மஹத்துவமான மகாளயபட்சம்!

மஹத்துவமான மகாளயபட்சம்!

– ரேவதி பாலு

கா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது. அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் இந்த பூமியில் வந்து இறங்கும் நாட்களே மகாளயபட்சம் என்று கூறப்படுகிறது. பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவைக் குறிப்பதாகும். மகாளயபட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்குப் பின்னர் வரும் 15 நாட்களைக் குறிக்கும். புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி, (சில வருடங்களில் ஆவணி மாதம் பௌர்ணமி அடுத்த பிரதமை தொடங்கி) பதினைந்து நாட்கள் முன்னோர்களை வரவேற்கும் காலமாக மகாளயபட்சம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்தக் காலத்தில் முன்னோர்கள் நம்மைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். இந்த மகாளயபட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக பூமிக்கு வருகிறார்கள் என்று கருட புராணம் கூறுகிறது. இந்த நாட்களில் பித்ருக்களுக்கான ஸ்ராத்தம், தர்ப்பணம் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையே ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது என்பதும் அது பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தைச் சென்றடைகிறது என்பதும் காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.  தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாகப் பித்ருக்களிடம் சேர்த்து விடுகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.

மகாளய பட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ருக்கள் எமதர்மனிடம் விடைபெற்றுக் கொண்டு தங்கள் குடும்பத்தினரைக் காண வருகிறார்கள். அப்போது முறைப்படி தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் இறைத்தால் அவர்கள் தாகமும் பசியும் தீர்ந்து திருப்தியோடு மீண்டும் தங்கள் லோகத்திற்குச் செல்வார்கள். அப்படிப் போகும்போது தங்கள் வாரிசுகளை வாழ்த்தி வரங்கள் கொடுத்து விட்டுச் செல்வார்களாம்.

ந்த மகாளயபட்ச காலத்தில் செய்யப்படும் அனைத்து தான தர்மங்களுக்கும் பித்ருக்களின் ஆசியும் சேர்ந்தே கிடைக்குமாம். இந்தப் பதினைந்து நாட்களிலும் முன்னோர்களை வழிபட்ட பின்பே நித்திய பூஜை புனஸ்காரங்களைச் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், தங்கள் தந்தையின் திதி தினத்தன்றாவது மாளயபட்சத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நாம் செய்யும் எந்தக் காரியத்திற்கும், உதாரணமாக ஒரு கோயிலுக்குப் போவது, விளக்கேற்றுவது, தான தர்மங்கள் செய்வது போன்ற எந்த ஒரு காரியத்திற்கும் தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு பித்ருக்களின் ஆசிர்வாதமும் சேர்ந்தே கிடைக்கிறது.

சுப காரியத் தடை, வாரிசு இல்லாதது, தீராத நோய், திடீர் விபத்துகள், துர் மரணங்கள் இவை எல்லாவற்றிற்கும் பித்ரு தோஷமும் ஒரு முக்கியக் காரணமாகும்.  இந்த மகாளய புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் நடைபெறத் தொடங்கும்.

'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானேன்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'
– என்கிறார் திருவள்ளுவர்.

'வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும் ஆகிய இல்வாழ்க்கை மேற்கொண்டவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற ஒருவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

மகாளயபட்ச திதிகளில் எந்தெந்த நாளில் திதி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என அறிந்துகொள்வோம்!

பிரதமை – செல்வ செழிப்பு, துவிதியை – வாரிசு ஏற்படுதல், திரிதியை – நல்ல இல்வாழ்க்கை, சதுர்த்தி – எதிரிகள் தொல்லை விலகும், பஞ்சமி – பொருட்கள் சேருதல், சஷ்டி – செல்வாக்கு, மதிப்பு கூடும், சப்தமி – பெரியோர்கள் ஆசி, அஷ்டமி – நல்லறிவு வளரும், நவமி – நல்ல வாழ்க்கைத்துணை அமையும், தசமி – எல்லா விஷயங்களிலும் தடைகள் நீங்கும், ஏகாதசி – கல்வி, கலைகளில் சிறப்பு,
துவாதசி – விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும், திரயோதசி – நன்மக்கள் பேறு, சதுர்த்தசி – கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும், அமாவாசை – வயதில் மூத்தவர்கள், தேவர்கள், ரிஷிகளின் ஆசி கிடைக்கும்.

தை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவற்றை விடவும் திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை. மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று மட்டும் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம்.
அதேபோல, அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வருடத்தில் ஒருமுறை ஸ்ராத்தம் செய்வோம். ஆனால், மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்கிறோம். இதனாலும் மகாளய அமாவாசையின் மகிமை கூடுகிறது.

