கேள்வி நேரம்

கேள்வி நேரம்

ஹஸ்த யாகம் என்பது என்ன? அதை எப்படிச் செய்வது?

– செந்தில் விநாயகம், கன்னியாகுமரி

ஹஸ்தம் என்பது கை. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யும்போது பெண்கள் கைவேலையாக இருக்கிறேன் என்று சொல்வது போல, ஆண்டவன் முன் செய்யக்கூடிய எளிய அக்னி பூஜையை ஹஸ்த யாகம் என்று சொல்வார்கள். பெண்கள் தங்களுக்கு ஏதும் ஆண்டவனிடம் கோரிக்கை இருந்தால், அது நிறைவேற வேண்டி, வீட்டு பூஜை அறையில் இந்த எளிய வழிபாட்டைச் செய்யலாம்.

உலகில் அக்னி ஹோத்ரம் என்ற எளிய யக்ஞம் வெளியானபோது போபால் நகரத்தில் விஷ வாயுக் கசிவினால் அங்கு செய்த அக்னி ஹோத்ரம் புகை அனைவரையும் காப்பாற்றியதாக அங்கிருந்த விஞ்ஞானிகளே கண்டு ஆச்சரியப்பட்டனர். யாகக் குச்சிகள் ஒரு சாண் அளவுள்ளதை தம்ளர் போன்ற டப்பாவில் செருகி யாகக் கூட்டுப் பொருள் கலவையுடன் நவதான்யங்களும் சேர்த்து அதனுள் சிறிது தூவி விட்டு, நாம் வணங்க வேண்டிய தெய்வத்தை நினைத்து அதில் கற்பூரம் ஏற்றிவைத்து, நெய்யை ஸ்பூனில் எடுத்து சிறிது சிறிதாக சேர்த்துச் செய்வது ஹஸ்த யாகம் ஆகும். காஞ்சி மகா பெரியவர்தான் இம்முறையை மக்களுக்கு செய்துகாட்டினார். பஸ்மம் ஆனதும் அதைக் கலந்து விபூதி போல இட்டுக்கொள்ள நலம் தரும்.

தூம கேது – விநாயகப் பெருமானுக்கு உரிய இப்பெயரின் தத்துவம் என்ன?

– செ.கனகவல்லி, திருப்பத்தூர்

விநாயகரின் பன்னிரு நாமங்களில் எட்டாவது பெயர்தான் தூமகேது வடிவம். தூமம் என்றால் ராகு தேவனையும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவையும் குறிக்கும் சொல். தூமராசன் என்ற அரக்கன் விநாயகர் சிறுபிள்ளை வடிவத்தில் தனியாக நின்றபோது, அவரைப் புகை வடிவத்தில் சூழ்ந்து அழிக்கத் திட்டமிட்டு நெருங்கினான். அதே நேரத்தில் அவரும் புகையாக மாறி அசுரனைச் சுற்றி வளைத்து சம்ஹாரம் செய்தார் என்பது புராணச் செய்தி.

ராகு – கேது தோஷங்கள் நீங்க இந்த விசேஷ மூர்த்தியை செவ்வாய்க்கிழமைகளில் வழிபடலாம். செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் வடபாகத்தில் அமைந்திருக்கும் மணிகர்ணிகா புஷ்கரணி என்னும் விசேஷ தீர்த்தக்கரையில் ராஜ விருட்சம் என்ற அரச மரத்தின் கீழ் கிழக்கு நோக்கியவாறு வேத விமானக் கருவறையில் கோயில் கொண்டுள்ளார். இந்த மூர்த்தியைக் காண ராகு, கேது தோஷத்தால் திருமணப் பேறு தடையாகும் பெண்கள், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் தரிசனம் செய்வர். அருகில் இணைந்த நாகர்கள் வடிவில் சப்த மாதர்கள் கோயில் கொண்டுள்ளனர். நாம சங்கீர்த்தன உலகில் புகழ் பெற்று விளங்கிய ஜெயதேவ சுவாமிகள் தான் பாடிய சிவாஷ்டபதியில் தூமகேது கணபதி வடிவத்தைப் பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் பூக்களை எவ்வளவு காலம் வைத்துக்கொள்ளலாம்?

– ஏ.மணிமேகலை, திருச்சி

மல்லிகைப்பூ மன அமைதியையும், கண்களுக்குக் குளிர்ச்சியையும் தரும். ரோஜாபூ தலைச்சுற்றல், கண் நோய்களைக் குணப்படுத்தும். கனகாம்பரம் தலைவலி, தலை பாரத்தை சரி செய்யும். செவ்வரளி மலர் மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை கொண்டது. தலையில் முடி உதிர்வதைத் தடுக்கும்.

முல்லையை 18 மணி நேரமும், மல்லிகையை அரை நாள் வரையிலும், செண்பக மலரை 15 நாட்கள் வரையிலும், ரோஜாவை 2 தினங்கள் வரையிலும், தாழம்பூவை 5 நாட்களும், அல்லி மலரை 3 நாட்களும், சந்தன மலரை 1 நாள் மட்டுமே தலையில் சூடிக் கொள்ளலாம். மந்தாரை, பாதிரி, மாசி மலர்களை வாசனை இருக்கும் வரை சூடிக் கொள்ளலாம். செம்பருத்தியை அரைத்துத்தான் தேய்த்துக்கொள்ள முடியும். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து, முடி கொட்டாமல் பாதுகாக்கப்படும்.

இறைவனுக்கு அணிவித்த மலர்களைத் தலையில் சூடுவதால் அதற்கு ஆற்றல் கூடுகிறது. உலகில் மொத்தம் 38 ஆயிரம் கோடி மலர்கள் உள்ளன. அவற்றி்ல் ஆயிரம் கோடி மலர்களே கண்களுக்குத் தெரிகின்றன. 500 கோடி மலர்களே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.

கோ பூஜை செய்யும்போது எளிதாகச் சொல்லக்கூடிய சுலோகம் ஒன்றை கூறுங்களேன்?

– மா.தங்கவேல், சிவகாசி

முதலில் கோமாதாவைச் சுற்றி வந்து பதினாறு இடங்களில் பொட்டு வைத்து மலர் சூட்ட வேண்டும். மீண்டும் கைகளில் வாசமுள்ள மலர்களை எடுத்துக்கொண்டு,

'நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்'

எனும் சுலோகத்தைக் கூறி, தன்னையே சுற்றிக்கொண்டு ஆத்ம பிரதட்சிணம் செய்து மலரை அதன் கொம்புகளின் மேல் போட்டு சுற்றி வந்து மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும். பிறகு கோ மாதாவுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, ஒரு கைப்பிடி அரிசி, வெல்லம் தூள் செய்து கொடுத்து வணங்குவது நலம் பெருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com