அபிஷேக தரிசனமும்; ஆச்சரியத் தகவல்களும்!

அபிஷேக தரிசனமும்; ஆச்சரியத் தகவல்களும்!

– ஆர்.ஜெயலெக்ஷ்மி

* திருந்துதேவன்குடி, சிவபெருமானை நண்டு பூஜித்தத் திருத்தலம். ஒரே நிறப் பசுவின் ஐந்து காலப் பாலை முகந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் இறைவனின் திருமேனியில் பொன்னிற நண்டு ஊர்ந்து செல்வது போன்ற ஓர் அதிசயத் திருக்காட்சி தோன்றுவது வியப்பு.

* சீர்காழிக்கு அருகில் உள்ள திருமணிக்கூடம் வைணவத் தலத்தில் வீற்றிருக்கின்ற நாலாயிரத்தொரு விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் அந்த நீரின் பெரும்பகுதி விநாயகரின் சிகைக்குள் சென்று விடுவது விநோதம்.

* திருநீலக்குடியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ நீலகண்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் அதில் பெரும்பகுதி சிவலிங்கத்துக்குள் உறிஞ்சப்படுவது ஆச்சரியம்.

* கும்பகோணம் மாவட்டம், நாகேசுவரம் ராகு பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்தால், அந்தப் பால் நீல நிறமாக மாறுகிறது. அந்தப் பால் கீழே பீடத்தில் இறங்கிய பிறகு மீண்டும் இயல்பான வெள்ளை நிறத்தைப் பெறுவது அதிசயம்.

* சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உத்ஸவர் திருமேனிக்கு எவ்வளவு முயன்று அபிஷேகம் செய்தாலும் திருமேனி எப்போதும் கருப்பாகவே இருப்பது ஆச்சரியம்.

* வேலூர் மாவட்டம், ரத்னகிரி மலை மீது அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறி விடுவது விநோதம்.

* ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருள் தயிர். இங்கு தயிர் எவ்வளவு நேரமானாலும் புளிக்காமல் இருப்பது ஆச்சரியம்.

* திருச்செந்தூர் கொடி மரத்தின் எதிர்ப்புறச்சுவரில் ஒரு துளை இருக்கிறது. இதன் வழியே பார்த்தால் செந்திலாண்டவனின் திருவடிகளில் சரணடையக் குதித்து ஓடிவரும் கடல் அலைகளைக் காணலாம். அதே துளையில் காதை வைத்து உற்றுக்கேட்டால், 'ஓம்' என்ற ஒலி இடையறாமல் ஒலிப்பது அதிசயம்.

* பிருங்கி முனிவர் வண்டு உருவெடுத்து அர்த்தநாரீஸ்வரரை துளைத்துச் சென்று சிவனை மட்டும் வலம் வந்து வழிபட்ட திருத்தலம் திருவெண்டுறை. இக்கோயில் கருவறையில் வண்டின் மென்மையான ரீங்கார ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பதைக் உணரலாம்.

* திருவரங்கம், திருவையாறு திருக்கோயில்களில் முறையே, 'ரங்கா' என்றும் 'ஐயாறா' எனவும் அழைத்தால், அந்தச் சத்தம் திரும்பவும் எதிரொலிக்கும் அதிசயத்தைக் கேட்டு அதிசயிக்கலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com