மகாளய அமாவாசைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு புரட்டாசி அமாவாசையன்று ஒருவர் தர்ப்பணம் செய்து அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்த புண்ணியம் அவருக்குக் கிடைக்கும். அந்த நாளில் நம் குலத்தில் உதித்து மறைந்த முன்னோர்களுக்கு மட்டுமின்றி; காருண்ய பித்ருக்கள் எனப்படும் மற்றவர்களுக்காகவும் தர்ப்பணம் செய்கிறோம். அந்த நாளில் செய்யும் வழிபாடுகள் காருண்ய பித்ருக்களையும் திருப்திப்படுத்துகிறது என புராணங்கள் கூறுகின்றன.

காருண்ய பித்ருக்கள் என்பவர், நமது வாழ்நாளில் நாம் எத்தனையோ பேரோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப்போம். ஆசிரியர்கள், குருமார்கள், அக்கம் பக்கத்தவர், உடன் வேலை செய்பவர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரோடு நெருக்கமாகப் பழகி இருப்போம். மாதாமாதம் வரும் சாதாரண அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணமானது நம் குலத்தில் உதித்த ரத்த சம்பந்தப்பட்ட முன்னோரை மட்டுமே போய்ச் சேரும். ஆனால், மகாளய அமாவாசையின்போது செய்யப்படும் படையல், தான, தர்மம் போன்றவை நமக்கு நெருக்கமானவர்களாக இருந்து இப்போது இறைவனடி சேர்ந்து விட்ட அனைவரையும் சென்று சேரும் என்று நம்பப்படுகிறது. இவர்களே காருண்ய பித்ருக்கள் எனப்படுகிறார்கள். நதிக்கரையிலோ, கடற்கரையிலோ முன்னோரை நினைத்து சிறிது எள்ளும் தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னதானம், வஸ்திர தானம், உணவு வகைகள் என்று எதை அவர்களை நினைத்து தானம் செய்தாலும் மிக்க நன்மை பயக்கும். அவர்களும் மனம் குளிர்ந்து நம்மை வாழ்த்துவார்கள்.

முறையாக தர்ப்பணம் செய்ய இயலாத வயதானவர்கள், சூரிய பகவானை வணங்கி கிழக்குப் பக்கம் நின்று வலது கையில் எள்ளும் நீரும் எடுத்து சூரியனைப் பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும்.  இவ்வாறு விட்ட நீரை பின்பு கடல், ஆறு, ஏரி, குளத்தில் சேர்த்து விடலாம்.

காளய அமாவாசையன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிமிதமான பித்ருக்களின் ஆசி வெளிப்படுகிறது. நாம் அளிக்கும் எள்ளையும் நீரையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடும். இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், காவிரிக்கரை முதலிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வம்சம் தழைத்தோங்கும். முன்வினை துயர்கள் நீங்கி, பித்ருக்களின் அபரிமிதமான ஆசியால் வாழ்வில் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும்.

பீகார் மாநிலத்திலுள்ள கயா புண்ய தலம் லட்சக்கணக்கான இந்துக்களால் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. பித்ரு வழிபாட்டுக்கென்றே செல்பவர்கள் நிறைய பேர் உண்டு. பித்ருக்களுக்கு ஸ்ராத்தம் செய்பவர்கள், கயாவில் விஷ்ணு பாதம் கோயிலில் முன்னோர்களுக்கு பிண்டம் போட்டு வழிபட்டு, பிறகு பல்குனி நதிக்கரையில் அக்னி வளர்த்து, சிராத்தம் செய்து கடைசியில் அட்சய வடத்திற்குச் சென்று அங்கே வாசம் செய்யும் பித்ருக்களுக்கு பிண்டம் போட வேண்டும்.

பீகார் மாநிலத்தில் மகாளய அமாவாசை அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. மகாளயபட்ச தர்ப்பணம், மகாளய அமாவாசை பித்ரு தின வழிபாடு ஆகியவற்றுக்கென்றே இந்தியா முழுவதிலுமிருந்தும் கயா செல்பவர்கள் உண்டு. அன்று பித்ரு வழிபாடு செய்பவர்கள் போடும் பிண்டங்கள் அந்த ஊர் முழுவதும் இறைந்து கிடக்குமாம். அப்படியென்றால் எவ்வளவு ஆயிரக்கணக்கில் ஜனங்கள் அன்றைய தினம் அங்கே பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுவார்கள் என்று நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.

நாமும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று வரும் மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபட்டு பயனடைவோம். பித்ருக்கள் என்றாலே வரங்களும் வாழ்த்துக்களும்தானே?

Related Stories

No stories found.
Kalki Online
kalkionline.com