
– கோ.காந்திமதி
நாம் ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள் ரிஷிகள். அவர்கள் தமது தபோ வலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை வெற்றி கொள்ளலாம். விசுவாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.
விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி, 'ரிஷி பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவது, வாழ்வில் பல நன்மைகளைப் பெருக்கும். ரிஷிகள் பலர் இருந்தாலும், கஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி ஆகிய சப்த ரிஷிகளே சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் காசியில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி மண்டலமாகக் கொலுவிருப்பதாக ஐதீகம். அவர்கள் தினமும் காசி விஸ்வநாதரை வந்து பூஜிப்பதாக ஐதீகம். இதனைக் குறிக்கும் விதமாக, காசி விஸ்வநாதரின் கருவறையில் இரவில் ஏழு பண்டாக்கள் பூஜை நடத்துவர். இதை, 'சப்த ரிஷி பூஜை' என்பர்.
ரிஷி பஞ்சமி விரதம் பெண்களால் அனுஷ்டிக்கப்படுவதாகும். இந்த விரதத்தின் மூலம் வேண்டும் வரங்கள் அனைத்தையும் பெற முடியும் என்றாலும், முக்கியமாக பெண்களின் சௌபாக்கியம் அதிகரிக்க வேண்டியே இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதிலும் வயது முதிர்ந்த பெண்களே, இந்த விரத பூஜையைச் செய்வது வழக்கம். இந்த பூஜைக்கு முன்பு பகலில், 'யமுனா பூஜை' செய்ய வேண்டும். இந்த விரதத்தை சுமங்கலிகள் கடைபிடித்தால் சிவப்பு நிறப்புடைவையும், சுமங்கலிகள் அல்லாதார் கடைபிடித்தால் ஒன்பது கஜ வெள்ளைப் புடைவையில், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து தெளித்து விட்டுத் தானம் செய்வது வழக்கம். அதன் பின், நாயுருவி செடியின், 108 குச்சிகளால் பல் துலக்கி, நெல்லிப் பொடியை உடலில் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பல் துலக்கிய பிறகும் குளிப்பது அவசியம். பல் துலக்கும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:
'ஆயுர் பலம் யசோ' வர்ச்ச: ப்ரஜா: பசு' வஸூநி ச|
ப்ரஹ்ம ப்ரஜாம் ச மேதாஞ்ச தன்நோ தேஹி வனஸ்பதே||'
பிறகு, கணேச பூஜையைச் செய்து, அரிசி மாவில் எட்டு இதழ் கமலக் கோலம் வரைந்து, அதன் மேல் கலசத்தை நிறுத்தி, நெய் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.
அன்று மாலை ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும். பூஜையில் எட்டு கலசங்களை-சப்த ரிஷிகள் ஏழு பேர் மற்றும் அருந்ததி ஆகிய எட்டு பேர்களாக ஆவாஹணம் செய்து நிறுவி பூஜை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் நன்கு கற்ற ஏழு பண்டிதர்களை அழைத்து வந்து, அவர்களை சப்த ரிஷிகளாக பாவித்து பூஜையில் நிவேதனம் செய்தவற்றை அவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பூஜைக்குப் பின், எட்டு முறங்களில் அதிரசம், வடை, எள் உருண்டை, இட்லி, கொழுக்கட்டை, பழங்கள், வெற்றிலைப் பாக்கு தாம்பூலம், தேங்காய், தட்சணை முதலியவற்றை வைத்து எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். இதில் ஏழு முறங்களில் இவ்வாறு வைத்து விட்டு, எட்டாவது முறத்தில், மேற்கண்ட பொருட்களோடு ஒரு ரவிக்கைத் துண்டு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவற்றையும் வைக்க வேண்டும். ஏழு முறங்கள் சப்த ரிஷிகளை உத்தேசித்தும் எட்டாவது முறம் அருந்ததியை உத்தேசித்தும் தானம் செய்யப்படுவதாக ஐதீகம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் விரத தினத்தின்போது பால், பழம் ஆகியவற்றையே உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மறுநாள், சுருக்கமாகக் கலசங்களுக்கு தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதனம் செய்து, புனர் பூஜை செய்த பிறகு கலசங்களில் இருக்கும் நீரைக் கொண்டு விரதம் இருப்போர் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கலசங்களைத் தானம் செய்துவிட வேண்டும். அதன்பின் தச தானம் முதலியவற்றைச் செய்வது சிறப்பு. பூஜையில் அமர்பவர்கள் வயது முதிர்ந்த தம்பதிகளாக இருப்பது விசேஷம். அவர்களை பார்வதி பரமேஸ்வரனாக பாவித்து, பக்தியுடன் உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் மாலை மாற்றி, திருமாங்கல்ய தாரணம் செய்த பின் ஆரத்தி எடுத்து அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். அதன்பின் அனைவரும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். ரிஷி பஞ்சமி விரத பூஜை செய்பவர்களின் ஏழு ஜன்ம பாபங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இந்த விரத பூஜையைச் செய்ய இயலாதோர், இத்தினத்தில் சப்த ரிஷிகளை மனதால் நினைத்து வணங்குவதும் நலம் சேர்க்கும்.