கதம்பமாலை

கதம்பமாலை

தசாவதார திருமால் வழிபட்ட சிவசொரூபங்கள்!

காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவனை பூஜித்ததால் மச்சேஸ்வரர் எனும் பெயரில் அருள்பாலிக்கிறார். அதேபோல், காஞ்சியில் ஆமை வடிவில் பூஜித்த கச்சபேஸ்வரர் கோயில் புகழ் பெற்றது.

சென்னை, திருப்போரூர் அருகில் உள்ள செங்கண்மால் கிராமத்தில் அருள்பாலிக்கும் செங்கண்மாலீஸ்வரரை ஆதிவராஹமூர்த்தி வழிபட்டு பேறு பெற்றார். தாமல் (காஞ்சிபுரம்) கிராமத்திலும் வராஹமூர்த்தி வழிபட்ட வராகேஸ்வரரும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்பாலிக்கிறார்.

வாமன வடிவில் திருமால் ஈசனை பூஜித்த தலம் கடலூர் அருகில் திருமணிக்குழி என்றழைக்கப்படுகிறது. இத்தல ஈசன் வாமனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் அருகே வேகாமங்கலத்தில் பரசுராமர் பூஜித்த ஈசன் பரசுராமேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். கும்பகோணம் அருகில் உள்ள திரிலோக்கி திருத்தலமும் பரசுராமர் வழிபட்டதால் பரசுராமேஸ்வரம் என்றழைக்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் ராமபிரான் பூஜித்த ராமநாதர் அருள்பாலிக்கிறார்.

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை குழகர் கோயிலில் உள்ள ஈசனை பலராமர் வழிபட்டார்.

காஞ்சிபுரத்தில் கண்ணன் வழிபட்ட சிவஸ்தலம் கண்ணேசர் என்ற பெயரில் உள்ளது.

திருமால் சக்ராயுதம் வேண்டி ஈசனை தவம் செய்த தலம் காஞ்சிபுரம் அருகே திருமால்பேறு என்றழைக்கப்படுகிறது.

– சங்கரி வெங்கட், பெருங்களத்தூர்

கடன் தீர்க்கும் அங்காரக அஷ்ட புஷ்ப வழிபாடு!

னித வாழ்க்கையில் தேவகடன், பித்ருகடன், மானுஷகடன் ஆகிய மூன்று வகைக் கடன்களைத் தீர்க்க வேண்டியது அனைவருக்கும் அவசியம். அனைத்துவிதக் கடன் தொல்லைகளும் தீர நினைப்பவர்கள் கீழ்க்கண்ட விசேஷ கடன் நிவர்த்தி பிரார்த்தனைகளை கடைபிடிக்கலாம்.

வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் அதிகாலை நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அங்கே மணைப்பலகை ஒன்றை போட்டு, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றி வைத்து,

'ஓம் ரக்தமால்யாம் பரதரம் சக்திசூலகதாதரம்
சதுர்புஜம் மேஷவாகம் வரதாபய பாணினம்
ஓம் அங்காரக மகீபுத்ர பகவன் பக்தவத்ஸலக
நமோஸ்துதே மமசேஷம் ருணமாசு விமோசய!'

எனும் அங்காரக துதியைச் சொல்லி தியானிக்க வேண்டும். பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, எட்டுவித செம்மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து கற்பூர ஆரத்திக் காட்டி அங்காரகனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழி பிறக்கும். கொடுத்த கடனும் விரைவில் வந்துசேரும்.

– கே.ராஜலட்சுமி, குன்றத்தூர்

தேய்பிறை அஷ்டமி பலன்கள்!

ருடம் முழுக்க வரும் தமிழ் மாதங்களின் பன்னிரு தேய்பிறை அஷ்டமிகளுக்கும் மாதத்துக்கு ஒரு பெயர் உண்டு. அத்தனைக்கும் தனித்தனி வழிபாட்டுப் பலன்களும் உள்ளன. அந்த நாள் காலையில் சிவபெருமானையும் மாலை சூரிய அஸ்தமனமான நேரத்தில் பைரவரையும் தரிசிப்பதால் விசேஷப் பலன்களைப் பெறலாம். அவை:

சித்திரை சதாசிவ அஷ்டமி – மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும்.

வைகாசி பகவத அஷ்டமி – கடன் சுமை தீரும்.

ஆனி ஜயா அஷ்டமி – கல்வியில் மேன்மை அடையலாம்.

ஆடி நீலகண்ட அஷ்டமி – லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

ஆவணி ஸ்தாணு அஷ்டமி – நவக்கிரக தோஷம் விலகும்.

புரட்டாசி சம்புக அஷ்டமி – ஆயுள் விருத்தி உண்டாகும், பித்ரு தோஷம் விலகும்.

ஐப்பசி ஈஸ்வர அஷ்டமி – சகோதர பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

கார்த்திகை ருத்ர அஷ்டமி – தன வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்.

மார்கழி சங்கர அஷ்டமி – தொழில் அபிவிருத்தி அடையும்.

தை தேவதா அஷ்டமி – மன பயம் விலகும், உயர் பதவி கிடைக்கும்.

மாசி மகேஸ்வர அஷ்டமி – போட்டிகளில் வெற்றி பெறலாம்.

பங்குனி திரியம்பக அஷ்டமி – திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.

– வே.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

சரஸ்வதி தேவியின் விநோதக் கோலங்கள்!

ர்நாடக மாநிலம், பேலூரில் அமைந்த சென்ன கேசவர் ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்டு தரிசிக்கலாம்.

சிருங்கேரியில் உள்ள சரஸ்வதி கோயிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கிற கோலத்தில் சரஸ்வதி தேவியை தரிசனம் செய்யலாம்.

வேதாரண்யம், திருக்கோடிக்காவல் ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை கண்டு வணங்கலாம்.

நாகப்பட்டினம் மாவட்டம், கடலங்குடியில் உள்ள சிவன் கோயிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.

வாணியம்பாடி தலத்தில் சரஸ்வதி தேவி கிழக்கு நோக்கி தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில், மடியில் வீணையுடன் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடித்து ஒய்யாரமாய் வீற்றிருக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் எட்டுக் கரங்கள் கொண்ட சரஸ்வதியை, 'சியாமளா' என்று போற்றுவர்.

– எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com