரிசியைப் பரப்பி, அதன் நடுவே அம்மன் கலசத்தை வைக்க வேண்டும். வெண்பொங்கல் நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். (வெள்ளியினால் ஆகிய முகம் இல்லையெனில், அம்மன் படத்தையும் வைக்கலாம். மஞ்சள் பூசிய தேங்காயில் வரையலாம்.)

இரண்டாம் நாள் பூஜை (வெள்ளிக்கிழமை): அதிகாலை நீராடி, தூய ஆடை அணிந்து, வெற்றிலைப் பாக்கு, பழங்கள், தேங்காய், பூக்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் ஒன்பது முடிச்சுகளிட்ட நோன்புச் சரடுகள் ஆகியவற்றை மண்டபம் அருகே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் விட்டு குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். கோலத்தின் மீது வைத்திருக்கும் அம்மனுக்கு பழம் நிவேதனம் செய்து ஆர்த்தி எடுத்த பின், மெதுவாக அந்த இடத்திலிருந்து மண்டபத்திற்கு, 'லெக்ஷ்மி ராவே மா இண்டிகி' எனப் பாடியவாறே அழைத்து வந்து அமரச் செய்ய வேண்டும். அதன்பின், கலச பூஜை, கணபதி பூஜை ஆகியவற்றைச் செய்த பிறகு லெக்ஷ்மி சஹஸ்ர நாமம், அஷ்டோத்திரம் முதலியவற்றை குங்குமம், புஷ்பங்கள், அட்சதை ஆகியவற்றால் அர்ச்சித்தவாறே உச்சரிக்க வேண்டும். நோன்புச் சரடிற்கு புஷ்பங்கள் 'தோரக் ரந்தி' பூஜை செய்தபின், அதைக் கைகளில் எடுத்துக்கொண்டு,

'நவ தந்து ஸமாயுக்தம் கந்தபுஷ்ப ஸம்விதம்
பதநீயாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம்
ஹரிவல்லபே'

என்று கூறி, சரட்டை வலது கை மணிக்கட்டுப் பகுதியில் கட்டிக்கொண்டு நமஸ்கரிக்க வேண்டும்.

நிவேதனப் பொருட்களாக வைத்திருக்கும் கொழுக்கட்டை, பஞ்சாமிர்தம், அன்னம், பருப்பு, நெய், பாயசம், வடை, அப்பம், பால், தயிர், சுண்டல் இவற்றுடன் வெற்றிலை பாக்கு, பழங்கள் மற்றும் தேங்காயை (உடைத்து சரிபாதியாக) வைத்து நைவேத்தியம் செய்து முடித்து தூப தீபம், தீபாரதனை காட்டிய பின்பு பாத்யம், அர்க்யம் போன்ற உபசாரங்களைச் செய்ய வேண்டும். பூஜைக்கு வந்திருக்கும் பெண்களுக்கு தாம்பூலம், நிவேதனப் பிரசாதம், நோன்புக்கயிறு கொடுத்து உபசரிப்பது முக்கியம். மாலையில் மீண்டும் விளக்கேற்றி லெக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி, பழங்களை நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

மூன்றாம் நாள் (சனிக்கிழமை): அம்மனுக்கு விடை கொடுக்கும் நாள். இன்று காலையில் பாயசம் நிவேதனம் செய்து அம்மனை வழிபட வேண்டும். அன்று மாலை அஷ்டோத்திரம் கூறி, பழங்கள் நிவேதனம் செய்து ஆர்த்தி எடுத்த பிறகு, இரவில் கலசத்தை அம்மனுடன் சேர்த்தெடுத்து அரிசிப்பானை அல்லது அரிசி டப்பாவினுள் மெதுவாக இறக்கி வைக்க வேண்டும்.

நான்காம் நாள் (ஞாயிற்றுக்கிழமை): காலை  நீராடி, அரிசி டப்பாவில் இருந்து கலச அம்மனை மெதுவாக வெளியே எடுக்க வேண்டும். கலச அரிசியை அரிசி டப்பாவில் இருக்கும் அரிசியுடன் கலந்துவிட, அன்னபூரணியின் அருள் என்றும் வீட்டில் நிலைக்கும் என்பது ஐதீகம். கலசத் தேங்காயை அடுத்து வரும் வெள்ளியன்று உடைத்து பாயசம் செய்யப் பயன்படுத்தலாம். வரலெக்ஷ்மி விரத பூஜை சமயம்,
'ஸ்ரீ வரலெக்ஷ்மி நமஸ்துப்யம்; பூஜா சேதா முராரே; பாக்யத லெக்ஷ்மி பாரம்மா' போன்ற பாடல்களைப் பாடுவது வழக்கம். ஆரத்தி எடுக்கையில், 'கெளரி கல்யாண வைபோகமே! லெக்ஷ்மி கல்யாண வைபோகமே' எனப் பாடுவார்கள். இந்த பூஜையினை அனுஷ்டிப்பதனால் மங்கல வாழ்வு அமையும், மாங்கல்ய பலம் நிலைக்கும், உயர்ந்த ஞானம் கிடைக்கும், விரும்பிய நலன்கள் உண்டாகும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கும். பல ரூபங்களில் அருள்பாலிக்கும் லெக்ஷ்மி தேவியை வணங்கி பூஜிப்பதற்கு சமம் இந்த வரலெக்ஷ்மி பூஜை. நலமும் வளமும் தரும்
ஸ்ரீ வரலெக்ஷ்மியை அன்புடன் வீட்டினுள் அழையுங்கள்; வணங்கி வழிபடுங்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com